தாழ்ந்து பறக்கும் சிங்கள இனவாதத்தின் கொடி!

­2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஈட்டிய அமோக வெற்றி சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மூன்றாவது சிங்கள பௌத்த எழுச்சி என்றும், முன்னெப்பொழுதும் இருந்திராத பேரெழுச்சி என்றும் வர்ணிக்கப்பட்டது (முதலாவது, இரண்டாவது எழுச்சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்பெற்றிருந்தன).

இலங்கை இன்று எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிக்கான விதைகள் அந்த வெற்றியை அடுத்தே ஊன்றப்பட்டன. குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள இனவாதிகள், அத்துரலியே ரத்ன தேரர் போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் காவி உடைத் துறவிகளின் ஒரு குழுவினர், வியத்மக அறிஞர் குழாம் மற்றும் சிங்கள செய்தி ஊடகங்கள் ஆகிய நான்கு தரப்புக்கள் கட்டமைத்த போலித் தேசியவாத பெருமிதவுணர்வுடன் இணைந்த விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இனவெறி மற்றும் மதவெறிப் பிரச்சாரங்களின் மறைமுக மற்றும் நேரடி விளைவொன்றாகவே இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கின்றது.

சிங்கள – பௌத்த மக்களின் நலன்களை பேணுவது எப்படி என்ற விடயத்தை இந்தத் தரப்பினர் முற்றிலும் பிழையாக புரிந்து கொண்டதே இங்குள்ள பிரச்சினை. சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலமும், அவர்களுடைய மத உணர்வுகளை புண்படுத்துவதன் மூலமும், பல ஆண்டு காலம் அச்சமூகங்கள் அனுபவித்து வந்திருக்கும் தனித்துவமான கலாசார உரிமைகளை மறுப்பதன் மூலமும், பௌத்த மக்கள் எவரும் வாழாத முல்லைத்தீவு மற்றும் பாலமுனை போன்ற இடங்களில் புத்தர் சிலைகளைக் கொண்டு போய் வைப்பதன் மூலமும், கிழக்குக்கான தொல்லியல் செயலணி என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அடாவடித்தனமாக அபகரிப்பதன் மூலமும் சிங்கள மக்களின் நலன்களை நிறைவேற்றி வைக்க முடியும் என இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். அதன் ஊடாக அவர்கள் இலங்கைச் சமூகத்தை பெரும்பான்மை – சிறுபான்மை என இரு பிரிவுகளாக பிளவுபடுத்தினார்கள்.

இந்த இனவாதக் கோஷங்களின் பேரோசையும், சிங்கள பௌத்த பெரஹராவின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் சாதாரண சிங்கள மக்களின் காதுகளையும், கண்களையும் அடைக்கச் செய்திருந்தன. இந்தக் களேபரத்தில் இலங்கைத் தீவு சர்வதேச ரீதியில் படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்டு வருவதனையும், அது மிக வேகமாக தனது நண்பர்களை இழந்து வருவதனையும் எவராலும் பார்க்க முடியவில்லை.

இந்த வெற்றுக் கூச்சல்கள் இதுவரையில் தமக்கு அழிவைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தரவில்லை என்பதனை சிங்கள மக்கள் சற்றுத் தாமதமாக இப்பொழுது புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் புரிதலை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் செலுத்தியிருக்கும் விலை தான் இன்றைய இலங்கையின் நெருக்கடி.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றில் முதல் தடவையாக இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரிக்கும் விதத்திலான ஒரு சிந்தனை மாற்றம் பரந்த சிங்கள சமூகத்தில் மெதுவாக, ஆனால் உறுதியாக நிகழ்ந்து வரும்; ஒரு பின்புலத்தில், இலங்கையின் இன்றைய நெருக்கடியை அலசுகிறது இக்கட்டுரை.

ஏப்ரல் மாதம் சிங்கள மக்களை பொறுத்தவரையில் குதூகலமும், கொண்டாட்டங்களும் நிறைந்த ஒரு மாதம். நெல் அறுவடைக்கு பின்னர் சாதாரண மக்களின் கைகளில் காசு புழங்கும் காலம். தமது பாரம்பரிய புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்கு அவர்கள் வித விதமான உணவுப் பண்டங்களையும், உடு துணிகளையும், பரிசுப் பொருட்களையும், வீட்டுக்குத் தேவையான தளபாடச் சாமான்களையும் வாங்குவது வருடாந்த வழமை. அந்தக் கொள்முதல்களுக்கென தமது ஆண்டு வருமானத்தில் சுமார் கால்வாசிப் பகுதியை இந்த மாதத்தில் அவர்கள் செலவிடுவார்கள்.

ஆனால், இந்தத் தடவை எல்லாமே தலைகீழ். கொண்டாட்டங்களின் பூமியாக மாற வேண்டிய சிங்களப் பெருநிலம் கொந்தளிப்புக்களின் பூமியாக மாறியிருக்கின்றது.
விலைவாசிகளில் பன்மடங்காக ஏற்பட்டிருக்கும் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்த விதத்தில் பதுக்கல் வியாபாரம் மற்றும் கறுப்புச் சந்தை என்பன நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளன. 1970 களின் பின்னர் பிறந்த தலைமுறையினர் தமது வாழ்நாளில் முதல் தடவையாக இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்களின் ஆவேசமும், விரக்தியும் தன்னியல்பாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் இரு சொற்களை அவர்கள் அதிகம் அதிகம் இப்பொழுது உச்சரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஒன்று ‘பரிப்புவக் கேவா’ என்பது (‘பருப்பு கணவா’ என்ற சிங்களச் சொல் ‘நம்பி மோசம் போனோம்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘நாங்களாகவே தேடிக் கொண்ட கேடு’ என்றும் சொல்லலாம்). அதே நேரத்தில், ராஜபக்ஷ அரசாங்கத்தை வசைபாடுவதற்கு மட்டுமன்றி முன்சொன்ன நான்கு தரப்புக்களை சபிப்பதற்கும் அவர்கள் ‘காலகண்ணி’ என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள் (‘காலகண்ணி’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘படு பாவிகள்’ என்ற விதத்தில் பொருள் கொள்ளலாம்).

இங்குள்ள விசேஷம் தமிழர்களும், முஸ்லிம்களும் ஏற்கனவே ‘தின்றிருக்கும் பருப்பை’ இப்பொழுது சிங்கள மக்கள் தின்றிருக்கிறார்கள் என்பதுதான். அதாவது, தேர்தல்களில் வாக்குகளை அள்ளிக் கொள்வதற்காக இனவாதத்தை தூண்டி, மக்களை உசுப்பேற்றி முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் இறுதியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழிவை மட்டுமே எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை ஏற்கனவே தமிழர்களும், முஸ்லிம்களும் படித்திருக்கின்றார்கள். இப்பொழுது சிங்களவர்களின் முறை வந்திருக்கின்றது.

இன்று நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிறப்பம்சம் அவை முழுக்க முழுக்க சிங்கள மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகும். இனவாதிகளும், சிங்கள ஊடகங்களும் உருவாக்கிய சமூகப் பிளவின் (Ethnic Polarisation) ஒரு பிரதிபலிப்பாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி இன மத பேதமில்லாமல் எல்லோரையும் மிகவும் மோசமான விதத்தில் பாதித்திருந்த போதிலும், தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலோ அல்லது பெருந்தோட்டப் பிரதேசங்களிலோ குறிப்பிடத்தக்க அளவிலான அரச எதிர்ப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

‘இது அவர்கள் வலிந்து தேடிக்கொண்ட ஒரு நெருக்கடி. அதனால் அவர்களே இதனை தீர்த்துக் கொள்ளட்டும்’ என்ற விதத்திலான ஒரு அலட்சிய மனப்பாங்கு சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் நிலவி வருவது போல் தெரிகிறது.

‘இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது அரச எதிர்ப்பு செயற்பாடுகளிலோ பங்கேற்பதை முஸ்லிம்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற விதத்தில் ஒரு சில முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள் மற்றொரு சுவாரசியம். அத்தகைய ஒரு வேண்டுகோள் தேசிய நீரோட்டத்திலிருந்து தம்மை அன்னியப்படுத்தக்கூடியதாக இருந்து வந்த போதிலும், இந்த அரச எதிர்ப்பு அலைகள் எந்த ஒரு நேரத்திலும் தமக்கு எதிராக திருப்பி விடப்பட முடியும் என்ற அச்சம் காரணமாக முஸ்லிம்கள் அப்படியான ஒரு அணுகுமுறையை எடுத்திருக்க முடியும்.

சிங்கள மக்களின் எழுச்சி இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது சிங்கள – பௌத்த எழுச்சி 1956 இல் ஏற்பட்டது. தமிழர்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் ஊடாக அந்த எழுச்சி ‘தமிழர்களுக்கு எதிரானது’ என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள் சிங்கள இனவாதிகள். யாழ்ப்பாணத்தில் 1958 இல் வாகன இலக்கத் தகடுகளில் தமிழ் ‘ஸ்ரீ’ எழுத்து பொறிக்கப்பட்ட பொழுது மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி 1956 இன் அரசியல் மாற்றம் சிங்கள மொழியின் எழுச்சியின் ஒரு குறியீடு என்பதையும், அங்கு தமிழ்மொழிக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

2010 இல் போர் முடிவை அடுத்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றியை சிங்கள – பௌத்த மக்களின் இரண்டாவது எழுச்சி என்று சொன்னார்கள் அவர்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் நேரடி எதிரியாகவும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த தமிழ்ச் சமூகம் மறைமுக எதிரியாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தல் இந்தப் போக்கின் உச்ச கட்டமாக இருந்தது. கோத்தாபய ராஜபக்ச தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ சிங்கள மக்களின் நேரடி எதிரியாகவும், இலங்கை முஸ்லிம் சமூகம் மறைமுக எதிரியாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.

‘சிங்கள மக்களின் நலன்கள்’ என்ற தலைப்பு இலங்கையில் 2010 இன் பின்னரேயே பகிரங்க உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எதனை பொது வெளியில் பேசுவது, எதனை தனிப்பட்ட உரையாடல்களின் போது பேசுவது என்ற சூட்சுமத்தை அறிந்திராத ஒரு சில சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த ‘இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு இல்லாமல் எவரும் அரச தலைவராக வர முடியாது; யாரும் அரசாங்கம் அமைக்க முடியாது’ என்ற வாதம் இறுதியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கே வினையாக வந்து முடிந்தது. 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அந்த வாதத்தை பொய்யாக்கின.

அந்த திருப்புமுனை நிகழ்வு 2010 இன் பின்னர் இலங்கை அரசியலில் பெரும்பான்மை – சிறுபான்மை இயங்கியலை வடிவமைப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. மகிந்த ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை சித்தாந்த ரீதியில் வடிவமைத்துக் கொடுத்த நளின் டி சில்வா, குணதாச அமரசேகர, கெவிந்து குமாரதுங்க போன்ற தேசியவாதிகள் சிங்கள மக்களின் இந்த எழுச்சித் தருணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தொடர்ந்தும் பரப்புரை செய்து வந்தார்கள். ‘சிறுபான்மை கட்சிகள் இனிமேலும் சிங்கள மக்களை பணயக் கைதிகளாக எடுத்து, காரியம் சாதித்துக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் நளின் டி சில்வா தொடர்ந்து எழுதி வந்தார். அரசியல் மேடைகளை பயன்படுத்தி அந்தக் கருத்தை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் போன்ற தரப்பினர். அந்த எண்ணத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் கணிசமான ஒரு பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பதனை இங்கு ஒரு மேலதிக தகவலாக குறிப்பிட வேண்டும்.

