நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் இவ்வருடம் ஹஜ் யாத்திரை இடம்பெறமாட்டாது என்ற தீர்மானம் பொருத்தமானதாகும் என்றாலும் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தரப்பினரும் மார்க்க அறிஞர்களைக் கலந்துரையாடியிருக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவும்,பத்வா குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்ததன் பின்பு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் “நாட்டின் பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் மார்க்கம் தொடர்பான விடயங்களில் உலமாக்களுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதாக அமையாது என்றார்.
—
மூன்றாவது வருடமாகவும் இலங்கையர்களுக்கு ஹஜ் வாய்ப்பில்லை
டொலர் நெருக்கடியால் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் முகவர் நிறுவனங்கள் தீர்மானம்; சவூதிக்கும் அறிவிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வருடம் இலங்கையர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரையை முன்னெடுப்பதற்கு தேவைப்படும் பெருந்தொகை டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கியினால் முடியாதுள்ளதால், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளிலிருந்தும் ஹஜ் முகவர்கள் தவிர்ந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை வழங்கப்பட்டுள்ள கோட்டாவுக்கு அமைய சுமார் 1600 பேர் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரையை முன்னெடுப்பதாயின் சுமார் 6 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிபொருள் இறக்குமதிக்கே டொலர்களை ஒதுக்க முடியாத நிலையில், ஹஜ் யாத்திரைக்கென பெருந்தொகை டொலர்களை மத்திய வங்கியினால் வழங்க முடியாது என்பதன் காரணமாகவே இத் தீர்மானத்தை முகவர் சங்கங்கள் எடுத்துள்ளன.
ஹஜ் முகவர் சங்கங்கள் எடுத்துள்ள இத் தீர்மானம் குறித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தீர்மானம் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஹஜ் யாத்திரைக்கென சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 1585 கோட்டா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஹஜ் முகவர் சங்கங்களின் உறுப்பினர்கள் ஒன்று கூடினார்கள்.
இக்கூட்டத்திலே இவ்வருட ஹஜ் யாத்திரைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதில்லை என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸாருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் தங்களது புனிதமான கடமையை நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன் கருதி தியாகம் செய்துள்ளமை முன்மாதிரிமிக்க செயல் என இதன்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஹஜ் யாத்திரைக்கான முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் இது இனவாதத்தைத் தூண்டும் விஷமிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 02/5/2022 பக்கம் 01