சர்வகட்சி அரசில் இணைய சிறுபான்மை கட்சிகளுக்கு இதுவரை அழைப்பில்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், சர்வ கட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்கு தங்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நேர்மையான சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவேண்டும். நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைகள் இதற்காக முன்னெடுக்கப்படவேண்டும். ஆனால் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு விடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தரகர்கள் மற்றும் ஏஜண்டுகள் மூலம் அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அரசியல் கட்சிகளிலிருந்து சிலரை பிடுங்கி எடுத்து ஆட்சி அமைப்பது சர்வகட்சி ஆட்சியாக அமையாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உறுப்பினர்களை பிடுங்கி எடுத்து ஆட்சியமைப்பது நேர்மையான ஆட்சியாகப் போவதில்லை.
உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் கட்சி அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
‘சர்வகட்சி அரசாங்கமொன்று அமைப்பது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை.சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ளதாக பத்திரிகைகள் ஊடாகவே அறிந்து கொண்டோம்.

உத்தியோகப்பூர்வ அழைப்பு கிடைக்கப் பெற்றால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் உயர்பீடம் ஒன்று கூடி கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ்
‘சர்வ கட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ளதாகவோ அதில் இணைந்து கொள்ளுமாறோ எங்கள் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு
சர்வகட்சி அரசாங்கத்துக்கு இதுவரை எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் எமக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்சியின் உயர் பீடம் மற்றும் கூட்டணியுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்பு நடைபெற்ற கட்சித்தலைவர்களின் விசேட கூட்டத்தின்போது சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் கருத்தினைக் கூறினார். எனினும் அதன் பின்னர் எந்த அழைப்பும் இல்லை என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 28/07/2022 பக்கம் 01

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter