வக்பு சபையின் செயற்பாடுகள் அமைச்சரினால் நிறுத்தம்

தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்த வக்பு சபையின் செயற்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கடிதம் மூலம் வக்பு சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள வக்பு சபை 2020 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதாகும். இதன் பதவிக்காலம் 3 வருடங்கள் எனினும் பதவிக்காலம் நிறைவுபெறுவதற்கு முன்பே வக்பு சபை கலைக்கப்பட்டுள்ளது.

2020 முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரை சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் வக்பு சபை செயலாற்றி வந்தது. இதன் ஏனைய உறுப்பினர்களாக ஏ.உதுமான் லெப்பை, ஸக்கி அஹமட், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், எம்.ரபீக் இஸ்மாயில், எம்.சிராஜ் அப்துல் வாஹிட் மற்றும் மெளலவி எம்.பஸ்ருல் ரஹ்மான் ஆகியோர் பதவி வகித்தனர்.

வக்பு சபையின் செயற்பாடுகள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்கவின் சார்பில் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அக் கடிதத்தில் தற்போதைய வக்பு சபை செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வக்பு சபைக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வக்பு சபையின் 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் பிரிவின் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வக்பு சபையின் செயற்பாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் சோமரத்ன தெரிவித்தார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 07-07-2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter