“ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை ஜனநாயக செயற்பாடாகக் காட்டிக் கொண்டாலும், அதன் பின்னணியில் பெளத்த மேலாதிக்கவாதிகள் சிறுபான்மையினரின் மதம் மற்றும் கலாசார உரிமைகளை மறுப்பதற்கானதொரு கருவியாகவே இதனை கையாள்வதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டின் பல இடங்களில் பெளத்த கடும் போக்குவாத தேரர்களின் தலைமையில் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்ட சம்பங்கள் பல நடந்தேறி உள்ளன. அத்தகையதொரு சம்பவம் கடந்த 09ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
தீகவாபி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் ஒரு சில பெளத்த தேரர்களும், இன்னும் சிலருமாக பாலமுனை முள்ளிமலை குளப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் குறித்த தினமன்று காலையில் விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாலமுனை பிரதேசத்தில் எந்தவொரு பெளத்தரும் இல்லாத நிலையில், தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் சட்டத்திற்கு முரணாக பெளத்த விகாரை அமைப்பதற்குரிய ஆரம்ப வேலைகளை முன்னெடுப்பதற்கு எடுத்த முயற்சியானது இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு எடுக்கப்பட்டதொரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
குறித்த இடம் தனியாருக்கு சொந்தமானது மட்டுமன்றி அங்கு விகாரை அமைப்பதற்குரிய எந்தவொரு அனுமதியையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் பெற்றுக் கொள்ளவில்லை என்று தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ் அவ்விடத்தில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார். மேலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு கூட இது குறித்து அறிவிக்காத நிலையிலேயே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள். இதன் மூலமாக அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுள்ளார்கள். இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டவர் களுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பெளத்த தேரர்களும், சிலரும் மேற்கொண்ட அடாத்தான நடவடிக்கைக்கு எதிராக பாலமுனை பொது மக்கள் தமது எதிர்ப்பை காட்டினர். மேலும் அங்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.அன்ஸில் உள்ளிட்டவர்கள் பெளத்த தேரர்களுடன் சுமுகமான பேச்சுக்களை முன்னெடுத்தனர்.
குறித்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு எடுத்த முயற்சியை தற்போதைக்கு தடுத்துள்ளார்கள். ஆயினும். இதற்குப் பின்னர் இந்த முயற்சி தொடராது என்று சொல்வதற்கில்லை. அதனால், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும். குறித்த இடத்தில் விகாரை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை பெளத்த தேரர்கள் மேற்கொண்ட போது, அது குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் ஆதரவாளர்கள் பலரும் தொலைபேசியில் தெரிவித்த போதிலும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை.அவர்களின் பிரதிநிதிகள் கூட அங்கு வரவில்லை என்று அப்பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
பெளத்த விகாரை அமைப்பதற்கு பெளத்த தேரர்கள் சிலரினால் தெரிவு செய்யப்பட்ட இடமானாது தனியாருக்குரியது. அவர் அதற்குரிய ஆவணங்களையும் கொண்டிருக்கின்றார். ஆனால், குறித்த இடத்திற்கு வருகை தந்த பெளத்த தேரர்களும், சிலரும் எந்தவொரு அடிப்படையின்றியும், பெளத்தர்கள் எவருமில்லாத இடத்தில் விகாரை அமைப்பதற்கு எடுத்த முயற்சி குறித்து அவர்களிடம் கேட்ட போது எந்தவொரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முஸ்லிம்களிடையே பலத்த அதிருப்தி உள்ளது. முஸ்லிம்களின் தனியார் சட்டம், கொவிட் மரண விவகாரம் எனப் பல விவகாரங்களில் முஸ்லிம்களின் எண்ணங்களுக்கும், கலாசாரத்திற்கும் மாற்றமாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
ஆயினும் கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றங்களை காணக் கூடியதாக இருக்கின்றது. கொரோனாவால் மரணிக்கின்றவர்களை சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்யலாமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் கொள்கைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுகின்ற இன்றைய சூழலில் நூறு சத வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற பாலமுனையில், தனியாருக்கு உரித்துடைய காணியின் அடாத்தாக இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்து பெளத்த விகாரை அமைப்பதற்குரிய வேலை ஆரம்பிக்க எடுத்த முயற்சியானது கண்டிக்கத்தக்கது. இது விடயத்தில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் இதனை கண்டு. கொள்ளாது விடுமாயின் அரசாங்கத்தின் கொள்கைப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் சந்தேகிக்க வேண்டியேற்படும்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள மக்களின் அதிருப்தியை திசை திருப்பதற்கு எடுக்கப்பட மாற்று நடவடிக்கையாகவே இதை சந்தேகிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்துக் கொண்டிருப்பதுடன், அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் இருக்கின்றார்கள். இந்த உறவுநிலையை வைத்துக் கொண்டு கொதந்தராத்துடன் தொடர்புடைய அபிவிருத்தி வேலைகளை மாத்திரம் செய்தால் போதாது.
முஸ்லிம்களின் காணிகளுக்கும், இருப்புக்கும் உத்தரவாதத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பெளத்தர்களின் நலன்களை மாத்திரம் பேணிக் கொண்டு, சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கின்ற அரசின் செயற்பாடுகளை தடுக்கக் கூடிய சக்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். இதே வேளை, இச்சம்பவம் குறித்து முஸ்லிம் கட்சிகள் கூட தமது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரைகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாலமுனையில் மேற்கொண்ட முயற்சியைப் போன்று கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி தமிழர்கள் வாழ்கின்ற சங்கமன் கண்டியில் இரவோடு இரவாக புத்தர் சிலை ஒன்று பெளத்த தேரர்களினால் வைக்கப்பட்டது.
இதற்கு அங்குள்ள தமிழ் மக்களும், அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை ஒன்றினை சட்டத்தை கையில் எடுத்து செயற்படும் சில பெளத்த தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் இணைந்து வைத்தார்கள். அப்போது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன அன்றைய ஆட்சியில் பங்காளிகளாக இருந்தன.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளையும் பெற்றி ருந்தார்கள். இரண்டு வாரங்களில் குறித்த சிலை அங்கிருந்து அகற்றப்படும் என்று உத்தவாதம் அளித்தார்கள். ஆனால், இன்று அந்த இடத்தில் பெளத்த விகாரையும், அதனோடு இணைந்த மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு சமூகத்திற்காகவே இவ்வாறு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்துக் கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் பாதுகாத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை.
முஸ்லிம்கள் காலத்திற்கு காலம் தமது காணி மற்றும் கலாசார உரிமைகளை இழந்து கொண்டே வந்துள்ளார்கள். கொள்கையும், சமூகப்பற்றும் இல்லாத அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்ற நிலை தொடரும் வரை முஸ்லிம் சமூகம் தமது இருப்பையும், காணிகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையே தொடரும்.
வீரகேசரி 13/3/2022