ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் என்றும், இலங்கையில் வாழ்வதற்குரிய சுமைகளை தாங்கள் சுமக்கப் போவதாகவும் கூறி, தனது இல்லத்துக்கு முன்னால் ஒரு குழுவினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று (06) தெரிவித்தார்.
டீசல் இல்லாவிட்டால் மாட்டு வண்டிகளில் பயணம் செய்வோம், எப்படியாவது குழந்தைகளுக்கு பால்மா இல்லாமல் உணவளிப்போம், சீமெந்து இல்லை என்றால் களிமண்ணில் வீடு கட்டுவோம், அரிசி இல்லை என்றால் மணலைத் தின்போம் என்று அந்தக் குழுவினர் கூறியதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஹிருணிகா தெரிவித்ததாவது,
ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியினரால் சனிக்கிழமை (05) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து சுமார் 40 முதல் 50 பேர் வரை தனது இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்வுக்காக பொறுமையாக காத்திருப்போம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியதாகத் தெரிவித்த ஹிருணிகா, இவர்கள்தான் இலங்கையின் உண்மையான அடிமைகள் என்றார்.
தாங்கள் உணர்ந்த அதே வலியை பொலிஸாரும் உணர்ந்ததால், ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரும் தங்களை கைது செய்யவோ அல்லது பிரதேசத்தை விட்டு நகர்த்தவோ முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டார்.
பால்மா, டீசல், சீமெந்து மற்றும் மின்சாரம் கூட இல்லாமல் இருக்க தயாராக இருப்பதால், ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் என்று தனது வீட்டுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரியதாகத் தெரிவித்தார்.
தமிழ்மிரர் 7-3-2022