கிராமப் புறங்களில் பேச்சு வழக்கில், ‘எல்லாம் தெரியும்; ஆனால் ஒன்றும் தெரியாது’ என்று சொல்வார்கள். முஸ்லிம் அரசியல் விடயத்திலும், முஸ்லிம் பொதுமக்கள் நடந்து கொள்கின்ற போக்கு, இவ்விதமே உள்ளது.
முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தமிழ், சிங்கள மக்களுக்கான அரசியல் விடயத்திலும் அநேக சந்தர்ப்பங்களில், அந்தந்தச் சமூகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, ஒன்றும் தெரியாதது போல, மடைத்தனமாகச் செயற்படுவதைக் காண முடிகின்றது.
கட்சித் தலைவர்கள் உட்பட, ஏனைய அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகள், தவறாகச் செயற்படுகின்றார்கள் என்றும் அவர்கள், சமூக நலனுக்கு முன்னுரிமை அளிப்பது கிடையாது என்றும், தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர்களாகிய பொதுமக்கள் நச்சரிப்பதும் விமர்சிப்பதும் வழமை. ஆனால், மீண்டும் மீண்டும் அதே ஆட்களையோ, அதே கட்சித் தலைவர்கள் அறிமுகப்படுத்தும் அதுபோன்ற புதுமுக வேட்பாளர்களையோ தான் தெரிவு செய்து அனுப்புகின்ற அபூர்வம், இலங்கை போன்ற நாடுகளில் தொடர்ந்தும் நடக்கின்றது.
நமது நாட்டில், முஸ்லிம் அரசியலில் இந்தப் போக்கை வெகுவாகக் காணலாம். ‘பொருத்தமற்றவர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு, அவர்களது தவறுகளை உணர்த்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், அவர்களை மீண்டும் நாடாளுமன்றுக்கு, மாகாண சபைகளுக்கு மக்கள் அனுப்புகின்றனர். அவர்களும் அதே தவறை, தொடர்ச்சியாகச் செய்வதுடன், அதே சிந்தனையுள்ள பேர்வழிகள், புதிதாக முஸ்லிம் அரசியலுக்குள் வருவதற்கும் வழி சமைத்துக் கொடுத்து விடுகிறார்கள்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலொன்றை எதிர்நோக்கியுள்ள இக்காலகட்டத்தில், இந்தப் போக்குப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது. தலைவர்கள், எம்.பிக்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், ஏமாற்று வித்தைகள், சமூகத் துரோகங்களை மீள நினைவுபடுத்தி, இனிமேலாவது சரியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது.
இதன் அர்த்தம், பழையவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதோ, புதுமுக வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதோ அல்ல. மாறாக, தவறு செய்பவர்களைத் திரும்பத் திரும்பத் தெரிவு செய்யக்கூடாது என்பதும், பழையவரோ புதியவரோ பொருத்தமான பண்புகளைக் கொண்ட பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும்.
அரசியல்வாதிகள் மக்களின் மீட்பர்கள் போலத் தங்களை காட்டிக் கொண்டாலும், அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்களுக்கும் தனிப்பட்ட, அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. தமது குடும்பத்தின் மேம்பாடு, வருமானம், பதவிகள் உள்ளடங்கலாகப் பல விதமான எதிர்பார்ப்புகள் நிறையவே இருப்பதில் தப்பேதும் இல்லை.
ஆனால், சமூக சிந்தனை, சமூக நலன் பற்றிய அக்கறையை விட, சுயநலம் எந்தத் தருணத்திலும் மேலோங்கி விடக் கூடாது. அவ்வாறான தருணத்திலேயே அரசியல் என்பது, வியாபாரம் ஆக மாறத் தொடங்குகின்றது எனலாம்.
மறுபுறத்தில், அரசியல் என்பது ஒரு சிக்கலானதும் சிரமமானதுமான பணி ஆகும். மனிதர்கள் என்ற அடிப்படையில், அரசியல்வாதிகளும் தவறுகள் செய்வதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். இவற்றை அடிப்படை அம்சங்களாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியான சூழலில், பொதுவாக அரசியல்வாதிகள் மீது மக்களும் ஊடகங்களும் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
முக்கியமாக, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மக்களை மறந்து அரசியல் செய்கின்றமை, பதவிக்கும் பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றமை, மக்களின் தலையில் ‘மிளகாய் அரைக்கும்’ போக்குகள் பற்றியதான குறுக்குவெட்டுப் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. இது அவசியமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும்.
ஆனால், முஸ்லிம் அரசியல், முஸ்லிம் சமூகத்தை முதன்மைப்படுத்திய அரசியலாக இல்லாமல் போனமைக்கு, முழுமொத்தக் காரணகர்த்தாக்கள் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மட்டும்தானா என்ற கேள்வி ஒன்று, இவ்விடத்தில் எழுகின்றது. இது, எல்லாச் சமூகங்களின் அரசியலுக்குமான விடைதேடும் கேள்வி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
பிரதிநிதித்துவ அரசியல் முறைமையில், முஸ்லிம்களுக்கான அரசியலைச் செய்வதற்காகவே, முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்புகின்றனர். எனவே, அது அவர்களாக மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட பணி. வலுக்கட்டாயமாக எம்.பியாக, அமைச்சராக, கட்சித் தலைவராக, மாகாண சபை உறுப்பினராக யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே, அந்த வேலையை, அவர்கள் சரியாகச் செய்யாமல் தவறு விட்டால், அதில் பெரும் பங்கை அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.
ஆயினும், அரசியல்வாதிகளைத் தெரிவு செய்து அனுப்புகின்றவர்கள் மக்கள்தான். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, 196 எம்.பிக்களை மக்களே, தமது வாக்குகளின் ஊடாகத் தேர்ந்தெடுக்கின்றனர். 29 பேர் மட்டுமே, தேசியப் பட்டியலில் நியமன எம்.பிக்களாகப் பதவியேற்கின்றனர்.
அந்த வகையில், அண்மைக் காலங்களில் தேசிய அரசியலில், முஸ்லிம் சமூகம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது என்றால், அவர்களில் 18 பேர், மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருந்திருப்பர்.
எனவே, இவர்களைப் பிரதிநிதித்துவ அரசியலுக்குத் தெரிவு செய்தவர்கள் மக்கள் என்றால், அவர்கள் செய்கின்ற தவறில், வாக்காளர்களான ஒவ்வொரு பொது மகனுக்கும், மறைமுகமாக ஒரு பங்கிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சிந்தனையற்ற சுயநல அரசியலைச் செய்கின்றார்கள் என்று, நன்றாகத் தெரிந்திருந்தும் கூட, அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டாமல், மீண்டும் அதே நபர்களை அல்லது, அதுபோன்ற மோசமான குணாதிசயங்கள் கொண்ட புதியவர்களுக்கு வாக்குப் போட்டுத் தெரிவு செய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது யாருடைய தவறு, என்பதையும் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள், பெரும்பாலும் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் இலகுவாகப் பிரசாரம் செய்து வாக்குகளைச் சுருட்டிக் கொள்வதற்காகவும் முஸ்லிம் சமூகத்தைப் பிராந்திய ரீதியாகவும் பிரதேச, கட்சி ரீதியாகவும் பிரித்து, அரசியல் செய்கின்றார்கள்.
அதேபோன்று, முஸ்லிம் மக்களை, சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரித்ததில், புதிது புதிதான மார்க்க இயக்கங்களுக்கும் பங்குள்ளது.
இந்தப் பின்னணியில், ‘முஸ்லிம் அரசியல்வாதிகள், ஒற்றுமைப்பட வேண்டும்’, ‘எல்லாக் கட்சிகளிலும் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, ஒரு கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும்’ போன்ற கோரிக்கைகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இக்கோரிக்கைகள் காலத்தின் தேவை என்பது மறுப்பதற்கில்லை. அப்படியான ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தும் தேவை, இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இருப்பினும், அரசியல்வாதிகளை ஒன்றுபடச் சொல்கின்ற முஸ்லிம் மக்கள், தமக்குள் ஒரு சமூகமாக ஒற்றுமைப்பட ஏன் தவறிவிட்டனர்?
“நாங்கள் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, ஒற்றுமைப்பட்டு இருக்கின்றோம். எனவே, நீங்களும் ஓரணியில் வந்தாலே, வாக்குப் போடுவோம்” என்று சொன்னதுண்டா? அவ்வாறு, மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசியல்வாதிகளை, மக்கள் தோற்கடித்து வீடுகளுக்கு அனுப்பியதுண்டா? இல்லையே! அப்படியான, அபூர்வங்கள் ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை.
சரி! அதை விடுவோம். முஸ்லிம் அரசியல் தலைமைகள், மக்களுக்காகக் குரல் கொடுப்பது இல்லை; எம்.பிக்களும் ஏனைய அரசியல்வாதிகளும் சுய இலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்படுகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் ஒன்றைக்கூட, நிறைவேற்றவில்லை என்பதுடன், சமூகத்தின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றிரண்டைத்தானும் பெற்றுத் தரவில்லை என்றெல்லாம், பலதரப்பட்ட விமர்சனங்கள் பரவலாக (தேர்தல் இல்லாத காலங்களில்) முன்வைக்கப்படுவதுண்டு.
ஆனால், ஜம்மியத்துல் உலமா சபை, சூறா சபை போன்ற அமைப்புகளோ, அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களோ, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்டபல்கலைக்கழக சமூகமோ, புத்திஜீவிகளோ, வாக்குப் போடச் சொல்லிச் சிபாரிசு செய்கின்ற ஊர்ப் பிரமுகர்களோ, எப்போதாவது இதுபற்றிச் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பிய வரலாறுகள் உள்ளனவா?
ஓர் அரசியல்வாதி வழங்குகின்ற எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது என்பது, நடைமுறைச் சாத்தியமானதல்ல. ஆனால், ஒரு சில முக்கியமானவற்றையேனும் நிறைவேற்றாமல், அவர் அடுத்த முறை வாக்குக் கேட்டு வரக்கூடாது.
ஆனால், ஒவ்வொரு முறையும் தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு, மீண்டும் எந்தச் சங்கடமும் இல்லாமல், முஸ்லிம் அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வருகின்றார்கள்.
இச்சந்தர்ப்பத்தில், “நீங்கள் முன்னர் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை, ஏன் நிறைவேற்றவில்லை” என்று முஸ்லிம் வாக்காளர்கள், தமது வேட்பாளர்களிடம் நாலுவார்த்தை கேட்டதுண்டா?
“நீங்கள், வாக்குறுதியை நிறைவேற்றாமல் இன்னுமொரு முறை, இந்தப் பக்கம் வாக்குக் கேட்டு வந்தால், தோற்கடிப்போம்” என்று எச்சரித்து, செயலில் காட்டிய வரலாறுகள் ஏதும் நினைவில் உள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை, ‘இல்லை’ என்றான போது, எப்படி அரசியல்வாதிகள் திருந்துவார்கள், என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மோசமானவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள், இலஞ்சப் பேர்வழிகள், ம(மா)துப் பிரியர்கள், போதை வர்த்தகத்துக்கு ஆசிர்வாதம் வழங்குபவர்கள், தொழில் பெற்றுக்கொடுக்க பணம் கேட்பவர்கள், சமூகத்துக்குப் பிரச்சினை வருகின்ற போது, ஓடி ஒழிந்து கொள்பவர்கள் என்று, மக்களால் கவலையோடு குற்றம் சாட்டப்படுகின்ற அரசியல்வாதிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் மன்னித்து, வாக்குப் போட முஸ்லிம் மக்கள் தயங்கவில்லை என்றால், வாக்குக் கேட்பதற்கு, எந்த அரசியல்வாதி, எப்படி வெட்கப்படுவார்.
இதேவேளை, ‘தலைவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். அவரது வியூகம் நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. எங்களது பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரில் ஆயிரம் தவறுகள் இருந்தாலும், அவருக்குத்தான் நாங்கள் வாக்குப் போடுவோம்.
கடந்த தேர்தலில், நாம் ஆதரித்த முஸ்லிம் கட்சி, என்னதான் சமூகத்துக்கு உதவாத அரசியலைச் செய்தாலும், கட்சி மீதான விசுவாசம் ஒருக்காலும் மாறாது’ என்று, எண்ணிக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான அரசியல் ஆதரவாளர்களும், தமது ‘ஆறாம் அறிவை’க் கொஞ்சம் பயன்படுத்த வேண்டிய காலமிது.
அவர், ‘பொருத்தமில்லாத வேட்பாளர்’ என்று தெரிந்திருந்தும், நமது ஊரைச் சேர்ந்தவர், நமது கட்சிக்காரர், கண்டால் சிரித்துப் பேசுபவர், அவருக்கே வாக்குப்
போட்டுப் பழகிவிட்டோம், அவர் நமக்கு அன்பளிப்புகள் தந்திருக்கின்றார் என்ற அற்பத்தனமான காரணங்களுக்காக, ஒரு சமூகம் பிழையான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்குமென்றால், ஒருநாளும் சமூக சிந்தனையுள்ள நல்லவர்களை, முஸ்லிம் அரசியல் களம், காண்பதற்கு வாய்ப்பிருக்காது.
ஆகவே, முஸ்லிம் அரசியலை, முஸ்லிம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் ஒரு காத்திரமான அரசியலாக, மீளக் கட்டமைக்க வேண்டுமென்றால், அடிப்படையில் திருந்த வேண்டியது வாக்காளப் பெருமக்கள்தான்.
மக்கள் விழிப்படைந்து, தமது பிரதிநிதிகளிடம் குறுக்குக் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டால்… இந்த அரசியல்க் கலாசாரம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மக்களை ஏமாற்ற முடியாது; சமூகம் சார்ந்த அரசியலைச் செய்யாமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு வாக்குக் கேட்டுப் போக முடியாது என்றும், அப்படிப் போனால், தோற்கடித்து விடுவார்கள் என்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளுக்குள் ஓர் அச்சம், எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும்.
பிழையான தெரிவுகளை மேற்கொண்டு விட்டு, ‘சரியானவை நடக்கும்’ என்று நம்புகின்ற மடமைத்தனத்தில் இருந்து, முஸ்லிம் மக்கள் மீட்சிபெற வேண்டும். இல்லாவிட்டால், இருக்கின்றவர்கள் இன்னும், மக்களை எவ்வாறு சிறப்பாக ஏமாற்றலாம் என்றே சிந்திக்கத் தலைப்படுவார்கள்.
அத்துடன், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பேர்வழிகள், முஸ்லிம் அரசியலுக்குள் நுழைவதையும் இந்தச் சமூகத்தால் தடுக்க முடியாமல்ப் போய்விடும். காணும்.
எனவே, இந்த விடயத்தில் சுய பரிசீலனை செய்து, சமூகம் தம்மைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால், முஸ்லிம் அரசியலில் எந்த உருப்படியான மாற்றத்தையும் உண்டுபண்ண முடியாது. நாம் திருந்தாமல், அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. (மொஹமட் பாதுஷா)