கொரோனா தொற்று தொடர்பில், அடுத்த கட்டத்தை அணுகுவது எப்படி?

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் பாதிப்பை நன்கு உணர்ந்த நிலையில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு பாடசாலைகளை மூடியுள்ளது.

நாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு முன்னமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க இலங்கையில் இதுவரை 2617  பேருக்கு கொரோளா தொற்று உறுதியாகி இருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் 106 கொரோனா தொற்றாளர்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஈரானில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இருவரும் பெலாரஸிலிருந்து வருகை தந்த ஐவருமாக  ஏழு பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்றையதினம் கண்டறியப்பட்டுள்ளது.

 வைரஸ் தொற்றின் முதலாவது அலையை அனைவரும் வெற்றிகொண்ட நிலையில்  தங்கள் அலுவலகங்கள், வேலைத்தளங்களுக்கு சென்று  மீண்டும் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்த நிலையில்  கொரோனாவின் இரண்டாவது அலை தனது கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

மேலும் வைரஸ் தாக்கத்தின் பாரதூரத்தை உணர்ந்து பொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரத்தை பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நமது அயல் நாடான இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் கட்டுமீறி செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானமை மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

உலகின் மேல்தட்டு வர்க்கத்தினர் இவ்வாறு வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் நாம் எந்த அளவு என சாதாரண மக்கள் ஏங்குகின்றனர்.  

இவை அனைத்திற்கும் ஒரே வழி நாம் ஆரம்பத்தில் எவ்வாறு எச்சரிக்கையாக இருந்தோமோ அதனை விட பன்மடங்கு எச்சரிக்கையாக இருப்பதே ஆகும். சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் என்பன வெகுவாக குறைந்து வருவதால் வைரஸ் தொற்றும் சமூக பரவலும் அதிகரித்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

எனவே மீண்டும் முன்னைய நிலைக்குச் சென்று விடாது இருக்கவேண்டுமானால் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். வீரகேசரி பத்திரிக்கை

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter