சுகாதார அமைச்சின் அனுமதியின்றி போரா சமூக தலைவர் உட்பட 62 பேர் நாட்டுக்குள் அனுமதி – வெளிவிவகார அமைச்சை சாடுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சின் எவ்விதமான அனுமதியும் பெறாமல் வெளிவிவகார அமைச்சின் ஊடாக போரா சமூகத்தின் தலைவர் உள்ளிட்ட 62 பேர் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், கொவிட் – 19 வைரஸ் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றி சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டல்களை ஏனைய அமைச்சுகளின் குறிப்பிட்ட உயரதிகாரிகள் மீறி பயணிகள் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ௮ரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சேனல் பர்ணாந்து சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச். முனசிங்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.,
“வெளிவிவகார அமைச்சு சுகாதார அமைச்சின் எவ்வித அனுமதியையும் பெற்றுக் கொள்ளாது போரா சமூகத்தினது தலைவரின் தலைமையில் 62 பேர் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் 54 பேர் மும்பாயிலிருந்தும் 8 பேர் டுபாயிலிருந்தும் இன்னும் சில தினங்களில் இலங்கை வரவுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “கொவிட் – 19 நிலைமை காரணமாக வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் தனிமைப்படுத்தல் ஆணையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் 8ழ் தங்க வைக்கப்பட வேண்டும்.
அத்தோடு எவராவது வெளியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததும் உடனடியாக PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு தனிமைப்படுத்தலின் பின்பு இறுதியிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் சுகாதார அமைச்சு இந்த வழிகாட்டல்களை ஏற்கனவே வழங்கியுள்ளது. வழிகாட்டல்கள் நிபுணர் குழுவொன்றினால் 09.07.2020ஆம் திகதி தயாரிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக சுகாதார அமைச்சின் இந்த வழிகாட்டல்கள் உயர் அதிகாரிகளினால் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக ஏனைய அமைச்சுகளின் உயரதிகாரிகள் வழி காட்டல்களைப் பேணாது பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமத வழங்கியுள்ளனர். இவ்வாறு சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளதாகவும். இதனால் பொது மக்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் ௮ரச வைத்திய அஇகாரிகள் சங்கத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தூதுவராலய பணியாளர்கள், ஐ. நா. அமைப்பினர் என்போரும் கட்டாயமாக தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டார். இந்த அனுமதியினை வெளிவிவகார அமைச்சு வழங்கியது. இது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மீறிய செயலாகும்.
மாலைத்தீவு மற்றும் ஸீசேல்ஸ் நாட்டின் நோயாளிகள் இலங்கை வந்து தனியார் வைத்தியசாலைகளில் அனுமதி பெற்று சிகிச்சை பெறுவதற்கு அனுமத வழங்கப்பட்டது. இதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை.
எனவே உங்களது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்பாக சுகாதார அமைச்சு தனிமைப்படுத்தல் தொடர்பாக வழங்கியுள்ள கட்டளைகளையும் வழிகாட்டல்களையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கும் படி வேண்டிக்கொள்கிறேன். உங்களது ஒத்துழைப்பு கொவிட் – 19 இலங்கையில் நிலையான கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.