தீராத பிரச்சினையும், தீர்க்க முடியாத கட்சிகளும்!

இரண்டரை ஆண்டுகளில்‌ மக்களின்‌ நம்பிக்கையை சிதைத்து, உள்ளக ஆதரவையும்‌ இழந்து, நாட்டையும்‌ தங்களையும்‌ நெருக்கடிக்குள்‌ சிக்கவைத்திருக்கிறது ராஜபக்ஷ குடும்ப ஆட்சி.

நாடு மிகமோசமான பொருளாதாரச்‌ சிக்‌கலுக்குள்‌ சிக்கிப்‌ போயுள்ள நிலையில்‌, இந்தச்‌ சிக்கலைக்‌ கடந்து செல்வதற்கான வழி என்ன என்பதில்‌ அரசாங்கத்துக்கு உள்ளேயும்‌ சரி, அரசாங்கத்தை எதிர்ப்‌பவர்கள்‌ மத்தியிலும்‌ சரி தெளிவான நிலைப்பாடு இல்லை.

தற்போதைய அரசாங்கம்‌ பதவிக்கு வந்த போதும்‌, அது கடந்து சென்றிருக்‌கின்ற இரண்டரை ஆண்டுகளிலும்‌, தமக்கு எல்லாம்‌ தெரியும்‌, தங்களால்‌ எல்‌லாவற்றையும்‌ சமாளிக்கவும்‌ வெற்றி கொள்ளவும்‌ முடியும்‌ என்ற மனோநிலையே காணப்பட்டது. இப்போதும்‌ கூட அவர்கள்‌, போரை வென்றது போலவே, பொருளாதார நெரு க்கடியையும்‌ வெற்றி கொள்ள முடியும்‌ என்று கூறி ஏமாற்றிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

போரை வெல்வதற்காக இருந்த உத்திகளும்‌, திட்டமிடலும்‌ போல, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான உத்திகளோ, திட்டங்களோ இல்லாத நிலையில்‌, இவ்வாறு கூறிக்‌ கொண்டிருப்பதால்‌ பயனில்லை.

இந்த நெருக்கடியில்‌ இருந்து தப்பிக்க தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்‌கம்‌ பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள்‌ கசிந்திருந்தன.

ஆனால்‌ எதிர்க்கட்சிகள்‌ அதற்கு இணங்காத நிலையில்‌, ‘விழுந்தும்‌ மீசையில்‌ மண்‌ ஒட்டவில்லை’என்பதுபோல,தேசிய அரசு அமைக்க முயற்சிக்க வில்லை என்‌கிறது அரசாங்கம்‌.

“தேசிய அரசாங்கம்‌’ என்ற கப்பலில்‌ ஏறித்‌ தாங்களும்‌ மூழ்குவதற்கு எதிர்க்‌கட்சிகள்‌ தயாராக இல்லை. ரணில்‌ விக்‌ரமசிங்கவை வைத்து இதனை சமாளிக்க அரசாங்கம்‌ முற்பட்டது.

ரணில்‌ விக்ரமசிங்கவை மத்திய வங்கி மோசடியுடன்‌ தொடர்புபடுத்தி குற்றம்‌ சாட்டிய அரசாங்கமே, இப்போது அவருடன்‌ சமரசம்‌ செய்து, பொருளாதார நெருக்கடியையும்‌ அரசியல்‌ நெருக்கடியையும்‌ தீர்க்க முனைகிறது.

அரசாங்கத்துக்கு இப்போது தேவைப்படுவது பிரச்சினைகளுக்கான பழிகளைத்‌ தலையில்‌ கட்டிவிடக்கூடிய பலிக்கடாக்‌கள்‌ தான்‌.

ஏற்கனவே உதய கம்மன்பிலவும்‌, விமல்‌ வீரவன்சவும்‌ பலிக்கடாக்கள்‌ ஆக்கப்பட்டனர்‌. ஆனாலும்‌ பிரச்சினை தீரவில்லை. அதனால்‌ அவர்களுக்கு புதிய பலிக்கடாக்கள்‌ தேவைப்படுகின்றனர்‌.

தங்களை தூய்மையான நோமையான வல்லமையானவர்களாக நிலைநிறுத்துவதற்காக, சேற்றை வாங்கிக்‌ கொள்ளக்‌ கூடியவர்கள்‌ தான்‌, அவர்களுக்குத்‌ தேவை. அதனால்‌ தான்‌ தேசிய அரசு என்று இறங்க முற்பட்டனர்‌.

அதேவேளை, தற்போதைய பிரச்சினைக்கான தீர்வு என்ன என்ற கேள்விக்கு எதிரணியில்‌ உள்ளவர்களிடம்‌ சரியான – தெளிவான பதில்‌ இல்லை. அவர்களுக்குள்‌ இந்த விடயத்தில்‌ முரண்பாடுகள்‌ உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்‌ சக்தி ஒரு தரப்பு. ஐக்கிய தேசியக்‌ கட்சி பலமிழந்து போனாலும்‌, ரணில்‌ விக்ரமசிங்க இன்‌னமும்‌ வலுவானதொரு அரசியல்‌ தரப்‌பைக்‌ கொண்டுள்ள நபராகவே இருக்‌கிறார்‌. மூன்றாவதாக, அரசாங்கத்துடன்‌ முரண்பட்டுக்‌ கொண்டு வெளியே நிற்கும்‌ தரப்புகள்‌. இந்த மூன்று தரப்புகள்‌ மத்தியிலும்‌ வெவ்வேறான அணுகமுறைகள்‌ திட்டங்கள்‌ உள்ளன.

நாட்டின்‌ மோசமான நிலைக்கு நிதியமைச்சர்‌ பஷில்‌ ராஜபக்ஷவே காரணம்‌ என்றும்‌, அதனால்‌ அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து உள்ளக கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும்‌ ஐக்கிய மக்கள்‌ சக்தி கூறியது.

ஆனால்‌ அடுத்த சில நாட்களிலேயே அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ தெரிவித்திருக்கிறார்கள்‌.

அதாவது, பஷில்‌ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரைப்‌ பதவி நீக்குவதால்‌ இந்தப்‌ பிரச்சினை தீரப்‌ போவதில்லை. அவரைப்‌ பதவி நீக்கி விட்டால்‌, ராஜபக்ஷ குடும்பத்துக்குள்‌ இருக்கும்‌ சிக்கல்‌ தீர்ந்து விடும்‌. இந்தச்‌ சந்தர்ப்‌பத்தைப்‌ பயன்படுத்தி, பஷிலுக்கு எதிராக உள்ள ஆளும்தரப்பினர்‌ ஒன்றிணைந்து விடுவார்கள்‌. அதனால்‌, இந்த விடயத்தில்‌, பஷிலையோ, ராஜபக்ஷ குடும்பத்தை சோந்த வேறொருவரையோ பலிக்கடா ஆக்குவது பிரச்சினைக்குத்‌ தீர்‌வாக அமையாது. முழு ராஜபக்ஷ அரசாங்கமும்‌ இதற்குப்‌ பொறுப்பு என்பதால்‌, முழுமையாக அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்‌ என்கிறது ஐக்கிய மக்கள்‌ சக்தி. அதனை மையப்படுத்தியே அவர்கள்‌ போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்‌பித்திருக்கின்றனர்‌.

அதேவேளை அரசாங்கத்துடன்‌ முரண்‌பட்டுள்ள உதய கம்மன்பில, விமல்‌ வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 10 கட்சிகளும்‌, ‘பஷில்‌ எதிர்ப்பு மைய’ அரசியலையே முன்னெடுக்கிறார்கள்‌. அவர்களைப்‌ பொறுத்தவரையில்‌ அரசாங்கத்தை குட்டிச்‌ சுவராக்கியது பஷில்‌ தான்‌. அவரால்‌ தான்‌ அரசாங்‌கத்தின்‌ நிகழ்ச்சி நிரல்‌ குழம்பியது. அதன்‌ கொள்கைத்‌ திட்டம்‌ தோல்வியடைந்தது என்ற நிலைப்பாட்டில்‌ உள்ளனர்‌.

அவர்களுக்கு பஷில்‌ வெளியேற்றப்‌பட்டால்‌ சரி என்ற மனநிலையே காணப்‌படுகிறது. பஷிலை அமெரிக்காவுக்கு விரட்டும்‌ வரையில்‌ தங்களின்‌ போராட்‌ டம்‌ தொடரும்‌ என்று உதய கம்மன்பில கூறியிருக்கிறார்‌. இதிலிருந்தே, இந்த தரப்புகள்‌ கோட்டா மஹிந்த தரப்புகளை முற்றாக கைவிடத்‌ தயாரில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவர்களுக்கென மாற்றுத்‌ தரப்புகள்‌ எதுவும்‌ இல்லாத நிலையில்‌, மஹிந்த தரப்பை அடியோடு கைகழுவி விட முடி யாத நிலை காணப்படுகிறது.

அதனால்‌ பஷிலை வெளியே அகற்றி விட்டு தாங்கள்‌ உள்ளே வந்து, கோட்டா அரசை வழிப்படுத்தலாம்‌ என்ற திட்‌டத்தில்‌ இருக்கிறார்கள்‌.

இதனைக்‌ கவனத்தில்‌ கொண்டு தான்‌, ஐக்கிய மக்கள்‌ சக்தி, பஷிலைக்‌ குறி வைப்பதை தவிர்க்கிறது. ஒட்டுமொத்த ஆட்சியையும்‌ அகற்ற முனைகிறது.

இந்த இரண்டு தரப்புகளில்‌ இருந்தும்‌ வேறுபட்டு நிற்கிறது ஐக்கிய தேசியக்‌ கட்சி. அதன்‌ தலைவர்‌ ரணில்‌ விக்ரமசிங்க ஒரு பக்கத்தில்‌ சிதைந்து போன கட்சியை மீளக்‌ கட்டியெழுப்ப முனைகிறார்‌. இன்னொரு பக்கத்தில்‌ அவர்‌ ராஜபக்ஷவினரை காப்பாற்ற முனைகிறார்‌ என்ற கருத்துக்களும்‌ பரவுகின்றன.

இவ்வாறான நிலையில்‌ தற்போதைய நெருக்கடியை கையாளும்‌ விடயத்தில்‌, ரணில்‌ விக்ரமசிங்க சில தெளிவான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்‌.

அதில்‌ முக்கியமானது, தேசிய அரசோ, ஆட்சி மாற்றமோ இப்‌ போதைய நெருக்கடிக்கு தீர்வு அல்ல என்பது.

அரசியல்‌ நலனை ஒதுக்கி விட்டு நாட்டின்‌ பொருளாதா ரத்தைக்‌ காப்பாற்றுவதற்காக அனைத்து கட்சிகளையும்‌ ஒருங்‌கிணைக்க வேண்டும்‌ என்றும்‌ இல்லாவிட்டால்‌, நாடு நாசமாகி விடும்‌, இன்னொரு கிறீஸின்‌ நிலை ஏற்பட்டு விடும்‌ என்று அவர்‌ கூறுகிறார்‌. தேசிய அரசு என்ற பெயரில்‌, மஹிந்த தரப்பை, காப்பாற்றவோ, தான்‌ பலிக்கடா ஆக்கப்படுவதையோ ரணில்‌ விரும்பவில்லை.

அந்தப்‌ பொறியில்‌ சிக்கிக்‌ கொள்ளாமல்‌, அதேவேளை நாட்டின்‌ பொருளாதாரத்தை மையப்படுத்திய நகர்வே முக்‌ கியம்‌ என்பதை அவர்‌ வெளிப்படுத்த முனைகிறார்‌.

இதற்குப்‌ பின்னால்‌ அவர்‌ ராஜபக்ஷவினரை பாதுகாக்க முனைகிறார்‌ என்ற குற்றச்சாட்டுகள்‌ இருந்தாலும்‌, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கான உத்திகளும்‌ வாய்ப்பும்‌ குறைவு என்பதால்‌, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திப்‌ பயனில்லை என்பதை அவர்‌ உணர்ந்திருக்கிறார்‌.

ஆட்சி மாற்றம்‌ பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு அல்ல. ஆட்சியை மாற்றினாலும்‌ நெருக்கடி தீரப்‌ போவதில்லை.

இவ்வாறான நிலையில்‌, ஐக்கிய மக்கள்‌ சக்தி ஆட்சியை மாற்ற நினைக்கிறது. அதனிடம்‌ கூட நெருக்கடியில்‌ இருந்து தப்பிப்பதற்கான உத்திகளோ கொள்கைகளோ இருப்பதாகத்‌ தெரியவில்லை. பொருளாதார நெருக்கடி பொதுவானது. கட்சிகளுக்கு அப்பால்‌ அது தீர்க்கப்பட வேண்டியது. இவ்வாறான நிலையில்‌ எதிர்க்கட்சிகள்‌ பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வரத்‌ தயாராக இல்லாத நிலையில்‌, ஆட்சி மாற்றமோ, தேசிய அரசோ மாத்திரமன்றி, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்‌ சாத்தியமாகும்‌ போலத்‌ தெரியவில்லை. (சத்ரியன் -வீரகேசரி 21/3/22)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter