இவன் முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ஒர் அசகாயசூரனாக, ரணில் விக்ரமசிங்ஹ மீண்டுமொருமுறை பிரதமராக பதவியேற்றிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ரணில், ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனையும் வெல்லாத நிலையில் தோல்வியடைந்திருந்தார்.
தனது அரசியல் வரலாற்றில் பாராளுமன்றம் செல்லாது ரணில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பம். அதோடு ரணில் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அவர்கள் நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்ற இழுபறியில் பலமாதங்களாக யாருமே நியமிக்கபடாது, ஆசனம் வெற்றிடமாகவே இருந்தது. கடைசியில் ரணில் விக்ரமசிங்ஹ அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டு, மீண்டும் பாராளுமன்றம் ஏகினார். ஒரே ஒரு ஆசனம், அதுவும் தேசியப்பட்டியல் ஆசனம், தனி நபராக ரணிலினால் என்ன செய்துவிட முடியும்!
ஆனால் இலங்கையின் கையறு நிலையோ, ரணிலின் தலையெழுத்தோ, தற்செயலோ, பெருந்திட்டத்தின் ஒரு பகுதியோ, எதுவானாலும், ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை, அதுவும் தேசியப்பட்டியல் அசனத்தைக் கொண்ட கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில், இன்று இலங்கையின் பிரதமர்! ரணில் பிரதமராகப் பதவியேற்றதை ஒரு சாரார் கண்டிக்கிறார்கள்.
அவர் ராஜபக்ஷூர்களைக் காப்பாற்ற பிரதமராகியிருக்கிறார் என்று சாடுகிறார்கள். தேசியப்பட்டியல் மூலம் ஒரே ஓர் ஆசனத்தைக்கொண்டு பாராளுமன்றத்துக்க வந்த ரணிலிற்கு பிரதமராகும் மக்களாணை இல்லை என்றும் சாடுகிறார்கள். ரணில், ராஜபக்ஷர்களைக் காப்பாற்றுகிறாரா, இல்லையா என்பது அவரவர் அபிப்ராயத்தின் பாற்பட்டது. ஆனால் ரணிலிற்கு ஆட்சியமைக்கும் மக்களாணை இல்லை என்பது தொழில்நுட்ப ரீதியில் சரியான கருத்து. ஆட்சியமைப்பதற்கான மக்களாணை என்பது 2020, ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்களால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமூனவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆகவே இன்றைய நிலையில் ஆட்சி அமைப்பதற்கான மக்களாணை யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால், தொழில்நுட்ப ரீதியில் ௮து மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே இருக்கிறது! ஆனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவி விலகிவிட்டார்.
பிரதமர் பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமரை நியமிக்க வேண்டிய பொறுப்பு, அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியைச் சார்ந்தது. பாராளுமன்ற ஜனநாயக மரபுகளின் படி, ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிதேமதாஸவை ஆட்சியமைக்க அழைத்திருந்தார். இந்த இடத்தில், சஜித் பிரேமதாஸ அதனை மறுத்திருந்தார்.
தான் பிரதமராகப் பதவியேற்ற வேண்டுமென்றால், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த இடத்தில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் நிறைய எழுகின்றன. முதலாவது, பிரதமராகப் பதவியேற்பதற்கு, ஜனாதிபதியை பதவி விலகுமாறு நிபந்தனை விதிக்க இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை. ஏனென்றால், இலங்கையில் ஜனாதிபதி நேரடியாக மக்களால், ஜனாதிபதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜனாதிபதிக்கென தனித்த மக்களாணை இருக்கிறது. அதுவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிட்டு சஜித் பிரேமதாஸ தோல்விகண்டிருந்தார். ஆகவே தான் பிரதமராக வேண்டுமென்றால், ஐனாதிபதி பதவிவிலக வேண்டும் என்று சஜித் கோரியதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது அரசியலமைப்பின் பாற்பட்டதொன்றல்ல! ஐனாதிபதியை பதவி நீக்குவதற்கென அரசியலமைப்பு ஒரு வழிவகையை வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட் சித்தலைவர், எந்த காரணத்திற்காகவேனும், தான் ஆட்சியமைக்க மறுக்கும்போது, ஐனாதிபதி, தன்னுடைய அபிப்ராயத்தின் படி. பாராளுமன்றத்தின் நம்பிக்கையைக்கொண்டவராக தான் கருதும் நபரொருவரை பிரதமராக நியமிக்க முடியும். அந்த அடிப்படையில் கோட்டாபய, ரணில் விக்ரமசிங்ஹவை பிரதமராக நியமித்தார். ரணிலிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, இந்த நியமனம் பிழை என்றால், பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், ரணிலை பிரதமர் பதவியிவிருந்து நீக்கலாம்! ஆகவே ரணிலிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதை பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்!
இலங்கை ஒரு இக்கட்டான சிக்கல் நிலையில் சிக்கி, திக்கி நிற்கிறது. பொருளாதார நிலையில் இலங்கை வங்குரோத்தாகிவிட்டது. இந்த வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்க வேண்டும். எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் என எல்லாவற்றிற்கும் கடுந்தட்டுப்பாடு நிலவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், பெரும்பான்மை மக்களின் ஒரே எதிர்பார்ப்பு இந்த நிலையிலிருந்து இலங்கையை யாராவது மீட்டு, எம்மைக் காப்பாற்றி விட மாட்டார்களா என்பதுதான். ஆகவே இந்த நிலையில் ஆட்சியமைப்பது என்பது, ஆட்சியமைக்கும் எவருக்கும், ஆட்சிக்கட்டிலில் சொகுசாக அமர்ந்து, உல்லாசம் கொண்டாடும் அனுபவமாக இருக்கப்போவதில்லை. இது மிகப்பெரும் பாரத்தை, 83 மில்லியன் மக்களின் வாழ்வை, உயிரை, நம்பிக்கையை, எதிர்காலத்தை தூக்கிச் சுமக்கும் கடினமான பணி. இலங்கை வரலாற்றில் இதுபோன்ற சவால் முன்பு ஒருபோதும் எழுந்ததில்லை. அந்தளவிற்கு மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது. ஆகவே இத்தகைய தீர்கமகானதொரு பொழுதில், அரசியல் செய்யாது, ரணில் இந்த ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியதொன்று என்றால் அது மிகையல்ல.
சஜித் பிரேமதாஸ, கோட்டா போகாவிட்டால், நான் பிரதமராக மாட்டேன் என்று சொல்லி தன்னை கொள்கைவாதியாக நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டி ருக்கலாம். ஆனால் நாடு வங்குரோத்து நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, இந்த கொள்கைப் பிடிவாதங்களால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. எனக்கேற்றாற்போல சூழ்நிலை அமைந்தால்தான் ஆட்சியமைப்பேன் என்பவன் தலைவன் அல்ல, அவன் சந்தர்ப்பவாதி. இதற்குக் கொள்கைச் சாயம் பூச இங்கு பலர் இருக்கிறார்கள்.
ஆனால் எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் என தட்டுப்பாடுகளின் மத்தியில் வரிசையில் காத்திருந்து களைத்துப்போயிருக்கும் சாதாரண குடிமகனுக்கு, ரணில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருப்பது புது நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ரணில் பிரதமரானதுமே, ரணிலை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் சந்தித்திருக்கிறார்கள். இந்தநாடுகளிடமிருந்து இன்னும் அதிக உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிற.து. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமும், உதவியும் கூட விரைவில் சாத்தியமாகலாம். இவையெல்லாம் நாடு மீண்டுவிடும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. வரலாறு காணாத சிக்கல் நிலையில் நாடு இருக்கிற போது மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பவன் நல்ல தலைவன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பெரும் பொறுப்பு ரணிலுக்கு இருக்கிறது. இதில் ரணில் வெற்றிகண்டால், வரலாறு ரணிலை மன்னிக்கும். ரணில் மீண்டுமொருமுறை மக்களைக் கைவிட்டால், வரலாறும், இந்நாட்டு மக்களும் ரணிலை ஒருபோது மன்னிக்கார்.
இந்த நிலையில் ரணில் அனைவரது ஆதரவையும், உதவியையும் கோரியிருக்கிறார். ரணிலை ஆதரிக்க மாட்டோம், ஆனால் எதிர்க்கவும் மாட்டோம் என்பதைத்தான் சுற்றுவளைத்து பல கட்சிகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டை விட்டு விட்டு, தகுதியுள்ளவர்கள், அமைச்சரவையில் இணைந்து, இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உதவுவதே சாலச்சிறந்ததொரு முடிவாகும்.
இல்லை நாம் சொன்னது சொன்னதுதான். நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, ஆனால் கோட்டா போகவிட்டால், நாடு அழிந்தால் கூட, நாம் ஆட்சிக்கு உதவிசெய்யமாட்டோம் என்பது உங்களை கொள்கைப்பிடிப்புள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள உதவலாம், ஆனால் அது நாட்டுக்கும், இந்தநாட்டு மக்களுக்கும் எந்தவொரு நன்மையையும் வழங்கப்போவதில்லை, கோட்டாவை மட்டுமல்ல, எந்தவொரு ராஜபக்ஷர்களையும் இந்நாட்டு மக்கள் மன்னிக்கப்போவதில்லை. ஆனால் கோட்டாவை எதிர்க்கிறோம் என்ற பேரலே, நாட்டுக்குத் தேவையானதொரு பொழுதில், நீங்கள் நாட்டுக்கு கைகொடுக்கவில்லை என்பதையும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்பதை பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வது அவசியம். இன்று கூட ரணில் தன் முயற்சியில் தோற்றுவிட வேண்டும் என்று இந்த அரசியல்வாதிகள் எண்ணலாம், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இந்த நிலையில் தனது முயற்சியில் ரணில் தோற்றால், தோற்பது ரணில் மட்டுமல்ல, இந்நாடும், இந்நாட்டு மக்களும், இந்நாட்டு மக்களின் வாழ்வும், எதிர்காலமும்தான். (N K Ashok Baran) Tamil-Mirror 16/5/22..