ஒவ்வொருவரும் பேசிக்கொள்வதைக் காதுகொடுத்துக் கேட்டால், வாழ்க்கையில் சலிப்படைந்து விட்டமையையே வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களிடத்தில் வெறுமை தொற்றிக்கொண்டுள்ளது. இன்னும் சிலர் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், குறுக்குவழியில் சம்பாதித்துக் கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். கடைகளுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கே பலரும் அஞ்சுகின்றனர். நினைத்துப் பார்க்காத அளவுக்கு, எல்லாப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால், வாழ்க்கையை கொண்டுநகர்த்த வேண்டுமாயின், கட்டாயமாகப் பொறுமையை கடைப்பிடிக்கவே வேண்டும்.
எம்மை வேண்டுமென்றே சீண்டிப்பார்த்து, அதில் குளிர்காய முயற்சிப்பவர்கள் எம்மைச்சுற்றி இருக்கின்றனர். வரிசையில் கால்கடுக்க நின்று கொண்டிருக்கையில், அந்த வரிசையின் இடைநடுவில் யாராவது நுழைந்தாலும் கோபம் கட்டாயமாக வரும்;
எதிர்ப்புக் குரல்களும் வலுக்கும். ஆனால், எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசையில் நின்றிருந்த நிலையில், மயங்கி விழுந்து மரணமடைந்தோரின் எண்ணிக்கை, நேற்றுடன் (21) மூன்றாக அதிகரித்துவிட்டது. சரியான காரணம் வெளிவராவிடினும், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நின்றிருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி, அதிலொருவர் மரணித்தும் விட்டார்.
நெருக்கடியான நிலைமையொன்றுக்கு நாமெல்லாம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நெருக்கடி இனம், மதம், மொழி பார்த்துத் தொற்றிக்கொள்ளவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பார்க்கையில், அங்கு எவ்விதமான பேதங்களையும் காண முடியவில்லை.
‘வரிசையில் நிற்பது” சகலருக்கும் பொதுவான பிரச்சினையாகும். கோபம் வருவது, மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்றாகும். எனினும், அதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், குற்றவாளியாக்கப்படும் நீங்கள், குடும்பத்தை பிரிந்து, சிறையில் வாடவேண்டி௰ நிலைமைதான் ஏற்படும்.
கோபத்தை அடக்கி, பொறுமையைக் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் நீண்ட தூரத்துக்கு பயணிக்கமுடியும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, முதியவர்களையும் சிறார்களையும் வரிசையில் நிற்க வைப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு வரிசையுடன், மண்ணெண்ணெய் வரிசையும் நீண்டு சென்றுகொண்டிருக்கின்றது. நாட்டில் நிலவும் வரட்சியான வானிலைகூட, அவர்களை நிலைதடுமாறச் செய்துவிடும்.
அதேபோல், பாடசாலைகளுக்குச் செல்லாது சிறுவர்களும் மண்ணெண்ணெய் வறிசையில் நின்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வீட்டில் அடுப்பு எஏரியாதபோது, பாடசாலைக்குச் செல்வது இயலாத காரியமாகும். அத்துடன், இவ்வாறான குடும்பங்களில், பெற்றோர் இருவரும் கூலிவேலைக்குச் சென்றுவிடுவர்; சிறுவர்கள்தான் வரிசையில் நிற்கவேண்டும். கூலிவேலைக்குச் செல்லாமல் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றுவிட்டால், முழுநாளும் பட்டினியால் வாடவேண்டிய௰ய நிலைமை ஏற்பட்டுவிடும்.
இவையெல்லாம் நீண்ட காலத்தில் பெரும் தாக்கத்தை செலுத் துமென்பதை நினைவில் வைத்துக்கொண்டு, தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டியது ஆட்சியாளர்களின் கைகளிலேயே உள்ளது. (தமிழ்மிரர் 22/3/22)