இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடை செய்யும் அரசாங்கத்தின் யோசனையை காலதாமதமின்றி சட்டமாக்க வேண்டும். பிரதமரின் இந்த தீர்மானத்தை இல்லாதொழிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பசு வதை மரண தண்டனைக்கு இணையான குற்றம் என பௌத்தசாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்தை பௌத்த மத துறவிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். சிங்கள இராசதானியில் பசு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படுவது மரண தண்டனைக்கு இணையான குற்றமாக கருதப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இவ்விடயம் பௌத்த மத சாசனத்துக்குள் உள்வாங்கப்பட்டது.
பௌத்த மதத்தை மூல கொள்கையாக கொண்டு செயற்படும் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. இத்தீர்மானத்தில் இருந்து ஒரு அடியேனும் பின்வாங்காமல் மாடறுக்கும் செயற்பாட்டை தடுக்கும் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். இதற்கு பௌத்த மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
மாடறுக்கும் செயற்பாட்டை தடுக்கும் யோசனையை இல்லாதொழிக்க பல சக்திகள் தீவிராமாக முயற்சிக்கின்றன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பௌத்த நாட்டில் பௌத்த மத கொள்கைகள் முழுமையாக செயற்படுத்த வேண்டும். என்றார்.
(இராஜதுரை ஹஷான்)