இலங்கையிலிருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளனர். தொடர்ந்து 30ஆம் திகதி ஜூலை மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில் ஹஜ் யாத்திரிகர்களைச் சுமந்து கொண்டு விமானங்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹஜ் முகவர் நிலையங்கள் பூர்த்தி செய்துள்ளன. இவ்வருடம் 1585 ஹஜ் கோட்டா சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் வழங்கப் பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 968 பேரே தங்கள் யாத்திரையை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 73 ஹஜ் முகவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.என்றாலும் 9 முதன்மை முகவர் நிலையங்களுக்கே ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனடிப்படையில் 50 ஹஜ் முகவர்கள் 9 ஹஜ் முகவர் நிலையங்களுடன் இணைந்து பயண ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கொண்டு அவர்கள் ஜூலை மாத இறுதியில் நாடு திரும்பவுள்ளதாக ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம்..ஹிசாம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இதேவேளை இவ்வருட ஹஜ் கட்டணம் முகவர் நிலையங்கள் வழங்கும் சேவைகளுக்கு அமைவாக 20 முதல் 25 இலட்சம் ரூபாவாக அமையும்.
ஹஜ் யாத்திரிகர்கள் தமது கடமையின் போது இலங்கை தாய்நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பக்கம் 01 – 23/6/2022