இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்புக்கு

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில், மக்கள் போராட்டங்களில் முன்னணி போராட்டக்காரராக திகழ்ந்த இஸ்மத் மெளவி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட அவர், எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள சி.சி.டி.யின் அதிகாரிகள் அவர்களை நேற்று ( 3) நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இந் நிலையில் அவர்களும் அடையாள அணிவகுப்புக்காக நாளை 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று நீதிமன்றுக்கு அறிவித்த பொலிஸார் அவர்களில் 11 பேர் பிணையில் இருப்பதாக அறிவித்தனர்.

இஸ்மத் மெளலவி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மன்றில் ஆஜராகும் நிலையில், இஸ்மத் மெளவி , தேசபந்து மீது தாக்குதல் நடாத்தப்படும் போது அப்பகுதியில் இருந்தமை உண்மை எனவும் எனினும் அவருக்கும் தாக்குதலுக்கும், அல்லது தாக்குதல் நடாத்தியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் வாதிட்டு பிணை கோரியிருந்தார். அத்துடன் பொலிஸார் அடையாள அணிவகுப்பை ஒருவரை விளக்கமறியலில் வைப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தி, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்

(எம்.எப்.எம்.பஸீர்) விடிவெள்ளி பத்திரிகை பக்கம் 01 – 4/8/2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter