கண்டி – மாத்தளை பிரதான பாதையில் கட் டுகஸ் தோட்டை முதல் அக்குறணை வரையிலான பகுதியில் பல இடங்கள் தாழ் இறங்கி உள்ளதாகவும் இதனால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கும் விடயம் குறித்து 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உத்தரவிட்டார்.
கட்டுகஸ்தோட்டை முதல் அக்குறணை வரையிலான A-9 பாதையில் பல இடங்கள் தாழ் இறங்கி நீரில் மூழ்குவதாகத் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் கடந்த 19 ஆம் திகதி திங்களன்று நேரடியாக விஜயம் செய்து கள விபரங்களை அறிந்து கொண்டார். இது தொடர்பாக கண்டியிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலின் போது அதிகாரிகளுக்கு மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட மத்திய மாகாண ஆளுநர்…
மேற்படி பிங்கா ஓயாவை அண்மித்த பகுதியில் மணல் அள்ளும் நடவடிக்கைகள் ஏதும் இடம்பெற்றால் அதனை உடன் நிறுத்த வேண்டும். இதனுடன், தொடர்புடைய நிறுவனங்களான மகாவலி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இது தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகள் உட்பட மேற்படி அறிக்கையை தயாரிப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகளைப் புறக்கணிக்காமல், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள் தேவையான தகவல்களை வழங்கி அந்தப் பணிகளுக்கு பங்களிக்க வேண்டும். பிங்கா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பதால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் இதனால் அக்குறணை நகர மக்கள் மட்டுமன்றி கண்டி மாத்தளை பிரதான பாதையில் பயணிப்பவர்களும் சிரமங்களுக்கு ஆளாகுவதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான குணதிலக ராஜபக்ஷ கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். அப்துல் ஹலீம், அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திகார் இமாதுதீன், மாகாண ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்ன, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) லலித் ஏ. எடம்பாவல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(வத்துகாமம் நிருபர்- விடிவெள்ளி பத்திரிகை 22/9/22 பக்கம் 03)