ஹட்டன் உட்பட அண்மித்த பகுதிகளில் நோயாளர்களிடம் தலா 800 ரூபா அறவிட்டு அக்குபஞ்சர் வைத்திய ஆலோசனைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் கடந்த 8 ஆம் திகதி ஹட்டன் பொலிஸாரினார் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரிடம் அவர் ஒரு வைத்தியர் என்பதற்கான வைத்திய கவுன்ஸிலின் சான்றிதழோ அல்லது ஆயுர்வேத வைத்தியர் என்பதற்கான அத்தாட்சிகளோ, சான்றிதழோ இருக்கவில்லை.
அவர் ஒரு போலி வைத்தியர் என்பதை இனங்காட்டியுள்ளது. அவர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவரது பிரயாணப் பையை சோதனையிட்ட பொலிஸார் அவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இவ்வாறு மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் நபர்கள் தொடாபில் அவர்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழக்குத் தொடர வேண்டும் என ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.ஜே. எம் பஸீர் மொஹமட் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட போலி வைத்தியர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போலி வைத்தியர் 46 வயதானவர். அவர் தான் மன்னாரை வதிவிடமாகக் கொண்டவரென பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஹட்டனில் இயங்கும் ஊடக அலுவலகமொன்றுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ் ஊடக அலுவலகம் இது தொடர்பில் ஹட்டன் பள்ளிவாசல் நிர்வாகத்தையும், பொலிஸையும் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியது. இதனையடுத்து ஹட்டன் ஹிஜ்ராபுரயில் சிகிச்சை நிலையம் நடாத்தப்பட்ட வீடொன்றுக்கு பொலிஸாரும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் சென்று சம்பந்தப்பட்ட போலி டாக்டரை விசாரணை செய்தனர்.
வாரத்துக்கு ஒரு நாள் மன்னாரிலிருந்து ஹட்டனுக்கு வருகை தந்து அக்குபஞ்சர் முறையில் பல்வேறு நோய்களைக் குணமாக்குவதாகக் கூறி சந்தேக நபர் நோயாளி ஒருவரிடம் 600 ரூபா அறவிட்டு வைத்திய ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண்கள் உட்பட பல நோயாளிகள் அங்கு வருகை தந்திருந்ததாகவும் பொலிஸார் கூறினார்கள். அவர் வைத்தியர் என்பதை உறுதி செய்வதற்கு எந்தவித சான்றிதழ்களோ அத்தாட்சிகளோ அவரிடம் இருக்கவில்லை என ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ். பலிபான தெரிவித்தார்.
இவர் ஹட்டனுக்கு வந்து ஒரு நாளில் சுமார் 80 நோயாளர்களைப் பரிசோதிப்பதாக ஹட்டன் பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார். பொலிஸாருடனும், பள்ளி நிர்வாகிகளுடனும் வாதமுற்றார், பொலிஸார் சந்தேகநபரை சோதனையிடுவதற்காக சிகிச்சை வழங்கப்படும் வீட்டுக்குச் சென்ற போது பொலிஸாருடனும், பள்ளிவாசல் நிர்வாகிகளுடனும் அவர் வாதாடினார். என்னை சோதனையிடும் போது இங்கு ஊடகங்களின் பிரசன்னம் தேவையில்லை. இது போன்ற சிகிச்சைகளை மெளலவிமார்கள், குருமார்கள், கிறிஸ்தவ குருமார்களும் நடாத்துகிறார்கள். நான் பலவந்தப்படுத்தி நோயாளர்களை அழைக்கவில்லை. எனது தராதரம் பற்றி என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலே நோயாளர்கள் வந்துள்ளனர்.நான் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவில்லை. என்னிடம் வரும் நோயாளர்களுக்கே சிகிச்சை முறை பற்றிய துண்டுப்பிரசுரங்களை வழங்குகிறேன். என்னை ஏமாற்றுக்காரன் என்று இனங்காட்டுவதற்கே இங்கு மீடியாக்கள் வந்துள்ளன. எனது வைத்திய அனுமதி வீட்டில் இருக்கிறது என்றார். அப்படி வைத்திய அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை வைத்தியம் செய்யும் போது காட்சிப்படுத்துவது அவசியமாகும் என பொலிஸார் அவருக்குத் தெளிவுபடுத்தினார்கள்.
பள்ளிவாசல் நீர்வாக சயைத் தலைவர் இச் சம்பவம் தொடர்பில், ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஏ. ஜே. எம். பஸீர் மொஹமட்டை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின் வருமாறு விளக்கமளித்தார். சம்பந்தப்பட்ட நபர் ஹட்டனில் இவ்வாறு சிகிச்சை நிலையமொன்றினை வீடொன்றில் நடாத்தி வருவது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. ஹட்டன் ஊடக அலுவலகம் மூலமே நாம் அறிந்து கொண்டோம். ஹட்டனில் இவ்வாறான செயல்கள் நடைபெற இடமளிக்க முடியாது. எவராவது வெளியிலிருந்து வந்து இங்கு தங்குவதென்றால் ஏதும் நடவடிக்கைகளை முன்னெடுப்ப
தென்றால் அவர்கள் பள்ளிவாசலில் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதை தெளிவுபடுத்துவதற்காகவே பள்ளிவாசல் நிர்வாகிகள் சிகிச்சை நடாத்தப்பட்ட வீட்டுக்கு பொலிஸாருடன் சென்றோம். வைத்திய சபை அல்லது ஆயுர்வேத சபையிலிருந்து வைத்தியர் ஒருவர் அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லா விட்டால் அது சட்ட விரோதமானதாகும் இந்தப் போலிவைத்தியர் நாடியைப் பிடித்து சோதித்தே நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எக்ஸ்ரே மற்றும் 600 சோதனைகள் தேவையற்றது என தெரிவித்துள்ளார். இது மூடத்தனமாகும். அவர் ஹட்டனில் சிகிச்சை நடாத்திய வீட்டுரிமையாளருக்கு கமிஷன் வழங்கியுள்ளார்.
வாரத்தில் செவ்வாய்க்கிழமையே சிகிச்சைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இங்கு நோயாளர்களைச் சந்தித்து பணம் அறவிட்டு ஆலோசனை வழங்கியுள்ளார். வாரங்களில் மூன்று தினங்கள் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது. இவ்வாறான செயற்பாடு சமாதானத்திற்கும் சமூகத்திற்கும் பாதிப்பானதாகும்.
கொவிட் 19 சுகாதார நிபந்தனையான சமூக இடைவெளி இங்கு பேணப்படவில்லை. சிகிச்சைக்காக பெரும் எண்ணிக்கையில் பெண்களும் வந்து சென்றுள்ளனர். அவர்களது கை நாடியைப் பிடித்து ஆலோசனை வழங்குகையில் பெரும்பான்மை இனப் பெண் ஒருவர் முறைப்பாடொன்றினைச் செய்திருந்தால் இன்றைய சந்தர்ப்பத்தில் அது முஸ்லிம் சமுதாயத்தையே பாதித்திருக்கும்.
நாட்டிலுள்ள சகல பிரதேச ஜமாஅத் சங்கங்களும் இவ்வாறானவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.