2010 – 2015 மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஊழல்களும், முறைகேடுகளும் மலிந்த ஒரு அரசாங்கமாக இருந்து வந்த போதிலும், அதை சிங்கள தேசியவாதிகள் கண்டும் காணாமலும் இருந்தார்கள். அதற்கு அவர்கள் வெளியில் சொல்லாத காரணம் ‘அப்படியான கடுமையான ஒரு விமர்சனம் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை பலவீனப்படுத்த முடியும்’ என்பது.
‘ஒரு மாபெரும் நீரோட்டம் சேற்றையும், சகதியையும் அள்ளிச் செல்வது சகஜம்’ என்று சொல்லி, அதனை எளிதில் கடந்து சென்றார் நளின் டி சில்வா. ஆனால், இன்றைய நெருக்கடியை அப்படிக் கடந்து செல்ல முடியாது என்பதனை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

சிங்கள மக்களின் ஆவேசத்தைப் பார்த்து இனவாதிகளும், தேசிய வாதிகளும் கதி கலங்கி நிற்கிறார்கள். தமது குற்ற உணர்ச்சியை மறைத்துக் கொள்வதற்காக எதிர்க் கட்சியுடன் சேர்ந்து இவர்களும் ராஜபக்சகளை வசை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்றைய இலங்கையின் நெருக்கடியை தீவிரப்படுத்திய பல பிழையான முடிவுகளை எடுப்பதற்கு ஜனாதிபதியை தூண்டியவர்கள், அவர் மீது அழுத்தம் பிரயோகித்தவர்கள் இதே ஆட்கள் தான்.

கோத்தாபய ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசு எந்ததெந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்றும், ஒரு போதும் செய்ய மாட்டாது என்றும் இவர்கள் உரத்துச் சொல்லி வந்தார்களோ, இப்பொழுது அந்தக் காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு பலவீனமடைந்திருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மண்டியிட வேண்டிய துர்ப்பாக்கியம்; சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் மன்றாடி, உதவிகளை யாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம்; சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் ‘பிச்சைக்கார நாடு’ என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் பங்களாதேஷின் கதவுகளைத் தட்டி, கடன் கேட்டு நிற்கும் சிறுமை; மத்திய கிழக்கு நாடுகளுடனான நட்புறவுகளை புதுப்பித்து, பலப்படுத்திக் கொள்வதற்கென ராஜதந்திர ரீதியிலான இரகசிய நகர்வுகள்; ‘ஏகாதிபத்தியவாதத்தின் அடிவருடி’ என இவர்களால் வர்ணிக்கப்பட்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெற்றிலை வைத்து அழைத்து, பொருளாதாரத்தை மீட்டெழுப்புவதற்கு யோசனை கேட்க வேண்டிய அளவுக்கு வாசல் வரையில் வந்திருக்கும் வெள்ளம்.

நாட்டை இந்த நிலைக்கு தள்ளி விடுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த வீரவன்ச – கம்மன்பில சோடியையும் உள்ளடக்கிய பலர் இப்பொழுது திடீரென நேரெதிர் திசையில் நின்று, ‘ராஜபக்சாக்களை ஒழித்துக் கட்டுவோம்’ என தொண்டை கிழியக் கத்துவது தான் வரலாற்றின் மாபெரும் முரண்நகை.

சிங்கள செய்தி ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சரிந்து வரும் ‘Ratings’ களை உயர்த்திக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக ‘தெரண’ மற்றும் ‘ஹிரு’ போன்ற ஊடகங்கள் ஒரு போலி அரச எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன.

1987 ஏப்ரல் – மே காலப் பிரிவில் ஜே. ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு எந்த அளவுக்கு பலவீனமடைந்திருந்ததோ அதே அளவுக்கு இப்பொழுதும் பலவீனமடைந்திருக்கிறது. இதற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும் ஒரு காரணம். 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதியாக முடி சூடிக்கொண்ட ஜே ஆர் .ஜயவர்தன, ஓர் ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர, தன்னால் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியுமென ஆணவத்துடன் சொன்னார்.

1983 கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் வரையில், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடி அழிக்கப்படும் வரையில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். யூலை 24 ஆந் திகதி மாலை பொரள்ளையில் தோன்றிய கலவரம், அதன் உச்ச கட்டத்தை அடைந்திருந்த நிலையில் 28ஆம் திகதி அரச தொலைக்காட்சியில் தோன்றி எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாத தொனியில் இனவாதிகளுக்கு மேலும் தூபமிடும் விதத்தில் அவர் நிகழ்த்திய உரை, இலங்கை ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு பெரும் கறை. அந்த ஆணவமே அடுத்து வந்த சில ஆண்டுகளில் இலங்கை ஆசியாவின் மிகப் பெரும் கொலைக் களமாக மாறுவதற்கு வழிகோலியிருந்தது.

1983 கலவரத்தை அடுத்து ஜே. ஆர். தூரநோக்கற்ற விதத்தில் ஜேவிபி இயக்கத்தை தடை செய்ததுடன் இணைந்த விதத்தில், அக்கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஒரு முறை தலைமறைவாகின்றார்கள். அதனையடுத்து 1987 – 1989 கால கட்டத்தில் நாட்டில் ஓடிய இரத்த ஆறு வரலாற்றின் மற்றொரு ஆறாத வடு. அதற்கு வழிகோலியவர் அதிகார மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்த ஜே. ஆர். ஜயவர்தன.

இலங்கை அரசு பலவீனமாக இருந்த அந்தத் தருணத்தை பயன்படுத்திய ராஜீவ் காந்தி ஜே.ஆரை மிரட்டி, அடிபணிய வைத்தார். 1987 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, யாழ் தீபகற்பத்தில் 25 தொன் உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வான்வழியாக வீசி எறிந்து, இலங்கையின் இறைமையை அவமதித்த பொழுது சர்வ வல்லமை பொருந்திய ஜே. ஆர். ஜயவர்தன அதனை வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்றைய இலங்கை மீண்டும் ஒரு தடவை 35 ஆண்டுகள் பின்நோக்கி 1987 க்கு சென்றிருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடங்களை படிக்காதவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் தண்டித்துக் கொண்டே இருக்கும் என்ற கூற்றின் பிரகாரம், இலங்கையை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்தியா அடிபணிய வைத்திருக்கின்றது. அண்மையில் அது இலங்கைக்கு வழங்கிய டொலர் கடன் தொகை மற்றும் வெளியில் சொல்லப்படாத அது குறித்த நிபந்தனைகள் அனைத்தும் அதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டும் சான்றுகள்.

சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை வரலாற்றில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இத்தகைய காரியங்களுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ‘தமிழர்களின் விடுதலை’ என்றால் என்ன என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கமும் இதே விதத்தில் தப்பாக புரிந்து கொண்டிருந்தது. முஸ்லிம் மக்கள் பல நூறாண்டு காலம் வாழ்ந்து வந்த பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அவர்களை துரத்தியடிப்பதன் மூலமும், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதன் மூலமும், தென்னிலங்கையில் கெப்பித்திகொல்லாவையிலும், புத்தளையிலும் வறிய சிங்கள மக்களை இலக்கு வைத்து பேருந்துகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலமும், இத்தகைய கொடூரங்களை துணிவுடன் தட்டிக் கேட்க முன்வந்த தமது இனத்தையே சேர்ந்த புத்திஜீவிகளையும், மிதவாத அரசியல் தலைவர்களையும் ‘போட்டுத் தள்ளுவதன்’ மூலமும்; தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியுமென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை இறுதியில் எந்த மாதிரியான அழிவுகளை எடுத்து வந்திருந்தது என்பதனை நாங்கள் பார்த்தோம். தமிழ் அரசியலையும், தமிழ் சமூகத்தையும் 50 ஆண்டுகள் பின்னால் கொண்டு சென்று வைத்து விட்டு 2009 இல் களத்திலிருந்து வெளியேறினார்கள் அவர்கள்.

