நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பள்ளிவாசல்களையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்தபோதும் நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துப்பள்ளிவாசல்களையும் பொதுவான யாப்பொன்றின் கீழ் இயங்கச் செய்யமுடியாது. இது நடைமுறைச்சாத்தியமற்றது என வக்பு சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் பெரும்பாலான பள்ளவாசல்கள் யாப்பு இன்றி இயங்கிவருவதால் பல்வேறு குழப்பங்கள் பதிவாகி வருகின்றமையை அடுத்தே திணைக்களம் பொதுவான யாப்பின் அவசியத்தை முன்வைத்திருந்தது. அத்தோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாதிரி யாப்பொன்றினை வடிவமைத்து அந்த வரைபினை வக்பு சபையின் அனுமதிக்காக அனுப்பி வைத்திருந்தது. எதிர்வரும் இரண்டு மாத காலத்துக்குள் இச்செயல்திட்டம் அமுலுக்கு வரும் என திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
மேலும் பள்ளிவாசல்களுக்கு பொதுவான யாப்பொன்றினை அமுல்படுத்துவது தொடர்பில் திணைக்களத்திற்கு வக்பு சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. தாமதப்படுத்தப்படுகிறது என்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்திருந்தார்.
‘விடிவெள்ளி’ இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரியது. அவர் பதிலளிக்கையில்,
‘நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தின் கீழ் நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களை பொதுவான ஒரு யாப்பின் மூலம் இயங்கச் செய்ய முடியாது. இது நடைமுறை சாத்தியமற்றது. வக்பு சட்டத்தின்படி யாப்பு ஒன்று கட்டாயமில்லை. பள்ளிவாசலுக்கான யாப்பு ஒன்று யாப்பு அப்பிரதேசத்தின் சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். அத்தோடு வக்பு சட்டம் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
பள்ளிவாசல்களின் டிரஸ்டி நியமனம் உட்பட செயற்பாடுகள் அவ்வப்பகுதி சம்பிரதாயம், மற்றும் நடைமுறைகளின்படியே நடக்கிறது. உதாரணத்துக்கு கிழக்கில் பெரும்பாலான பள்ளிவாசல்கள் டிரஸ்டி நியமனம் குடி, மரிக்கார் பரம்பரையை உள்ளடக்கியதாகவே இடம்பெறுகிறது. அத்தோடு பத்வாகமிட்டியும் இயங்கிவருகிறது. அமெரிக்காவில் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வது போன்ற முறையே இங்கு பின்பற்றப்படுகிறது என்று கூறலாம். எனவே பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் பிரதேசத்துக்கு பிரதேசம் பள்ளிவாசல்களுக்குப் பள்ளிவாசல் வித்தியாசமானதாகவே அமைந்துள்ளது.
எனவே அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவான யாப்பொன்றினை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாது. இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சட்ட அதிகாரிக்கு தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதற்கு மாற்று வழி தொடர்பாக ஆராய வேண்டும் என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 06/10/2022 ( பக்கம் -01 )