தேசிய கொள்கையையின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்கவை நாங்கள்‌ முன்னர்‌ விமர்சித்திருந்தாலும்‌, அவர்‌ சரியான பாதையிலேயே தற்போது பயணிக்கின்றார்‌. அவருக்கு மொட்டு ஆதரவளிக்கும்‌” என ‘ஒன்றாக எழுவோம்‌ – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்‌’ எனும்‌ தொனிப்பொருளில்‌, சனிக்கிழமை (08) நடைபெற்ற மக்கள்‌ சந்திப்பில்‌, முன்னாள்‌ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆற்றிய உரைக்குப்‌ பின்னர்‌, ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்கள்‌ சூடுபிடித்‌துள்ளன.

“மொட்டுடன்‌ இணைந்துள்ள ஜனாதிபதி, கொள்ளையர்களை இணைத்துக்கொண்டு கொள்ளை பயணத்தில்‌ பயணிக்க முயல்கின்றார்‌. அவருடன்‌ இணைந்து பயணிக்க நாங்கள்‌ தயாரில்லை” என எதிர்க்கட்சியினர்‌ கடுமையான சீற்றத்துடன்‌ கூறிவருகின்றனர்‌.

இந்நிலையில்‌, ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான 12 அடிமைகளின்‌ பெயர்கள்‌, அமைச்சுப்‌ பதவிகளுக்கு பறிந்துரைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ சஜித்‌ பிரேமதாஸ குற்றஞ்சாட்டி யுள்ளார்‌.

ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்கவின்‌ கீழ்‌, முறையான அமைச்சரவை நியமிக்கப்படவில்லை. இருப்பதை வைத்துக்கொண்டுதான்‌ இழுத்துக்கொண்டு செல்கின்றார்‌. அமைச்சுப்பதவிகளில்‌ குளறுபடிகள்‌ ஏற்படின்‌, பாராளுமன்றத்தில்‌ ஜனாதிபதியின்‌ மீதான விசுவாசம்‌ குறைவதற்கான சாத்தியக்கூறுகள்‌ இருக்கின்றன. ஆகையால்‌, அமைச்சரவையை நியமித்தல்‌ மெதுவாக நகர்த்தப்படுகின்றது.

இந்நிலையில்‌, ஆட்சி மாற்றம்‌ ஏற்படும்‌ போதெல்லாம்‌, அமைச்சுகள்‌, திணைக்களங்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களில்‌ விசுவாசத்தின்‌ பெயரில்‌ பாரிய மாற்றங்கள்‌ ஏற்படுத்தப்படும்‌. கொள்கைகளும்‌ மாற்றப்படும்‌. நாடு தற்போது முகங்கொடுத்துக்கொண்டிருக்கும்‌ பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இந்த மாற்றங்களும்‌ அதற்கான பாரிய செலவுகளும்‌ முக்கிய காரணங்களாகும்‌.

உலக நீரோட்டத்துடன்‌ இணைந்து நீந்தவேண்டுமாயின்‌, ஒருசில துறைகளில்‌ மாற்றம்‌ அவசியம்‌. கல்வி, சுகாதாரம்‌ உள்ளிட்ட துறைகளில்‌ அவ்வப்போது அதிரடி யான மாற்றங்களைச்‌ செய்யவேண்டும்‌. ஏனைய துறைகளுக்கு தேசிய கொள்கையை வகுக்கவேண்டும்‌. அதனூடாக தேவையில்லாத செலவுகளைக்‌ குறைத்துக்கொள்ள முடியும்‌.

தேசிய கொள்கையை அமைத்தால்‌ மட்டும்‌ போதாது. அதில்‌ மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில்‌, காலவோட்டத்துக்கு ஏற்றவகையில்‌ திருத்தங்களை மேற்கொள்ளும்‌ வகையில்‌ சட்டமாக்க ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகமே! ஒத்துழைத்தால்‌ நாட்டை முன்னேற்றப்‌ பாதைக்குள்‌ கொண்டு செல்லலாம்‌. இல்லையேல்‌, இன்னும்‌ பாரிய நெருக்கடியை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்‌.

ஆட்சிப்பீடத்தில்‌ இருப்பவர்கள்‌ தங்களுடைய தேவைக்கு ஏற்றவகையில்‌, கொள்கையில்‌ மாற்றங்களை ஏற்படுத்தல்‌, மிகவும்‌ நெருங்கிய உறவினர்களை அமைச்சுகளின்‌ முக்கிய பதவிகளுக்கு ஆகக்கூடிய சம்பளம்‌ மற்றும்‌ கொடுப்பனவுகளுடன்‌ நியமித்துக்கொள்ளுதல்‌ போன்றவற்றை எல்லாம்‌ தவிர்க்கும்‌ சரத்துகளை, தேசிய கொள்கையில்‌ உள்ளீர்க்க வேண்டும்‌.

ஓர்‌ அமைச்சின்‌ கீழ்‌ எவ்வளவு சேவைகளை துரிதகதியில்‌ முன்னெடுக்க முடியுமோ அதற்கேற்றவகையில்‌ மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்‌. அத்துடன்‌, கழல்‌, மோசடிகளை செய்ததன்‌ பின்னர்‌, விசாரணைக்குழுக்களை அமைத்து நேரத்தையும்‌ பணத்தையும்‌ வீணடிக்காமல்‌, அவற்றுக்கு முடிச்சுப்போடும்‌ வகையிலும்‌ தேசிய கொள்கையை நிறுவ வேண்டும்‌.
தமிழ்-மிற்றோர் 12/10/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter