இள வயது திருமணம் : முஸ்லிம் – சிங்கள பிரச்சினையல்ல தேசியப் பிரச்சினை

வறுமை, பாரம்­ப­ரியம் மற்றும் பாலின சமத்­து­வ­மின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­களால் இலங்கை முழு­வதும் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான இளம் பெண்­க­ளுக்கு, உரிய வயதை அடை­வ­தற்கு முன்­ன­ரா­கவே அவர்­க­ளது பெற்றோர் திரு­மணம் செய்து வைக்­கின்­றனர். இது இளம் பெண்­களின் வாழ்க்­கையை படு­கு­ழியில் தள்­ளி­வி­டு­கி­றது.
இலங்­கையில் சிறுவர் திரு­ம­ணங்கள் பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் முஸ்­லிம்கள் மீதே அதிக கவனம் செலுத்­தி­யுள்­ளன. ஆனால், உண்­மையில் சிறுவர் திரு­மணப் பிரச்­சினை முஸ்லிம் அல்­லது சிங்­களப் பிரச்­ச­ினை­யல்ல, இது ஒரு தேசியப் பிரச்­சினை என்­பதை ஆதா­ரங்கள் காண்­பிக்­கின்­றன.

அநு­ரா­த­புரம் மாவட்­டத்தை மையப்­ப­டுத்­திய ஆய்வு

2021ஆம் ஆண்டில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில், ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் திலினி அகம்­பொடி தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்ட ஆய்­வி­லேயே இந்த விட­யங்கள் தெரிய வந்­துள்­ளன.

அநு­ரா­த­புரம் மாவட்­டத்­தி­லுள்ள சகல பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்கும் வகையில் 3374 கர்ப்­பிணித் தாய்­மார்கள் மத்­தியில் இந்த ஆய்வு நடாத்­தப்­பட்­டுள்­ளது. இவர்­களில் மூன்று மாதங்­களில் 254 இள வய­தினர் கர்ப்பம் தரித்­துள்­ளனர். இதற்­க­மைய இம் மாவட்­டத்தில் மாத்­திரம் ஒரு வரு­டத்தில் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான இள வயது பெண்கள் கர்ப்­ப­மு­று­கின்­றனர்.

ஆய்வில் பங்­கேற்­ற­வர்­களில் 1041 பேர் முதன் முறை­யாக கர்ப்பம் தரித்­த­வர்­க­ளாவர். இந்த 1041 பேரில் 233 பேர் இள வய­தினர். குறிப்­பாக இம் மாவட்­டத்தில் உள்ள பலு­கஸ்­வெவ, பத­விய மற்றும் விலாச்­சிய ஆகிய கிரா­மங்­களில் முதன் முறை­யாக கர்ப்பம் தரித்­த­வர்­களில் மூன்றில் ஒரு பங்­கினர் இள வய­தி­ன­ராவர்.

இந்த ஆய்வின் போது இவர்­க­ளது உடல் மற்றும் உள ஆரோக்­கியம் குறித்தும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன. இதற்­க­மைய, இவர்­களில் 44 வீத­மான இள­வ­ய­தினர் அதிகம் கவ­லை­யுற்­ற­வர்­க­ளாக இருந்­தனர். 41 வீத­மானோர் இந் நிலை­மைக்கு தம்­மைத்­தாமே குற்­றஞ்­சாட்­டினர். 9 வீத­மானோர் தமது நிலைமை பரி­தா­ப­க­ர­மா­னது எனத் தெரி­வித்­தனர். இவர்­களில் 17 பேர் தமக்குத் தாமே தீங்­கி­ழைத்துக் கொள்­வ­தற்கு எண்­ணி­ய­தா­கவும் இவர்­களில் 11 பேருக்கு கடந்த 2 வாரங்­க­ளுக்குள் இந்த எண்ணம் தோன்­றி­ய­தா­கவும் பதி­ல­ளித்­துள்­ளனர். உடல் ஆரோக்­கி­யத்தைப் பொறுத்­த­வரை இவர்­களில் மூன்றில் ஒரு பங்­கினர் ஊட்­டச்­சத்துக் குறை­பாட்­டி­னாலும் 18 வீத­மானோர் இரத்தச் சோகை நோயி­னாலும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­களில் இருவர் தாம் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் எண்மர் உள ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­கவும் ஆறு பேர் கர்ப்பம் தரித்­தி­ருந்த காலப்­ப­கு­தியில் உடல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.
இவர்­க­ளது கல்வி அறிவு குறித்தும் இந்த ஆய்வு கவனம் செலுத்­தி­யது. இதற்­க­மைய இவர்­களில் அதி­க­மான இள வய­தினர் 11 ஆம் தரத்­துக்கு மேல் கல்­வியைத் தொட­ர­வில்லை. இவர்­களை திரு­மணம் செய்­துள்ள ஆண்­களும் கூட கல்வி அறிவில் குறை­வான மட்­டத்­தையே கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இவர்­க­ளது கர்ப்­பமும் திட்­ட­மி­டப்­ப­டா­த­தா­கவே அமைந்­தி­ருந்­தன.

அதன் அடிப்­ப­டையில், சிறுவர் திரு­மணம் என்­பது சிறு­வர்­களின் பாது­காப்பு மற்றும் மனித உரி­மை­களை மீறு­வ­தாகும். காரணம் எது­வாக இருந்­தாலும், சிறுவர் திரு­மணம் அவர்­க­ளது எதிர்­கா­லத்தை கடு­மை­யாகப் பாதிப்­ப­துடன் அவர்­க­ளது எதிர்­கா­லத்­தையே முற்­றாக சிதைத்­து­வி­டு­கி­றது.

சுஜா­னியின் கதை

அநு­ரா­த­புரம், கனு­க­ஹ­வெவ பகு­தியைச் சேர்ந்த சுஜானி, தான் எவ்­வ­ளவு பெரிய இழப்­பு­களைச் சந்­தித்­துள்ளேன் என்­பதை உண­ர­வில்லை என்­கிறார். “திரு­மணம் செய்து கொள்ள முடி­யாத அள­வுக்கு இள வய­து­டை­ய­வ­ளாக நான் இருந்தேன். அழுதேன். நான் அதனை விரும்­ப­வில்லை, திரு­ம­ணத்தின் அர்த்தம் எனக்கு புரி­ய­வில்லை, நான் அதிகம் பயந்­தி­ருந்தேன்” என்­கிறார்.

சுஜா­னியின் கதை யதார்த்­தத்­தி­லி­ருந்து அப்­பாற்­பட்­ட­தல்ல என்­பதை தர­வுகள் காட்­டு­கின்­றன. உலகம் முழு­வதும் ஒவ்­வொரு ஆண்டும் 15 மில்­லியன் பெண்கள் 18 வய­துக்கு முன்பே திரு­மணம் செய்து கொள்­கி­றார்கள். அதா­வது இரண்டு செக்­கன்­க­ளுக்கு ஒரு இள வயது பெண் திரு­மணம் செய்து கொள்­கிறார்.

சுஜா­னியும் அவ­ளு­டைய இரண்டு தங்­கை­களும் பெரும்­பா­லான நாட்­களில் பசி­யு­டன்தான் படுக்­கைக்குச் செல்­வார்கள். அவ­ளுக்கு ஒன்­பது வய­தாக இருந்­த­போது பெற்றோர் பிரிந்­து­விட்­டனர். ​​இதனால் குடும்­பத்தை முன்­கொண்டு செல்­வது இன்னும் கடி­ன­மா­கி­விட்­டது.

சுஜா­னியின் தாயா­ருக்கு தனது மூன்று இளம் பெண் குழந்­தை­க­ளுக்கும் உண­வ­ளிப்­பது பெரும் கஷ்­ட­மா­கி­விட்­டது. இதனால் சுஜா­னியின் தாய் தனது மூன்று மகள்­க­ளையும் பாட்­டியின் பொறுப்பில் விட்­டு­விட்டு வீட்டுப் பணிப்­பெண்­ணாக லெப­னா­னுக்குச் சென்றார்.

“நான் பாட­சாலை சென்று கல்வி கற்க வேண்­டிய நேரத்­தி­லேயே எனக்கு திரு­மணம் நடந்­தது” என்று தற்­போது 30 வய­தாகும் சுஜானி கூறு­கிறார். இப்­போது அவ­ருக்கு இரண்டு மகள்கள் இருக்­கி­றார்கள்.

“எனக்கு திரு­ம­ண­மா­ன­போது 15 வயது. எனக்கு உண­வ­ளிக்­கவோ, உடை வாங்­கவோ, கல்­விக்­கான செல­வு­களை வழங்­கவோ எனது தாயால் முடி­யாது என்­பதை நான் அறிந்­தி­ருந்தேன்.திரு­மணம் செய்ய மறுத்தால், வேறு வழி­யில்லை என்­ப­தையும் உணர்ந்­தி­ருந்தேன். அதனால் திரு­மணம் செய்து கொண்டேன்” என்­கிறார் அவர்.

திரு­மணம் செய்த பின்னர் சுஜானி பாட­சா­லைக்குச் செல்­வதை நிறுத்­தி­விட்டு, அதற்குப் பதி­லாக தனது கண­வரைக் கவ­னித்­துக்­கொண்டார். ஆனால் அவளும் அவள் கண­வனும் சாப்­பிடும் அள­வுக்கு கூட சம்­பா­திப்­ப­தற்கு சிர­மப்­பட்­டனர். ஆனால் சுஜா­னிக்கு மிகப்­பெ­ரிய இழப்பு, அவ­ளது சுதந்­தி­ரம்தான். “நான் எனது குடும்­பத்­துடன் தங்­கி­யி­ருந்­த­போது நான் விரும்­பி­யதைச் செய்ய சுதந்­தி­ர­மாக இருந்தேன். இப்­போது நான் சுதந்­தி­ர­மாக இல்லை. அவர் எனக்கு எதையும் விரும்பிச் செய்­வ­தற்­கான சுதந்­தி­ரத்தை தர­வில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்­பதை அவர் மட்­டுமே தீர்­மா­னிப்பார்” என்­கிறார்.

இத்­த­கைய சூழ்நிலை­களில் உள்ள பெண்கள் கருத்­தடை சாத­னங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. அத்­துடன் திட்­ட­மி­டப்­ப­டாத கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி, கர்ப்­பப்பை வாய்ப் புற்­றுநோய் உள்­ளிட்ட பாலியல் ரீதி­யாக பரவும் நோய்த்­தொற்­று­க­ளுக்­குள்­ளாகும் அதிக ஆபத்தில் உள்­ளனர்.

15 –19 வய­து­டைய இலங்கைப் பெண்­களில், கர்ப்­பத்­துடன் தொடர்­பு­டைய கார­ணங்­களே மர­ணத்­திற்­கான இரண்­டா­வது முக்­கிய கார­ண­மாகும். குழந்தைப் பேறுக்­கான உடல் முதிர்ச்­சி­யின்­மையும் உரிய மருத்துவ சேவை­களைப் பெற்றுக் கொள்ள முடி­யா­தி­ருப்­பதும் இதற்குக் கார­ணங்­க­ளாகும்.

“நான் கர்ப்­ப­மாக இருந்­த­போது அதிக வலியை உணர்ந்தேன், ஏனென்றால் அந்த வயதில் நான் கருத்­த­ரிப்­ப­தற்கு தயா­ரான உடல் நிலையைக் கொண்­டி­ருக்­க­வில்லை” என்று அவர் கூறினார்.

16 வயதில், பிர­சவம் பற்­றியோ, குழந்­தையை எப்­படிப் பரா­ம­ரிப்­பது என்­பது பற்­றியோ எந்­த­வித அறி­வு­மற்ற நிலை­யி­லேயே சுஜா­னிக்கு மிகவும் வலி­யுடன் கூடிய பிர­சவம் நிகழ்ந்­தது “குழந்­தையை எப்­படிப் பிர­ச­விப்­பது என்று எனக்குத் தெரி­ய­வில்லை. நானே ஒரு குழந்­தை­யாக இருந்தேன். மேலும் 15 வய­திற்­குட்­பட்ட எவரும் நான் அனு­ப­வித்த அதே வலி­களை அனு­ப­விப்­பதை நான் விரும்­ப­மாட்டேன்.” என்றும் சுஜானி கூறு­கிறார்.

அவ­ளது சிறு வயதுக் கன­வுகள் பற்றிக் கேட்­ட­போது, “பொரு­ளா­தார கஷ்­டங்கள் கார­ண­மாக தான் பெரிய கன­வுகள் எத­னையும் கொண்­டி­ருக்­க­வில்லை” என்றார். “என் வய­து­டைய ஏனைய பிள்­ளை­களைப் பார்த்­த­போது, நான் அவ­நம்­பிக்­கை­யு­டை­ய­வ­ளா­கவும் உத­வி­யற்­ற­வ­ளா­கவும் உணர்ந்தேன். என் பெற்­றோரின் ஆத­ரவு இல்­லாமல், என்னால் ஏணியை எட்ட முடி­யாது என்­பது எனக்குத் தெரியும். இப்­படி ஒரு வாழ்க்கை கிடைப்­ப­தற்கு நாம் ஏதோ பாவங்­களைச் செய்­தி­ருக்க கூடும்” என்றும் சுஜானி குறிப்­பி­டு­கிறார்.
சுஜானி ஒன்­பது வரு­டங்கள் களிமண் வீட்­டி­லேயே வாழ்ந்தார், அவர் அர­சாங்க சமுர்த்தி திட்­டத்தின் ஊடாக வீடு கட்­டு­வ­தற்­கான நிதி­யு­த­வியைப் பெற்றார். எனினும் சமுர்த்தி நிதியில் கட்­டப்­பட்ட வீட்டின் சுவர் ஒன்று திடீ­ரென இடிந்து விழுந்­தது. அதன் பின்னர் விமா­னப்­படை அதி­கா­ரிகள் வந்து சுஜா­னியின் வீட்டை முழு­மை­யாக நிர்­மா­ணித்துக் கொடுத்­தனர். “இப்­போது நாங்கள் வெறும் வயிற்­றுடன் இருந்­தாலும் மழையில் நனை­யாமல் கூரையின் கீழ் வாழ்­கிறோம். எனது இரண்டு மகள்­க­ளுடன், கதவை மூடிக்­கொண்டு இரவில் பாது­காப்­பாக தூங்­கு­வ­தற்கு ஒரு வீடு இருக்­கி­றது. விமானப் படை­யி­ன­ருக்கு எனது நன்­றிகள்” என்­கிறாள்.

பதி­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தால் பரா­ம­ரிக்­கப்­படும் புள்­ளி­வி­ப­ரங்­களை ஆய்வு செய்­த­போது, 2005 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில், 18 வயதுக்குட்பட்ட தாய்மார்களால் 105,000 க்கும் அதிகமான பிரசவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 13 வயதில் குழந்தை பிரசவித்தவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

ஆனால், அரசாங்க தரவுகளில் குறைபாடுகள் உள்ளன. அரசாங்கம் தரவுகளை முறையாக சேகரித்து சிக்கல்களைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் இள வயது திருமணத்திலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை சரிவர அமுல்படுத்துவது சாத்தியமாகும்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தவிர இள வயது திருமணத்தை ஒழிக்க நாட்டில் போதுமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில்தான் குறைபாடு உள்ளது.

டெய்லி மிரர் (23.03.2022) பத்திரிகையில் பியூமி பொன்சேக்கா எழுதிய கட்டுரையைத் தழுவியது

விடிவெள்ளி பத்திரிகை (24/3/2022)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter