எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக பஸ் சேவைகள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளின் விலைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டணங்களை திருத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் எண்ணெய் விலை மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
எரிபொருள் இறக்குமதி செலவுகள், தரையிறங்கும் செலவுகள், விநியோக செலவுகள் மற்றும் வரிக்குட்பட்ட விலைகள் மீள்திருத்தத்தில் உள்ளடங்கியிருந்த போதிலும், ஈவுத்தொகை மீள்திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.