ஓர் அரச தலைவர் காழ்ப்புணர்ச்சியுடனும், வக்கிர புத்தியுடனும் செயல்பட்டால், தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தால் அது எத்தகைய விளைவுகளை எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை கோட்டாபய ராஜபக்ச, ஜே.ஆர் ஜயவர்தனவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கண்ணியமாக வெளியேறிச் செல்லக் கூடிய வாய்ப்பு (Diginified Exit) ஜே ஆருக்கு கிடைக்கவில்லை. இரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டை, பார்க்கும் இடங்களிலெல்லாம் பிணக் குவியல்கள் தென்படும் ஒரு நாட்டை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ‘Legacy’ யாக அவர் விட்டுச் சென்றார்.

இந்த நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி முதலாவதாக செய்ய வேண்டிய காரியம் இந்த நெருக்கடியை திடசங்கற்பத்துடன் எதிர்கொண்டு, கடந்து செல்வதற்கு மக்களை தயார்படுத்தும் பொருட்டு சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்ற முறையில் ஓரணியில் திரள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதாகும். ஆனால், அவருக்கு உரைகளை எழுதிக் கொடுக்கும் ஆலோசகர்கள் தேசிய ஒற்றுமை, இன ஐக்கியம், இலங்கை ஒரு பல்லின, பல் கலாசார நாடு போன்ற சொற்களை இதுவரையில் வேண்டுமென்றே தவிர்த்து வந்துள்ளார்கள்.

இரண்டாவதாக, அரசாங்கத்தின் ஒரு சில தரப்புக்கள் மற்றும் அரச ஆதரவு செய்தி ஊடகங்கள் என்பன கடந்த இரண்டரை ஆண்டுகளில் முன்வைத்து வந்திருக்கும் பகுத்தறிவுக்கும், யதார்த்தத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாத பரப்புரைச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் மிக மோசமான இனவாத / மதவாத பிரச்சாரங்களை மட்டற்ற விதத்தில் முன்னெடுத்து வந்திருக்கும் புத்த பிக்குகளையும் உள்ளடக்கிய அனைத்துப் தரப்புக்களுக்கும் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்து வந்தாலும் சரி ‘சட்டம் அவர்கள் மீது பாயும்’ என்ற செய்தி தெளிவாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆட்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கு உசிதமான ஒரு சூழல் நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ளது என்ற விடயம் இதற்கான ஒரு கூடுதல் அனுகூலம்.

சுதந்திரத்திற்கு பின்னர் முதல் தடவையாக சிங்கள இனவாதிகளின் கொடி மட்டுமல்லாமல் தமிழ் இனவாதிகளின் கொடியும், முஸ்லிம் இனவாதிகளின் கொடியும் ஒரே நேரத்தில் மிக மிக தாழ்ந்து பறக்கும் ஒரு யுக சந்தியில் நாங்கள் நின்றிருக்கிறோம். அந்தக் கொடிகள் அவ்வண்ணம் மிக மிக தாழ்ந்து பறக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் பிரார்த்தனை. ராஜபக்சாக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள இனவாதத்தின் கொடியை ஏந்திப் பிடிப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பையும் உள்ளிட்ட எவருக்கும் சிங்கள மக்கள் இனிமேலும் ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து, ஒரே குரலில் பேசும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கு உசிதமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்குவது இன்றைய நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய முதல் முன்னுரிமையாக உள்ளது. அந்த நிலையிலேயே ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி, எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நிம்மதியாக, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியும்.
அந்த மாற்றத்திற்கான பயணத்தை சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து முன்னெடுப்பதற்கான வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்திருக்கிறது என்பதன் குறியீடே இன்றைய மக்கள் எழுச்சி.

எம்.எல்.எம். மன்சூர் – விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 07 – 28-4-2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter