அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59 ஆகும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் ஒருவராக பணியாற்றும் ஜோன்ஸ் உயிரிழந்த தருணம் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
டீன் ஜோன்ஸ் ஒரு தீவிர கிரிக்கெட் ஆய்வாளராகவும் வார்ணனையாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டித் தொடரின் வர்ணனைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபராக அறியப்பட்டுள்ள நிலையில், அவரது நிகழ்ச்சி ‘பேராசிரியர் டீனோ’ என்டிடிவியில் மிகவும் பிரபலமாக இருந்தது.
அவர் உலகின் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார், மேலும் அவர் நேர்மையானவராக பார்வையாளர்களுக்கு அறியப்பட்டார்.
மெல்போர்னில் பிறந்த டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.55 சராசரியாக 3631 ஓட்டங்களை எடுத்தார். அவரது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக 216 ஓட்டங்களை பெற்றுள்ள ஜோன்ஸ் 11 சதங்களை அடித்துள்ளார்.
இதேவேளை, ஆலன் போர்டர் அணியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.
ஜோன்ஸ் 164 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி ஏழு சதங்கள் மற்றும் 46 அரைசதங்களின் உதவியுடன் 6068 ஓட்டங்களை பெற்றுள்ளார்.