கொவிட்-19 வைரஸ் வுஹானில் உள்ள அரசாங்க கட்டுப்பாட்டு ஆய்வகமொன்றில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்த சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான், அதற்கான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஹொங்கொங் பொது சுகாதாரப் பள்ளியில் ஆராச்சியாளராக பணியாற்றி வந்தவர் டாக்டர் லி மெங்-யான்.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பணியாற்றிய போது சார்ஸ் போன்ற ஒருவகை வைரஸின் பாதிப்பு பலருக்கும் ஏற்படத் தொடங்கியதை அவதானித்துள்ளார்.
இதுதொடர்பான ஆய்வில் இறங்கிய லி மெங்-யான், இதன் பின்னணி குறித்து பல தகவல்களைச் சேகரித்ததாக கூறப்படுகிறது. இதனை தன்னுடைய மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தகவலை வெளியே சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் காணாமல் போய் விடுவாய் என்று அவருக்கு மேற்பார்வையாளர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் டாக்டர் லி-மெங், பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந் நிலையில் செப்டெம்பர் 11 ஆம் திகதி பிரிட்டிஷ் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர், கொரோனா வைரஸ் நோய் குறித்த தனது ஆராச்சி மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
டாக்டர் லி-மெங் டிசம்பர் மற்றும் ஜனவரி தொடக்கத்தில் சீனாவில் “புதிய நிமோனியா” குறித்து இரண்டு ஆய்வுகளையும் நடத்தியதாகவும், அதன் முடிவுகளை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஆலோசகராக இருக்கும் தனது மேற்பார்வையாளருடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
தனது மேற்பார்வையாளர் சீன அரசாங்கம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு சார்பாக சரியானதை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், மேற்பார்வையாளரின் முடிவு தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் கூறியுள்ளார்.