அரபு நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவ வேண்டும்!

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி நாளுக்கு நாள் மோச­ம­டைந்து செல்­கின்ற நிலையில் அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடி நிற்­கி­றது. சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வியைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தியா குறிப்­பி­டத்­தக்க உத­வியை வழங்­கி­யுள்ள நிலையில், சீனாவும் தற்­போது உத­வி­களை வழங்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

இத­னி­டையே கடந்த சில மாதங்­க­ளாக மத்­திய கிழக்கு நாடு­களின் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­வதை நாம் அறிவோம். அர­சாங்­கத்தின் பல சிரேஸ்ட அமைச்­சர்கள் பல்­வேறு அரபு நாடு­க­ளுக்கும் விஜயம் செய்து எரி­பொருள் இறக்­கு­ம­திக்­காக உத­வி­களைக் கோரி­யி­ருந்­தனர். எனினும் எந்­த­வொரு நாடும் குறிப்­பி­டும்­ப­டி­யான உத­வி­களை வழங்க முன்­வ­ர­வில்லை.

கடந்த வாரம் சவூதி வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இதன்­போது ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் சவூ­தி­யி­ட­மி­ருந்து உத­வி­களை எதிர்­பார்ப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்­தனர். நேற்று முன்­தினம் கட்டார் அமீரை தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச, அந்­நாட்டின் உத­வியைப் பெற்றுக் கொள்­வது குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறார். அமைச்­சர் பந்­துல குண­வர்­த­னவும் பல தட­வைகள் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு விஜயம் செய்து இலங்­கைக்கு உத­வு­மாறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்தார். முன்னாள் எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பி­லவும் தனது பதவிக் காலத்தில் பல அரபு நாடு­க­ளுக்குச் சென்று இலங்­கைக்கு எரி­பொ­ருளைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஆராய்ந்­தி­ருந்தார்.

துரதிஸ்டவ­ச­மாக மேற்­படி முயற்­சிகள் எதுவும் இது­வரை உரிய பலனைக் கொடுத்­த­தாக தெரி­ய­வில்லை. வழக்­க­மாக இலங்­கைக்கு பல மில்­லியன் டொலர்­களை அள்­ளி­யி­றைக்கும் மத்­திய கிழக்கு நாடுகள் தற்­போது இக்­கட்­டான கட்­டத்­திலும் கூட உத­வு­வ­தற்கு தயங்­கு­வது ஏன் என்ற கேள்­விக்கு தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் முதலில் விடை காணத் தலைப்­பட வேண்டும்.

இது தொடர்பில் அண்­மையில் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் பங்­கேற்ற முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எரான் விக்­ர­ம­ரத்ன, முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரித்­த­மையே இன்று அரபு நாடுகள் இலங்­கைக்கு உதவ விரும்­பா­மைக்­கான பிர­தான காரணம் என வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தி­ருந்தார். தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் ஜனா­ஸாக்­களை எரிப்­பதில் காட்­டிய இறுக்­க­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற போக்கே அரபு நாடுகள் இலங்­கை­யுடன் நெருக்­க­மான உறவைப் பேணு­வ­தற்கு தடை­யாக உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இதுவே யதார்த்­த­மு­மாகும்.

57 அரபு நாடுகள் அங்கம் வகிக்கும் ஓ.ஐ.சி எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான கவுன்சில் இலங்கை அர­சாங்­கத்தின் கட்­டாய தகனக் கொள்கை தொடர்பில் பலத்த கண்­ட­னங்­களை வெளி­யிட்­டி­ருந்­த­துடன் இவ்­வி­ட­யத்தை ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் பிர­தான பேசு­பொ­ரு­ளாக முன்­வைத்­தி­ருந்­தது. குறிப்­பாக இலங்­கையில் பிறந்து 20 நாட்­க­ளே­யான சிசுவின் சடலம் கூட எரிக்­கப்­பட்­டமை உல­க­ளா­விய முஸ்லிம் உம்­மாவை கடும் கோபத்­திலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யி­ருந்­தது. இந்த அர­சாங்கம் அன்று கடைப்­பி­டித்த இன­வாத ரீதி­யான கடும்­போக்கு கொள்­கையே இன்று அரபு நாடு­களை விரண்­டோடச் செய்­துள்­ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான காலத்தில் இலங்­கையின் பாரிய அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக கோடிக் கணக்­கான டொலர்­களை சவூதி, கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம், குவைத் உள்­ளிட்ட பல நாடுகள் வாரி­யி­றைத்­துள்­ளன. மேற்­கு­லக நாடு­களின் ஆக்­கி­ர­மிப்­பினால் இன்று சிதைக்­கப்­பட்­டுள்ள கட்டார், லிபியா போன்ற நாடுகள் கூட ஒரு கட்­டத்தில் இலங்­கைக்கு தாரா­ள­மாக உத­வி­களை வழங்­கி­யுள்­ளன.

இலங்­கைக்கும் அரபு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வர­லாற்று ரீதி­யான தொடர்­புகள் கார­ண­மாக மேற்­படி நாடுகள் எப்­போ­துமே பிர­தி­பலன் பாராது உத­வி­களை வழங்­கியே வந்­துள்­ளன. எனினும் இப்­போது அவர்கள் உதவத் தயங்­கு­வது இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் தொடர்பில் சர்­வ­தேச அரங்கில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள மோச­மான பதி­வு­க­ளி­னா­லேயே என்­பது தெளி­வா­ன­தாகும். இதனை மாற்றியமைக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் ஏரா­ள­மான அரபு நாட்டு செல்­வ­தர்கள் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள முன்­வந்­தி­ருந்­தனர். எனினும் அரபு நாட்­ட­வர்­களை முத­லீடு செய்ய அனு­ம­தித்தால் இலங்­கையை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்­து­வி­டு­வார்கள் என்ற இன­வாதப் புரளி கிளப்­பப்­பட்­டமை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அளுத்­கம முதல் மினு­வாங்­கொடை வரை வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்­டமை கார­ண­மாக அவ்­வா­றாக முத­லீட்­டா­ளர்கள் கூட இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய துரதிஸ்டநிலை தோற்றம் பெற்­றது.

எவ்­வா­றி­ருப்­பினும் இன்று இலங்கை எதிர்­கொண்­டுள்ள அந்­நியச் செலா­வணி பற்­றாக்­குறை மற்றும் எரி­பொருள் நெருக்­கடி என்­பன வர­லாற்றில் முன்­னெப்­போதும் கண்டிராத ஒன்றாகும். அந்த வகையில் இலங்கையை இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான கடப்பாடு இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள சகல நாடுகளுக்கும் உரியதாகும். இதில் அரபு நாடுகளும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இலங்கைக்கு நிபந்தனைகளுடன் கூடிய உதவிகளை வழங்குவதற்கு அரபு நாடுகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter