நாட்டில் இனவாதம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அகிம்சை கருணை, அன்பு, சகோதரத்துவத்தைப் போதிக்க வேண்டிய பெளத்த குருமார்களில் சிலர் இனவாதத்துக்கு தூபமிட்டு வரும் நிலையில் கட்டுக்கலை புர்கானியா அரபுக்கல்லூரி இன்று புதியவோர் அத்தியாயத்தை புரட்டியுள்ளது.
கட்டுக்கலை ஜும்ஆபள்ளிவாசலுடன் இணைந்து புர்கானியா அரபுக்கல்லூரி இன மத நல்லிணக்கத்துக்கு இன்று முன்மாதிரியாகத் திகழ்கிறது.இக்கல்லூரியின் முன்மாதிரி சமாதானத்தை, நல்லிணக்கத்தை, நாட்டின் அபிவிருத்தியை விரும்பும் மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
இக்கல்லூரியில் நாட்டில் நாலா பக்கங்களையும் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இந்த அரபுக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பெளத்த மதம் போதிக்கப்படுகிறது. அரபுக்கல்லூரியின் நிர்வாக சபை, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தினையடுத்தே அங்கு பெளத்த மதம் போதிக்கப்படுகிறது.
‘‘எங்களது பிள்ளைகளுக்கு பெளத்த மதம் போதிப்பதா? ஏன் நாங்கள் பெளத்த மதத்தைப்படிக்கவேண்டும். எமது நாட்டில் பெளத்தர்களால் முஸ்லிம்கள் வெறுக்கப்பட்டவர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக,,காதி நீதிமன்றங்களுக்கு எதிராக, எமது ஹலால் உணவு மற்றும் வங்கி முறைக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள். அவர்களது மதத்தை எங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதா?’’ என்று எம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் முஸ்லிம்கள் நாம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் விரும்புபவர்கள், ஏனைய மதங்களை வெறுப்பதிலிருந்தும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றே புனித குர்ஆனும் தெரிவிக்கிறது.
எமது மாணவர்கள் பெளத்த தர்மத்தை மாத்திரமல்ல ஏனைய மதங்கள் பற்றியும் அறிந்து கொள்வது, தெளிவு பெற்றுக் கொள்வது இக்கால சூழ்நிலையில் அவசியமாகும். இதனை உணர்ந்து புர்கானியா அரபுக்கல்லூரி செயலில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இக்கல்லூரியில் திரிபிடகம் மற்றும் அபிதர்மம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெளத்த தர்மம் ஒரு பாடமாகப் போதிக்கப்படுவதாக அரபுக்கல்லூரியின் நிர்வாக சபை தெரிவிக்கிறது.
அத்தோடு திரிபிடகம் மற்றும் புனித குர்ஆனுக்கிடையிலுள்ள சமமான போதனைகள் மற்றும் இரு சமயங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை தொடர்பாகவும் மாணவர்கள் தெளிவூட்டப்படுகின்றனர்.
அரபுக்கல்லூரிக்கு பெளத்த குருமார் விஜயம்
புர்கானியா அரபுக்கல்லூரியில் நடைமுறையிலுள்ள புதிய கல்விப் போதனைகள், பாடங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பெளத்த குருமார்கள் கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையினால் கடந்த மாதம் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அழைப்பிதழுக்கு அமைய உடரட்ட அமரபுர நிகாயாவின் அநுநாயக்க தேரர் கோனகலகல உதித தேரர் உட்பட தேரர்கள் 60 பேர் புர்கானியா அரபுக்கல்லூரிக்கும், கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தனர்.
அங்கு விஜயம் செய்து கல்லூரியின் வாசிகசாலை, விரிவுரை மண்டபம் மற்றும் பள்ளிவாசல் வளாகத்தைப் பார்வையிட்ட கோனகலகல உதிததேரர் இதேபோன்று பெளத்த விகாரைகளில் மதத்தலங்களில் இடம் பெறும் சமய நிகழ்வுகளை பார்வையிட்டு தெளிவுகள் பெற்றுக்கொள்வதற்காக மெளலவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மாணவர்களும் மெளலவிகளும், கல்லூரி உஸ்தாத்மார்களும் பெளத்த மதம் மற்றும் வழிபாடுகள் தொடர்பில் தெளிவுகள் பெற்றுக்கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முப்பது வருடகால யுத்தம் எம்மை நூற்றாண்டுகள் பின் தள்ளிவிட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது. நாட்டில் நடந்து முடிந்துவிட்ட இனரீதியிலான கலவரங்கள் எம்மை முன்னோக்கி நகரவிடவில்லை. எம்மால் தொடர்ந்தும் இவ்வாறு பிளவுபட்டு வாழ முடியாது. நாம் முன்னோக்கி நகர வேண்டும். இதற்கு நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் பூத்துக்குலுங்க வேண்டும்.
இதற்கான ஓர் ஆரோக்கிய நகர்வாகவே புர்கானியா அரபுக்கல்லூரியின் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் பெளத்த மதம் மாத்திரமல்ல இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களும் போதிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.
கல்லூரியின் வரலாறு
கண்டி கட்டுக்கலையில் அமைந்துள்ள மத நல்லிணக்கத்தின் சின்னமாகத் திகழும் புர்கானியா அரபுக்கல்லூரி 1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கட்டுக்கலை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் முயற்சியினால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. இன்றுவரை கல்லூரியை இயங்கச் செய்து கொண்டிருப்பதும் இவ்வமைப்பே.
அன்பளிப்புகள் மூலம் கிடைக்கும் உதவிகள் மூலம் இக்கல்லூரி இயங்கி வருகிறது. உள்நாட்டு உதவிகள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அரசர் காலத்தில் கட்டுக்கலை ஜும்ஆ பள்ளி வாசலுக்கு வழங்கப்பட்ட காணியிலேயே கல்லூரி அமைந்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 100 மாணவர்கள் இங்கு பயில்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்துக்கு முன்பு நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதாக பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.ரயீஸ் முப்தி தெரிவிக்கிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 17 உஸ்தாத்மார்கள் இங்கு கடமையாற்றுகிறார்கள். குர்ஆன் மனனபகுதி, ஷரீஆ பகுதி என இரு பிரிவுகளாக போதனைகள் இடம் பெறுகின்றன. மாணவர்களுக்கு சிங்கள மொழியும் போதிக்கப்படுகின்றது.
இங்கு கடந்த 20 வருட காலமாக க.பொ.த. சாதாரண பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். இங்கு படித்த மாணவர்களுக்கு தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்து அவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியிருக்கிறார்கள். இப்போதும் இங்கு படித்துக் கொடுத்த ஓர் ஆசிரியர் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு படித்த மாணவர்கள் எகிப்து மற்றும் மதீனா பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு நாட்டின் ஏனைய மதங்கள் பற்றி அறிவூட்டுவதன் மூலம் அவர்களுக்கு மதங்களுக்கிடையிலுள்ள வித்தியாசங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மத நல்லிணக்கத்தின்பால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
மாணவர்கள் ஏனைய மதங்களைப்பயில்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த முன்மாதிரித்திட்டம் நாட்டின் ஏனைய அரபுக்கல்லூரிகளிலும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றார்.
கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர்
புர்கானியா அரபுக்கல்லூரியில் போன்று நாட்டிலுள்ள ஏனைய அரபுக்கல்லூரிகளிலும் ஏனைய மதபாடங்கள் அடங்கிய பாடத்திட்டம் போதிக்கப்படவேண்டும். சிங்கள மொழி போதிக்கப்படவேண்டும். பள்ளிவாசல்களின் இமாம்களில் பலர் சிங்களமொழி பேசமுடியாதவர்களாக இருப்பது பெரும் குறைபாடாகும் என கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளரும்,கண்டி மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவருமான கே.ஆர்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கட்டுகலை ஜும்ஆ பள்ளி வாசல் கட்டிடத்தின் கீழ் மாடியில் நல்லிணக்க மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்துக்கு ஏனைய மதத்தவர்களும் வருகை தந்து இஸ்லாம் மதம் தொடர்பான தெளிவுகளைப் பெற்றுச் செல்கிறார்கள். கடந்த மாதம் கோனகலகல உதிததேரரின் தலைமையில் வருகை தந்த 60 பெளத்த குருமார் அன்றைய ஜும்ஆ தொழுகையை நேரில் பார்வையிட்டார்கள். ஜும்ஆ பயான் அன்றைய தினம் சிங்கள மொழியிலேயே நடத்தப்பட்டது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு கண்டி நகர் பள்ளிவாசல்களில் கடமைபுரியும் இமாம்களுக்கு சிங்களமொழி போதிக்கப்பட்டது. இத்திட்டத்தை கட்டுகலை ஜும்ஆ பள்ளியில் இயங்கும் நல்லிணக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது.
அரபுக் கல்லூரிகளில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக சில பெளத்த இயக்கங்கள் குற்றம் சுமத்திவரும் நிலையில் இந்த வாதம் தவறானது என்பதை நிரூபிப்பதற்காகவும், நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காகவும் இங்கு பெளத்த தர்மம் மற்றும் சிங்கள மொழியினைப் போதிக்கிறோம் என்றார்.
எந்தவோர் மதமும் மக்களை நல்வழிப்படுத்துவதற்கான போதனைகளையே கொண்டிருக்கின்றன.என்றாலும் கொள்கைவாதிகள், இனவாதிகள், மதவாதிகள் தங்கள் இலக்கினை எய்துவதற்காக மதத்தையும், இனத்தையும் ஆயுதமாகக் கொள்கின்றனர்.
கட்டுக்கலை புர்கானியா அரபுக்கல்லூரியும், ஜும்ஆ பள்ளிவாசலும் மாணவர்களுக்கு பெளத்த மற்றும் ஏனைய மதங்களைப் போதித்து வருகின்றமை மத நல்லிணக்கத்திற்கு மாத்திரமன்றி தேசிய நல்லிணக்கத்துக்கும் பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இவ்வாறான முயற்சிகள் ஏனைய அரபுக் கல்லூரிகளிலும் பெளத்த விகாரைகளிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்மூலமே எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை எம்மால் அடையக் கூடியதாக இருக்கும்.
ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி இதழ் 13/10/2022