போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில், பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் ( எஸ்.ரி.எப்.) தொடர்புகள் உள்ளமை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சட் மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் கீழ் சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் டி திஸாநாயக்க தலமையிலான நான்கு பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின.
தற்போதைய விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அதிகாரிகள், நாட்டின் பல்வேறு இடங்களில் கடமையாற்றிய நிலையிலேயே, இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
‘ இந்த அதிரடிப் படை வீரர்கள் தொடர்ச்சியாக, தர்போது கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து சுற்றி வளைப்புகளில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டில் பல பகுதிகளில் இருந்த போதும் உரிய கடமைக்கான அனுமதியின்றியே அவர்கள் அவற்றில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் எஸ்.ரி.எப். அதிகாரிகளுக்கும் தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போதும் சி.ஐ.டி.யின் தடுப்புக்காவலில் உள்ள படகு ‘ ஸ்கீப்பர் ‘ ஒருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் எஸ்.ரி.எப்.இனரின் தொடர்பு குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என வீரகேசரியிடம் பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பொலிஸ் உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
குறித்த படகு ஸ்கீப்பர் உள்ளிட்ட 3 சிவிலியன்களும் 5 பொலிஸாரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த படகு ஸ்கீப்பர், கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து தென் ஆழ் கடலில் இருந்து போதைப் பொருளினை பலபிட்டிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பாதுகாப்பு இல்லத்துக்கு கொண்டுவர உதவியவர் எனவும் அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூப வரை வழங்கப்பட்டுள்ளமையும் சி.ஐ.டி. விசாரணைகளில் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அதிரடிப் படையினரின் தொடர்புகள் குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையிலேயே கடந்த 2019 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி மாலை சுமார் 353.388 கோடி ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம் ஹெரோயின் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அதிரடிப் படையினரின் இணை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் இந்த பி.என்.பீ மற்றும் அதிரடிப் படையினரின் தொடர்பு உள்ளமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த போதைப் பொருளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக அங்கு கொண்டு வந்த இரு சந்தேக நபர்களையும், அவர்கள் செலுத்தி வந்த இரு வேன்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அப்போது பொலிஸார் ஊடகங்களிடம் கூரிய தகவல்கள் பிரகாரம், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணை ஒன்றில் சிறப்பு தகவல் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தகவல்கள் மற்றும் மேலதிகமாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள நவீன சந்தை கட்டிடத் தொகுதியொன்றின் வாகன தரிப்பிடத்தில் விஷேட சுற்றி வலைப்பை கடந்த 2019 பெப்ரவரி 23 ஆம் திகதி முன்னெடுத்தனர்.
இதன்போது அந்த வாகன தரிப்பிடத்துக்கு வந்த 3511, 7416 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரு வேன்கள் தொடர்பில் பொலிஸார் சுற்றி வலைப்பை முன்னெடுத்தனர். இதன்போதே அந்த வேன்களில் இருந்து போதைப் பொருளும் அதனை செலுத்தி வந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரு வேன்களில் பாரிய பொதிகள் தலா 5 வீதம் 10 பொதிகளில் இந்த ஹெரோயின் இருந்தது. அந்த 10 பொதிகளில் 272 சிறிய பொதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஒரு வேனில் 5 பொதிகளில் 163 கிலோ 356 கிராம் ஹெரோயின் இருந்தது. மற்றைய வேனில் 131 கிலோ 134 கிராம் ஹெரோயின் இருந்தது. இந்த பொதிகளில் இருந்த ஹெரோயினின் நிறை 294 கிலோ 490 கிராமாகும்.
கைதான இருவரில் ஒருவர் 43 வயதான பாணந்துறை- வழைத்தோட்டம் – சரிக்காமுல்லையைச் சேர்ந்த மொஹம்மட் பசீர் மொஹம்மட் அஜ்மீர் ஆவார். மற்றையவர் 32 வயதான பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் ரிழா அஹமட் ருஸ்னி என்பவராவார். இவர்கள் இருவரும் ஏழு நாள் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் நேற்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டனர்.
அப்போது அதுவே இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக தொகை ஹெரோயின் ஆக பதிவானது. அந்த விவகாரத்தில் தற்போது டுபாயில் மறைந்துள்ள கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவனும் அவனுடன் இருப்பதாக நம்பப்படும் கிருளப்பனை மொறில், அஹமட் ஹுசைன் எனும் பங்களாதேஷ் பிரஜைகள் உள்ளதாக அப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்திருந்தது.
இந் நிலையில் அவர்களை குறித்த ஹெரோயின் விவகாரத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சந்தேக நபர்களாக பெயரிட்ட நிலையில், அவர்களைக் கைது செய்ய கோட்டை பதில் நீதிவான் தீமனி பெத்தவல சர்வதேச பிடியாணையைப் பிறப்பித்தார்.
இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பங்களாதேஷ் பிரஜையான சுமோன் சிக் அஹமட் ஹுசைன், கிருளப்பனை மொறில் எனப்படும் என்டனி மைக்கல் மொறில், மொஹம்மட் சிராஜ் பாசிக், கொஸ்கொட சுஜீ எனப்படும் ஜயமுனி ஜுஜீவ டி சில்வா, மகீம் அப்துல் ரஹீம் ஆகியோரே இந்த ஹெரோயின் விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களாவர்.’
இந்த நிலையில் சி.ஐ.டி.யின் தற்போதைய விசாரணைகளில், இந்த சுற்றிவலைப்பானது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும், அதிரடிப் படையின் சிலரும் இனைந்து முன்னெடுத்த திட்டமிட்ட போலி சுற்றி வலைப்பு என்பது தெரியவந்துள்ளது.
ஆழ் கடலில் இருந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கும்பலினாலேயே அந்த ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வெலே சுதா எனும் தற்போது மரண தண்டனை கைதியின் திட்டம் பிரகாரம் விற்கப்பட்டு, அதனை எடுத்து செல்ல வந்த போது, போதைப் பிரிவுதடுப்புப் பிரிவினரே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.
குறித்த சுற்றி வலைப்புக்காக ஜனாதிபதியின் பாராட்டும், பொலிஸ் மா அதிபரின் பாராட்டுடன் கூடிய பணப்பரிசும் குறித்த பி.என்.பீ. மற்றும் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது ஒரு திட்டமிடப்பட்ட போலி சுறு்றி வலைப்பு என்பதும், அந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ் கும்பலே இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
( எம்.எப்.எம்.பஸீர்) வீரகேசரி பத்திரிக்கை