குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வகை செய்யும் குடியேற்ற மசோதாவுக்கு பாராளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து 8 இலட்சம் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தின் தற்போதைய மக்கள்தொகை 43 இலட்சம். இதில் குவைத்தைச் சேர்ந்தவர்கள் 13 இலட்சம் என்றால், மீதி 30 இலட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில், இந்தியர்களின் எண்ணிக்கை 14.5 இலட்சம். புதிய மசோதாவின்படி, குவைத்தின் மக்கள்தொகையில் 15 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் இருக்கக் கூடாது. அதன் அடிப்படையில், சுமார் 8 இலட்சம் இந்தியர்கள் குவைத்தைவிட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக முன்னணி செய்தித்தாளான கல்ஃப் நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலையில் சரிவு, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, குவைத்தில் வாழும் வெளிநாட்டினருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, வெளிநாட்டவர் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை பிரதமர் ஷேக் ஷபா அல் காலித் அல் ஷபா கடந்த மாதம் முன்மொழிந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்ற அவைத் தலைவர் மர்செளக் அல்-கனீம், குவைத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வகை செய்யும் விரிவான சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குவைத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டவர். இதுதான் குவைத்தின் உண்மையான பிரச்னை. 33 இலட்சம் வெளிநாட்டவர்களிலும் 13 இலட்சம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாகவோ அல்லது படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களாக மட்டுமோ உள்ளனர். குவைத் மக்களுக்கு இவர்கள் தேவையில்லை. திறனற்ற தொழிலாளர்களைத் தவிர்த்து, மருத்துவர்கள், திறமையான மனித சக்தியை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நான் புரிந்துகொள்கிறேன். புதிய மசோதாவின்படி, நிகழாண்டு 70 சதவீதம் வெளிநாட்டவர்களும், அடுத்த ஆண்டு 65 சதவீதம் பேரும் குறைக்கப்படுவர் என தெரிவித்தார்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, குவைத் அரசுப் பணியில் 28 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் செவிலியர்கள், பொறியாளர்கள், தேசிய எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அடங்குவர். சிலர் விஞ்ஞானிகளாகவும் உள்ளனர். சுமார் 5.23 இலட்சம் பேர் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, 60 ஆயிரம் இந்திய மாணவர்கள் துபையில் உள்ள 23 இந்திய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
குவைத் பாராளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ள மசோதாவானது, விரிவான திட்டத்தைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான எண்ணிக்கை விகிதத்தைப் போல, பிற நாட்டவர்களுக்கும் விகிதம் வகுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் பெறப்படுவதில் சிறந்த ஆதாரமாக குவைத் திகழ்கிறது. அங்கு பணியாற்றும் இந்தியர்கள் மூலம் 2018 ஆம் ஆண்டில் 4.8 பில்லியன் டொலர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.