close up photo of dried dates
Photo by Konevi on Pexels.com

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையை நீக்க அரசு தீர்மானம்

முஸ்லிம் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பணிப்பு

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்று பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந் நிலையில் பேரீச்சம் பழம் தடையினால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், முஸ்லிம்களின் உணர்வுகளை உணர்ந்த தலைவர் என்ற வகையில் இந்த விடயத்தை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ரமழான் காலத்தில் பேரீச்சம் பழம் தடையால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் பற்றி அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அவர் எம்முடன் அமர்ந்து நோன்பு துறந்திருக்கிறார். அவர் நிதி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு பேரீச்சம் பழம் தடையை நீக்குமாறு பணித்ததாக குறிப்பிட்டார்.

பிரதமருடனான சந்திப்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி, இஷாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.முஷர்ரப் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு பள்ளிவாசல்களுக்கு தருவிக்கப்படும் பேரீச்சம் பழத்துக்கான வரி அறவிடாதிருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அதற்கும் உடன்பாடு காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதேவேளை பேரீச்சம் பழம் தடை தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியிடம் வினவிய போது. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் இதனையடுத்து நீதி அமைச்சரின் கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகும் என்றும் தெரிவித்தார். (பா)

 ஷம்ஸ்பாஹிம், அஜ்வாத் பாஸி (தினகரன் 12/3/22)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter