ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டுள்ளவர்களில் ஹஜ் கடமை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்காத நிலையில் மரணித்துவிட்டவர்களது பதிவுக்கட்டணத்தை அவர்களது குடும்பத்தினர்களால் மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்று அரச ஹஜ்குழு அறிவித்துள்ளது.
ஹஜ் கடமையை மேற்கொள்ள வாய்ப்புக்கிடைக்காத நிலையில் மரணித்துவிட்ட விண்ணப்பதாரிகள் திணைக்களத்துக்கு செலுத்தியுள்ள பதிவுக்கட்டணத்தை மீள செலுத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மரணித்த விண்ணப்பதாரிகளின் மரண அத்தாட்சிப்பத்திரம் மற்றும் பிரதேச கிராம சேவையாளரின் கடிதம் எனும் ஆவணங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சமர்ப்பித்து குடும்பத்தினருக்கு பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமென அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
இதேவேளை ஹஜ் கடமைக்காக திணைக்களத்துக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகளின் பதிவுக்கட்டணமும் தற்போது திணைக்களத்தினால் மீள கையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் கடமைக்கான வயதெல்லயை 65 ஆக நிர்ணயித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 06/10/2022 ( பக்கம் -02)