ராஜபக்ஷவினரின் சொத்துக்களை நிரூபமாவும் திருக்குமார் நடேசனுமா பதுக்கியுள்ளனர்? – அனுரகுமார திசாநாயக

பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன்  ஆகியோர் விசாரணைகளில் ஏன் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுத்ததா? இந்த விசாரணைகளில் தகவல்கள் ஏதேனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என சபையில் கேள்வி எழுப்பிய தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) யின் தலைவர் அனுரகுமார திசாநாயக  ராஜபக்ஷவினரின் மற்றும் ஆளுந்தரப்பினரின் சொத்துக்களை நிரூபமாவும், திருக்குமார் நடேசனும் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினாவை முன்வைத்து தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் பல விடயங்கள் கடந்த காலங்களில் வெளிப்பட்டிருந்தன. 

குறிப்பாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எயார் லங்கா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும், அமெரிக்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் நாட்டின் பாரியளவிலான நிதிகள் அமெரிக்கப் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது. இதுபோல பன்டோரா ஆவணங்கள் ஊடாக அண்மையில் மற்றொரு ஊழல் மோசடி வெளிப்பட்டிருந்தது. 

ஆகவே மக்கள் அளவுக்கு அதிமான சொத்துக்கள் ஒரு சிறிய குழுவின் கைகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் மிகமுக்கியமான ஒரு விடயமே பன்டோரா பத்திரங்கள் மூலமாக வெளிப்பட்டது.

இந்த ஆவணங்களின் ஊடாக நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு வெளிநாடுகளில் பல்வேறு சொத்துக்கள் உள்ளது வெளிப்பட்டிருந்தது. சர்வதேச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அதில் இலங்கையர்களின் பெயர்கள் வெளிப்பட்டுள்ளன.  

பன்டோரா ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமான ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் நெருங்கிய உறவினர்.

இந்த ஆவணம் வெளிவந்த ஒக்டோபர் மாதத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்துக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 தற்போது  4 மாதங்கள் கடந்துள்ளன. எனவே ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போது, காலத்தைக் கடத்து வேண்டும் என்பதற்காக அச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு அல்லது ஆணைக்குழுக்களை அமைக்கப்படுகிறது என்கிற சந்தேகம் நாட்டு மக்களுக்கு எழுந்துள்ளது என்றார்.

பன்டோரா ஆவணங்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் நடந்ததாகத் தெரியவில்லை. மல்வானையில் உள்ள வீடொன்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதென வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வீட்டின் காணியின் உரிமையாளராக திருக்குமார் நடேசன் இருக்கிறார். 

அரசாங்கத்தினரின் சொத்துக்களை நிரூபமா ராஜபக்ஷவும், திருக்குமார் நடேசன் மறைத்து வைத்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  

எனவே பன்டோரா ஆவணங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுத்தா? இந்த விசாரணைகளில் தகவல்கள் ஏதேனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? இது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும் அநுரகுமார எம்.பி கேள்வி எழுப்பினார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)வீரகேசரி– (2022-03-09)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter