இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் தங்களது யாத்திரை தொடர்பில் ஏதும் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் அவற்றை எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்குமாறு அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹஜ் யாத்திரிகர்கள் தங்களது பயண ஏற்பாடுகளை முன்னெடுத்த முகவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் மீறப்பட்டிருந்தால், சவூதி அரேபியாவில் குறிப்பிட்ட தங்குமிட வசதிகள் வழங்கியிராவிட்டால் அல்லது வேறு உறுதி மொழிகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் முறைப்பாடுகளை முன் வைக்கலாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் இலங்கைக்கு 1585 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. என்றாலும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 968 பேரே தங்களது பயணத்தை உறுதி செய்திருந்தனர். ஹஜ் யாத்திரையை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 73 ஹஜ் முகவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. என்றாலும் 9 முதன்மை முகவர் நிலையங்களுக்கே ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் 50 ஹஜ் முகவர்கள் 9 முகவர் நிலையங்களுடன் இணைந்து பயண ஏற்பாடுகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஹஜ் கட்டணம் முகவர் நிலையங்கள் வழங்கும் சேவைகளுக்கு அமைவாக 20 முதல் 25 இலட்சம் ரூபாவாக அமைந்திருந்தது.
968 பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதுடன் மேலதிகமாக 68 பேர் பேஸா விசாவில் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
விடிவெள்ளி பத்திரிகை 28/07/2022 பக்கம் 01