தேசிய உளவுத் துறையின் முன்னால் பிரதானி சிசிர மென்டிஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று – 11.09.2020 சாட்சியம்.
இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னர் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத், விலாயத்தே சய்லான், மற்றும் ஜமாஅத்தே மில்லதே இப்றாஹீம் ஆகிய அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவற்றுக்கு தடை விதித்தார்.
இந்த நிலையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புக்களையும் தடை செய்யுமாறு கோரப்பட்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் முன்னால் தேசிய உளவுத்துறை பிரதானி சிரிர மென்டிஸ் நேற்றைய தினம் (11.09.2020) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.
குறித்த சாட்சியத்தில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புக்களை தடை செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டாலும் அந்த கோரிக்கை தொடர்பில் தேசிய உளவுச் சேவை பிரதானியிடம் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை கோரிய நேரத்தில் அவ்வமைப்புகள் தாக்குதலுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்க வில்லை என்பதை அடிப்படையாக கொண்டு அவற்றை தடை செய்வதற்கு பரிந்துரைக்க வில்லை என அவர் தெளிவாக சாட்சியம் வழங்கியுள்ளார்.
ஸஹ்ரான் ஹாஷிம் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறான் என்றும் அவனுடைய செயல்பாடுகளை கண்காணிக்குமாறும் ஆரம்பத்திலேயே சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததை கடந்த அரசு நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரனையிலும், தற்போதைய அரசின் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவிலும் CTJ சார்பில் தெளிவாக வாக்குமூலம் வழங்கியிருந்தமையை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டதுடன், இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பதையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி உயிர்களை கொலை செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் பல வருடங்களாகவே நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். இந்நிலையிலேயே உளவுத்துறையின் முன்னால் பிரதானி சிரிர மென்டிஸ் அவர்களும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ உள்ளிட்ட 03 அமைப்புகளும் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கவில்லை என்று தேசிய உளவுச் சேவை பிரதானியின் மீளாய்வு அறிக்கை கிடைத்ததாக தெளிவாக தெரிவித்துள்ளார்.
நாம் பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் எதிரானவர்கள் என்பதுடன் இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதையும் இவ்விடத்தில் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.
R. அப்துர் ராசிக் B.COMபொதுச் செயலாளர்,சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