எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதியமைச்சை கோரியுள்ள நிலையில் இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமானால் அது இலங்கையின் வரலாற்றில் அதிக எரிபொருள் விலையாகக் காணப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்தளவு கூடுதலான விலை அதிகரிப்பை திணைக்களம் கோரியுள்ளதாகவும் எவ்வாறெனினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்ற வகையில் அது நியாயமான வேண்டுகோளாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உலக சந்தையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த நிலைமை தொடர்பில் நிதியமைச்சுக்கு தெளிவுபடுத்தி யுள்ளதாகவும் எனினும் நிதியமைச்சிலிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலையதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சுக்கு தெளிவுபடுத்தியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் ஈட்டும் நிறுவனமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளதாகவும் அதனை சுமுகமாக முன்னெடுத்துச் செல்வதானால் எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 192 ரூபாவாகவும் டீசல் ஒரு லீட்டரின் விலையை 169 ரூபாவாகவும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதியமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை இம்முறை அமைச்சரவையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் பயணிகள் போக்குவரத்து சேவை, முப்படையினர்,பொலிஸார் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம் – தினகரன் – (2022-02-19)