சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த சனிக்கிழமை அமெரிக்க நியூயோர்க் பிராந்தியத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கத்திக்குத்துக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பினார்.
தாக்குதல்தாரி சல்மான் ருஷ்டியின் முகம், கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் 10 தடவைகள் கத்திக்குத்தை நடத்தியுள்ளார். இதனால் சல்மான் ருஷ்டியின் கரத்தில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது ஈரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கண்ணில் ஒன்றை இழக்கும் நிலை ஏற்படலாம் என அவரது முகவர் அன்றூ வைலி தெரிவித்துள்ளார்.
சல்மான் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு கத்தி குத்து தாக்குதலுக்குள்ளானார்.
தாக்குதல் இடம்பெற்ற போது விழாவில் கூடியிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல்தாரியை மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்த டாக்டர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் சல்மானுக்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டனர். பொலிஸார் தாக்குதல் தாரியை உடனடியாக கைது செய்தனர்.பின்பு சல்மான் அருகிலிருக்கும் வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்டார்.
சல்மான் ருஷ்டியின் முழுப்பெயர் அஹமட் சல்மான் ருஷ்டி. இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவின் மும்பாய் நகரில் பிறந்தார். காஷ்மீர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவர் தனது 14 ஆவது வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கிலாந்தில் முதலில் ரக்பி கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். படித்து பட்டம் பெற்றதன் பின்பு சல்மான் ருஷ்டி தனது பெற்றோரிடம் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். முதன் முதல் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். சிறிது காலத்தில் மீண்டும் ஐக்கிய இராஜ்யத்துக்குத் திரும்பி வந்தார். அங்கு அவர் நகர வர்த்தக விளம்பர நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.
1964 இல் சல்மான் ருஷ்டி பிரித்தானியாவின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். சல்மான் ருஷ்டி நான்கு தடவைகள் திருமணம் செய்துள்ளார். அவரது முதலாளது மனைவி க்ளெரிஸ்ஸா லுவார்ட் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன். அவரது பெயர் சபர். இரண்டாவது மனைவி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த எழுத்தாளரான மெரியன் விக்கின்ஸ் என்பவராவார். மூன்றாவது மனைவி பிரித்தானிய வெளியீட்டாளரான எலிசபெத் வைஸ் என்பவராவார். இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் மிலான் ஆவார். நான்காவதாக பத்மலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து தற்போது அவரையும் விவாகரத்துச் செய்து கொண்டுள்ளார்.
சல்மான் இலக்கியத்தை தனது தொழிலாகக் கொண்டார். 1975 இல் ‘கிறீமஸ்’ எனும் நாவலை வெளியிட்டார். இந்நாவல் இவர் எதிர்பார்த்த ஆதரவினை மக்கள் மத்தியில் பெற்றுக்கொள்ளவில்லை.
அடுத்து அவர் 1981 இல் ‘மிட்நைட் சில்ரன்’ எனும் நாவலை எழுதி வெளியிட்டார். இந்நாவல் வாசகர் மத்தியில் பெரும் ஆதரவினைப் பெற்றது. அதியுயர் விருதான ‘புக்கர்’ விருதினை இந்நாவல் பெற்றுக்கொண்டது.
1988 இல் சாத்தானின் வசனங்கள் (The Satanic Verses) தலைப்பிலான நாவலொன்றினை எழுதி வெளியிட்டார். இந்நாவல் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நிந்தனை செய்யும் வகையில் அமைந்திருந்தது. உலகளாவிய ரீதியில் இந்நாவலை எதிர்த்து முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தனர். தமது மத நம்பிக்கைக்கு சவாலான நூலென அதனைக் கருதினர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் இந்நாவலுக்குத் தடை விதித்தன.
1989 பெப்ரவரியில் ஈரான் நாட்டின் ஆன்மிகத் தலைவர் அயதுல்லாஹ் கொமேனி சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை உத்தரவினை வழங்கினார். இவரை கொலை செய்வதற்கான பத்வா ஒன்றினையும் வெளியிட்டார். சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமாக வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு ஈரானிய மத நிறுவனமொன்று குறிப்பிட்ட சன்மானத்துக்கு மேலதிகமாக 500,000 அமெரிக்க டொலரை வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.
‘சாத்தானின் வசனங்கள்’ சல்மானின் நான்காவது நாவலாகும். இந்நாவல் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை,சூடான் உட்பட 12 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
1989 இல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி மத்திய லண்டனில் ஹோட்டலொன்றில் குண்டு வெடிப்புச் சம்பத்தினால் இரண்டு மாடிகள் சேதங்களுக்குள்ளாகின. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்காகவே அந்த குண்டு கொண்டு வரப்பட்டிருந்தது. புத்தகமொன்றில் பொருத்தப்பட்டிருந்த இந்த குண்டு திட்டமிட்டிருந்த நேரத்துக்கு முன்பாகவே வெடித்து விட்டது. இந்தக் குண்டினை அங்கு எடுத்து வந்த முஸ்டாக் மஹமூட் மசே எனும் இளைஞர் பலியானார். அவருக்கு தெஹ்ரான் நகரில் நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது. இப்பின்னணியில்தான் ‘சாத்தானின் வசனங்கள்’ நாவல் வெளியிடப்பட்டு 34 வருடங்களுக்குப் பின்பு சல்மான் ருஷ்டி நியூயோர்க் பிராந்தியத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே கத்திக்குத்துக்கிலக்கானார்.
ஈரான் ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவரும் ஷியா அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுபவருமான 24 வயதான ஹாதி மதார் என்பவரே ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தான் நிரபராதி என்றே தெரிவித்துள்ளார். சாத்தானின் வசனங்கள் நாவல் வெளிவந்த போது ஹாதி மதார் பிறந்து கூட இருக்கவில்லை.
தாக்குதல்தாரி நியூஜேர்ஸி பெயார்வில்வை வதிவிடமாகக் கொண்டவர். அவர் தென் லெபனான் யாரூனிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு குடியேறிய லெபனான் பெற்றோருக்கு பிறந்தவர். ஐக்கிய இராச்சியத்திலேதான் இவர் பிறந்தார்.
சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டமை தொடர்பில் தமது இயக்கத்துக்கு எதுவும் தெரியாது என ஹிஸ்புல்லா அமைப்பின் பேச்சாளர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரி சல்மான் ருஷ்டியைத் தாக்குவதற்கு நீண்டகாலமாக திட்டமிட்டிருந்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி சல்மான் ருஷ்டியின் உரையை கேட்பதற்கு அனுமதிச் சீட்டினையும் பெற்றிருந்துள்ளார். அவர் பஸ்வண்டி மூலமே விரிவுரை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.
1991 இல் ‘சாத்தானின் வசனங்கள்’ நூலின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தப்பட்டே இவரும் கொலை செய்யப்பட்டார். இத்தாலி மொழிபெயர்ப்பாளர் தாக்குதலுக்கு இலக்காகி கடுமையான காயங்களுக்குள்ளானார்.
கத்திகுத்து தாக்குதலுக்குள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு தினத்தின் பின்பு அவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஒக்சிஜன் உபகரணம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பேசக்கூடியவராக இருப்பதாக அவரின் பிரதிநிதி அன்டா வைலி தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கிய விழாவில் சல்மானுடன் நேர்காணலை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த ஹென்றி ரீஸ் சிறிய காயங்களுக்குள்ளாகி இருக்கிறார்.
இந்த தாக்குதலின் பின்பு மற்றுமொரு சர்ச்சைக்குரிய எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். “சல்மான் ருஷ்டிக்கு நியூயோர்க் நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிந்து கொண்டேன். உண்மையில் நான் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளேன். அவருக்கு இப்படி நடக்குமென்று நான் போதும் நினைக்கவில்லை. அவர் மேற்கு நாடுகளிலே வசித்து வருகிறார். அவருக்கு 1989 முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தாக்கப்பட்டாரென்றால் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும் தாக்குதலுக்குள்ளாகலாம். நான் மிகவும் கவலையுடன் இருக்கிறேன்” என தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ஏ.பரீல் விடிவெள்ளி பத்திரிகை 08/8/2022