சில வேளைகளில் வரலாறு விசித்திரமானது, சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், இன்று அதே தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விந்தையானது.
இந்தக் கொடூர தாக்குதலைப் பயன்படுத்தி பதவிக்கு வந்த இந்த அரசாங்கத்துக்கு, மூன்று மாதங்களுக்கு மேல் நிம்மதியாக பதவியில் இருக்க முடியவில்லை என, சனிக்கிழமை (09) நீர்கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் போது, கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கூறினார்.
அதேவேளை, “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சாபமே, இந்த அரசாங்கத்தை பிடித்துள்ளது” எனப் பெளத்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெலகம, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.
அன்று இந்தத் தாக்குதலைப் பாவித்து, இஸ்லாத்தை ஒர் அரக்க சமயமாகவும் முஸ்லிம்களை மிலேச்சத் தனம்மிக்க சமூகமாகவும் சித்திரித்து, சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையே, அத்தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்ற தோரணையிலேயே, கார்தினாலும் கிறிஸ்தவ மக்களும் இன்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அன்று, நாட்டை யாரோ கைப்பற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் போல், நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவென கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் வாக்களித்த மக்களே, இன்று வீதியில் இறங்கி இரவிலும் பகலிலும் கடும் மழையிலும், அதே தலைவரிடமிருந்தும் அதே அரசாங்கத்திடமிருந்தும் நாட்டை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
அன்று, பொதுஜன பெரமுனவினரின் இனவாதப் பிரசாரங்களைத் தலைமேல் ஏற்று, அவர்களுக்கு வாக்களித்தவர்களில் பலர் இன்று, “ராஜபக்ஷர்கள் திருடர்கள்” என்றும் இனிமேல் தாம் இனவாதப் பிரசாரங்களுக்கு இரையாகப் போவதில்லை என்றும் கோஷம் எழுப்புகின்றனர்.
அன்று இனவாதப் பிரசாரங்களால் உந்தப்பட்டு, இலட்சக் கணக்கு ரூபாயைச் செலவழித்து, கோட்டாபயவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள், இன்று அதே கோட்டாபயவுக்கு எதிராகத் தாம் வாழும் நாடுகளில் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
உண்மையிலேயே, இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அரசாங்கம், இதுவரை பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு தேடி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதில்லை எனக் கூறி வந்தது. ஆனால், இப்போது வேறு வழியின்றி, அந்நிதியின் மீதே முழு எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறது.
அமைச்சரவைக்கு வெளியே அரசாங்கத்தை விமர்சித்ததற்காக ஜனாதிபதி, மார்ச் மூன்றாம் திகதி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவையும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மக்கள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கவே, அந்த இருவரும் உள்ளிட்ட, தமக்கு தேர்தலில் வெற்றி பெற உதவிய 11 சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் ஏப்ரல் மூன்றாம் திகதி, ஐனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்கள், “பல கட்சி அமைச்சரவையை அமைத்து, சகல கட்சிகளினதும் கருத்துகளை அறிந்து, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்” எனக் கூறியிருந்தனர். அதன்படி, ஜனாதிபதி அன்றே பிரதமர் தவிர்ந்த, தமது அமைச்சர்களை இராதினாமாச் செய்யுமாறு பணித்து, மறுநாள், அமைச்சரவையில் இணையுமாறு நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்:
இதில் உள்ள விசித்திரமானதோர் அம்சம் என்னவென்றால், அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்று வெளியேற்றிய இரண்டு அமைச்சர்களின் ஆலோசனைப்படி, அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரையும், ஜனாதிபதி பதவி துறக்கச் செய்யதமையாகும். இது, அரசாங்கத்தின் தோல்வி அல்லாமல் வேறொன்றுமல்ல.
அதேவேளை, நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிர்க்கட்சிகளே காரணம் என, அரசாங்கம் இ (துவரை காலமும் கூறி வந்தது. ஆனால், இப்போது ஐனாதிபதி தமது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு, அந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுவும் அரசாங்கம், தனது இயலாமையை ஏற்றுக் கொண்டமையின் வெளிப்பாடேயாகும்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உதவியை நாடிய போதிலும், இன்னமும் அக்கட்சிகள் எதுவும் அமைச்சரவையில் இணைய முன்வரவில்லை. மற்றொரு விந்தையான விடயம் என்னவென்றால், மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் உத்தியாக, தற்காலிக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறிய விமல், கம்மன்பில ஆகியோராவது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க முன்வரவில்லை.
அமைச்சுப் பெறுப்புகளை ஏற்க அவர்களுக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால், மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, நிலைமை மாறலாம் என்ற அச்சத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள், அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க முன்வராததால், தாம் நகைப்புக்குள்ளாகலாம் என்ற அச்சத்தாலும் அவர்கள் ஒதுங்கி இருப்பதாகவும் கருத முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறும் அரசாங்கத்தின் முடிவை, மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் விரும்பவில்லை. அத்தோடு, நாட்டின் நிலைமையைச் சீர்செய்யத் தம்மால் முடியாது என்பதையும் அவர் உணர்ந்தார். அதனாலேயே, அவர் அமைச்சர்கள் சகலரும் இராஜினாமாச் செய்தவுடன் அமைச்சர்களைப் பின்பற்றி, தாழும் இராஜினாமாச் செய்வதாகக் கூறி பதவி விலகினார்.
கடந்த வாரம், அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியதை அடுத்து, ஐனாதிபதி தற்காலிகமாக நான்கு அமைச்சர்களை நியமித்தார். நிதி அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அலி சப்ரி, மறுநாள் இராஜினாமாச் செய்தார். ஆனால், ஜனாதிபதி அவரது இராஜினாமாவை ஏற்கவில்லை. எனினும், ராஜபக்ஷ குடும்பத்தின் நீண்ட கால நண்பரான கப்ராலின் இராஜினாமாவை ஐனாதிபதி ஏற்றார்.
அதையடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநராக இருந்து ஒய்வு பெற்று அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதி நியமித்தார். பதவியேற்றவுடன் கருத்து வெளியிட்ட கலாநிதி வீரசிங்க, “வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திப்போடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமே கூறியிருந்தேன். ஆனால், அதைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கவில்லை. அந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு, ஒரு மாதத்துக்கு முன்னர் ஐனாதிபதி ஆலோசனை வழங்கி இருந்தும், அந்த விடயத்தில் எதுவும் நடந்ததாக தெரியவில்லை” என்றும் கூறினார்.
இந்த விடயத்தை தாமும் முன்கூட்டியே கூறியதாகவும் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை என்றும் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரியும் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறினார்.
அவ்வாறாயின், கடன் பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ள இருக்கும் ஒரே வழியை, இவ்வளவு காலம் தடுத்துக் கொண்டு இருந்தவர்கள் யார்? அவர்கள் நாடு இப்போது தள்ளப்பட்டு இருக்கும் நெருக்கடி நிலைக்கு பொறுப்பை ஏற்பார்களா? இல்லை, பொறுப்புக்கூறல் என்பது இலங்கைக்கு அந்நியமானதாயிற்றே!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக இருந்தால், மத்திய வங்கியின் விடயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கூறினார். புதிய நிதி அமைச்சரும் அரசியல் ஸ்திரத்தன்மையை வலியுறுத்தினார். இது ஜனாதிபதியின் பொறுப்பாகும்.
ஆனால், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை, ஜனாதிபதி எவ்வாறு கொண்டுவருவார் என்பது விளங்கவில்லை, ஒருபுறம் கட்சிசார்பற்ற இளைஞர்கள் ஐனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இராஜினாமாவைக் கோரி, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தொடர்ச்சியாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் அவர்கள் கடந்த ஐந்து நாள்களாக, கூடாரமிட்டுக் கொண்டு இராப்பகலாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறானதொரு நிலைமை, வரலாற்றில் ஒரு காலத்திலும் இருக்கவில்லை.
அதேவேளை, ஒன்றுக்கொன்று முரணான அரசியல் கருத்துகளையும் பல்வேறுபட்ட தனிப்பட்ட நோக்கங்களையும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து, பல கட்சி இடைக்கால அமைச்சரவையை அமைக்க ஐனாதிபதி முயல்கிறார். அதற்கும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களை நியமிக்க மாட்டார்கள் போல்த்தான் தெரிகிறது.
எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஐனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையையும் கொண்டு வரத் தயாராகின்றன. திங்கட்கிழமை (01) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “தற்போதைய மின்சார நெருக்கடிக்கு எதிர்க்கட்சிகளே காரணம்” என்றார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள், கூட்டு அமைச்சரவைக்காக அரசாங்கத்துடன் இணைவது சாத்தியமில்லை.
அவ்வாறாயின், ஜனாதிபதி எவ்வாறு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவார்? எவ்வாறு கடன் சுமைக்கு பரிகாரம் கண்டு, அதன் மூலம் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்? வெல்கம எம். பி கூறியதைப் போல், “இது சாபமா”? ஏனெனில், துறைசார் நிபுணர்களும் தடுமாறும் நிலைமையாகும்.
M.S.M அய்யூப் (தமிழ்-மிரர் 13/4/2022)