ஜம்மீயத்துல் உலமா ஒரே நாடு ஒரே சட்டம் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

முஸ்லிம்களின் சன்மார்க்கஉரிமைகளை பாதுகாக்க முன் நிற்க வேண்டிய ஜமீயத்துல் உலமா ஒரே நாடு ஒரே சட்டம் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

ஒரே நாடு ஓரே சட்டம் செயலணியின் முன்னிலையில் சில சாதாரண மக்களும், இன்னும் சில சமூக சேவை அமைப்புக்களும் சாட்சியம் அளித்துள்ள நிலையில், முஸ்லிம் மார்க்க உரிமைகளுக்காக முன் நின்று போராட வேண்டிய இலங்கை ஜமியத்துல் உலமா இன்னும் மௌனம் சாதித்து வருகிறது.

முஸ்லிம் மார்க்க உரிமைகள், தீர்மானங்கள் போன்ற விவகாரத்தில் சட்டப்படி அதிகாரம் கொண்ட அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் சாட்சியங்கள், தலையீடுகள் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகள் விடயத்தில் இன்றியமையாததாகும்.

இவர்களால் வழங்கப்படும் சாட்சியங்களும், கருத்துக்களும் இந்த விடயத்தில் மிக முக்கியமானதாகவும் பெருமதி உடையதாகவும் செல்வாக்குச் செலுத்துவதாகவும் காணப்படும். முஸ்லிம்களின் மார்க்க உரிமைகள் பற்றி கதைப்பதற்கு பூரண அதிகாரமும் இவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட நபர்களும் சமூக சேவை அமைப்புக்களும் முன் வந்து, முஸ்லிம்களின் உரிமைகளையும் இவற்றின் முக்கியத்துவங்களையும் குறிப்பிட்டு சாட்சியங்கள் வழங்கியுள்ள நிலையில், இதற்காக பொறுப்புக்கூற வேண்டிய, இதற்காக அதிகாரம் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்னும் மெளனம் காப்பது ஏன்.

முஸ்லிம்களில் அனைத்து தரப்பினரும் இதற்காக சாட்சியம் வழங்கும்படி கூறி அறிக்கை மாத்திரம் விட்ட நிலையில், இவர்கள் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கான நமது உரிமையின் கடமை பாட்டை நிறைவேற்ற இன்னும் முன்வரவில்லை.

கடந்த கால நல்லாற்சியின்போது தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் உரிமைகளுக்கான மகாநாடு நடாத்தி, எமது உரிமைகளுக்காக பெண்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம் என தைரியமாகவும் வரவேற்கத் தக்க முறையிலும் அப்போதைய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஜமியத்துல் உலமா, தற்போது முன் நிற்க வேண்டிய வேளையில் முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் மௌனம் காப்பது ஏன்.

அரசாங்கம் பதவியேற்றபோது ஜனாதிபதியை வாழ்த்திப் போற்றி வரவேற்று, ஜனாஸா எரிப்பு விடயத்தில் மார்க்கத்திற்கு முரணாக அரசுக்கு பத்வா வழங்கி, எந்த விதமான ஜனாஸா எரிப்பு ஆர்பாட்டங்களிளும் கலந்து கொள்ளாது, தற்போதும் பேசவேண்டிய முஸ்லிம் உரிமைகள் விடயத்தில் மெளனம் காக்கும் இவர்களின் நடவடிக்கை ஒரு அரசியல் பக்கச்சார்பான நடவடிக்கையாக சந்தேகத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

சமூக மார்க்க உரிமை பிரச்சினைகளின் போது ஒரு பக்க சார்பின்றி, தைரியமாக எந்த சக்திகளுக்கும் அடிபணியாமல் முடிவுகளை எட்டுவதிலேயே மக்களின் ஆதரவும் தலைமைத்துவங்களின் ஆயுளும் நிலைப்பாட்டில் உறுதியும் சிறப்பும் தங்கியுள்ளது.

எனவே பாதுகாக்கப்பட வேண்டிய முஸ்லிம் திருமண உரிமைகள் காதி நீதிமன்றம் விடயங்கள் போன்றவற்றில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்னிலையில் இன்னும் சாட்சியங்கள் வழங்காமல் மௌனம் சாதிப்பது கவலைக்குறிய விடயமாகும்.

ஆரம்பத்தில் காதி நீதிமன்றங்கள் இல்லாது ஒழிக்கப்படும், இஸ்லாம் கூறும் பலதார் திருமணம் தடை செய்யப்படும் என நீதி அமைச்சர் பகிரங்கமாக அறிவித்திருந்த போதும், இஸ்லாம் கூறும் திருமண உரிமைகள் விடயத்தில் தற்போது தன்னிலையில் அறிவு பூர்வமான மாற்றத்தை கொண்டுள்ளார். இது நிபந்தனைகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தெளிவான ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சரவையில் இது சம்பந்தமாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலைகளை ஊடகங்கள் மூலமாக அறிய முடிந்தது.

இந்நிலையி்ல் இது சம்பந்தமாக பதிலளித்த கெளரவ ஜனாதிபதி அவர்கள், இப்பிரச்சினைக்கு ஒரே நாடு ஒரே சட்டம் செயலனியின் அறிக்கையின் பின்னர் முடிவுகள் எட்டப்படும் என கூறியதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் முன்னிலையில், முஸ்லிம்களின் உரிமைகளுக்கு பொறுப்பும் அதிகாரமும் வாய்ந்த இலங்கை ஜமியத்துல் உலமாவின் சாட்சியங்கள், ஓரே நாடு ஒரே சட்டம் செயலனி முன்நிலையில் எவ்வளவு செல்வாக்கு செலுத்தும் , எவ்வளவு முக்கியமானவை என விளங்க முடிகின்றது.

மேலும் யார் என்ன சொன்ன போதிலும், முஸ்லிம்களின் மார்க்க உரிமை விடயத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பதனையும் அறிய முடிகின்றது.

இது சம்பந்தமான இவர்களின் பொறுப்பையும் கடமையையும் சுட்டிக்காட்டி ஒரு சிலர் குரல் பதிவுகளை வைத்து தங்களின் சமூகத்திற்கான கடமைகளை செய்த போதிலும், மேலும் முக்கியஸ்தர்களும் சமூகசேவை இயக்கங்களும் இதை சுட்டிக்காட்டிய போதிலும், இவர்கள் தங்கள் கடமையினையும் பொறுப்பையும் இந்த விடயத்தில் நிறைவேற்றியதாக தெரியவில்லை.

மேலும் இந்த நாட்டின் பூர்வீக உரிமைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் எமது உரிமை களையும் கருத்துக்களையும் ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தவும் வென்றடுக்கவும் முஸ்லிம் சமூகத்திற்கு பூர்ண உரிமை உள்ளது. இது இவர்களின் கடமையுமாகும்.

எனவே நாட்டில் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டிய இவர்கள் தன் பொறுப்புகளை நிறைவேற்றி இந் நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளையும் மார்க்க விடயங்களையும் பாதுகாக்க ஆவன செய்வார்களா ?.

( பேருவளை ஹில்மி )

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter