கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல்வார இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ராநந்த இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமானதன் பின்னர், உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்து இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பாடசாலை கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் உரிய காலப்பகுதியில் பாடவிதானங்களை கற்பித்து நிறைவுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையை பிற்போடுமாறு பல தரப்பினரிடமும் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நியாயமான உரிமையாக இந்த கோரிக்கையை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மாணவர்களுக்கு அநீதி மற்றும் அசௌகரியம் ஏற்படாதவாறு எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை குறித்து ஆராயுமாறு கல்வியமைச்சர் அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல்வார இறுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.