காத்­தான்­கு­டியில் நாரதர்

காகமும் காத்­தான்­கு­டி­யானும் இல்­லாத ஊரே இல்லை என்னும் அள­வுக்கு இலங்­கை­யிலே கடின உழைப்­புக்குப் பெயர்போன முஸ்­லிம்­களின் மிகப்­பெரும் வதி­வி­ட­மாக விளங்கும் ஓர் ஊர் காத்­த­மா­நகர். சுமார் ஐம்­ப­தா­யிரம் மக்­களை ஏறக்­கு­றைய ஐந்து சதுர மீற்றர் நிலப்­ப­ரப்­புக்குள் அடக்­கிக்­கொண்டு, மூச்­சு­வி­டவும் முடி­யா­த­வாறு குடி­யாட்­டங்­களால் நிறைந்து திண­று­கின்ற நிலை­யிலும், வைசி­யத்­தையும் வைதீ­கத்­தையும் வாழ்­வா­தா­ரங்­க­ளாகக் கொண்டு நாடெல்லாம் பரந்து உழைக்கும் மக்­களைக் கொண்ட ஒரு விசேட பட்­டினம் இது. “காத்­தான்­கு­டிக்குக் கரத்தை கொண்டு போற மச்சான் சீத்தை இரண்டு முளம் பஞ்­ச­மாகா அந்தச் சீமை­யி­லே”, என்று கர­வாகுக் கன்­னி­யரின் கவி­யினால் புக­ழாரம் சூடப்­பட்ட ஒரு காவிய நகர். துர­திஷ்­ட­வ­ச­மாக, வைதீகம் வளர்த்துவிட்ட ஒரு வாலிபக் கும்பல் இரண்டு வரு­டங்­க­ளுக்­குமுன் அரங்­கேற்­றிய ஒரு கொலை­வெறி ஆட்­டத்தால் காத்­தான்­குடி மதத் தீவி­ர­வா­தத்தின் தொட்டில் என்ற இழி பெய­ருக்கு இன்று இலக்­கா­கி­யுள்­ளது. இருந்தும் இதே காத்­தான்­கு­டிதான் நான் பிறந்த ஊரென்று உலகில் எங்­கி­ருந்­தாலும் பறை­சாற்­று­வதில் எனக்­கொரு பெரு­மை­யுண்டு.

அண்­மை­யிலே இந்த ஊருக்கு ஒரு முக்­கிய விருந்­தா­ளி­யாக விஜயம் செய்த ஞான­சார தேரர் என்ற ஒரு நாய­கனின் திரு­வி­ளை­யாட்டை ஆங்­கில மொழியில் ஏற்­க­னவே நான் கொழும்பு டெலி­கிறாப் என்ற மின்­னி­தழில் வெளி­யிட்­டுள்­ள­போதும் அதை விடிவெள்ளி வாசகர்களுக்­காக தமி­ழிலும் படைக்­க­லா­மென விரும்­பு­கிறேன்.

ஞான­சார தேரர் ஒரு கல­கப்­பி­ரியர். என­வேதான் அவரை ஒரு நாரதர் என்று தலை­யங்­கத்தில் குறிப்­பிட்­டுள்ளேன். இவர் பொது­பல சேனா என்னும் இஸ்­லா­மோ­பிய அமைப்பின் பொதுச் செய­லாளர். இந்த அமைப்­பையும் தடை­செய்ய வேண்­டு­மென ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்பு விசா­ர­ணைக்­குழு சிபாரிசு செய்தும் அதனை சுதந்­தி­ர­மாக இயங்­க­விட்­டுள்ளார் அதே ஜனா­தி­பதி. 2014 இல் அளுத்­க­மையில் இடம்­பெற்ற சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தின் முக்­கிய கதா­நா­ய­க­னாக விளங்­கி­யவர் நமது நாரதர். அந்­தக்­ க­ல­வ­ரத்தை அப்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த இதே ஜனா­தி­பதி கைகட்­டி­நின்று வேடிக்கை பார்த்­ததை என்­னென்று விப­ரிப்­பதோ? அதை நிறுத்­து­வ­தற்­காகத் தலை­யிட்­டி­ருந்தால் நாடே ஒரு போர்க்­க­ள­மாக மாறி இருக்­கு­மெ­னவும் அவர் கூறிய ஒரு நொண்­டிச்­சாட்­டையும் எவ்­வாறு சரி­காண்­பதோ?

எனினும் அந்தச் சம்­ப­வத்தை அடுத்து இலங்­கையில் நடை­பெற்ற எல்லாச் சிங்­கள முஸ்லிம் கல­வ­ரங்­க­ளுக்கும் மறை­மு­க­மா­கவோ வெளிப்­ப­டை­யா­கவோ ஞான­சாரர் தனது ஆத­ரவை வழங்­கி­யுள்ளார். அதற்­கான ஆதா­ரங்கள் உண்டு. இவர் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் ஒரு முக்­கிய தூண். இலங்கை பௌத்தர்களுக்கு மட்­டுமே சொந்­த­மான நாடு. அதில் வாழும் ஏனைய இனங்­க­ளெல்லாம் பௌத்தர்களின் தயவில் வாழும் வாடகைக் குடி­களே என்று முதன்­மு­தலில் கண்டி மாந­கரில் பகி­ரங்­க­மா­கவே முழக்­க­மிட்ட மாவீரர். அந்த அபாண்­ட­மான கூற்றை மறைந்த மங்­கள சம­ர­வீ­ர­வைத்­த­விர எந்த ஒரு பௌத்த அர­சியல் தலை­வனும் இன்­று­வரை மறுத்­து­ரைக்­கா­தது புது­மை­யாகத் தெரி­ய­வில்­லையா? நீதி­மன்­றத்­தையே அவ­ம­தித்த குற்­றத்­துக்­காகச் சிறையில் அடைக்­கப்­பட்டு முன்னாள் ஜனா­தி­பதி சிறி­சே­னாவின் அர­சியல் நோக்­கத்­துக்­காக மன்­னிப்பு வழங்­கப்­பட்டு, விடு­த­லை­யாகி இன்­றைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செய­ல­ணிக்குத் தலை­வ­ராக்­கப்­பட்டு ஜனா­தி­ப­தியின் செல்­லப்­பிள்­ளை­யாக நட­மா­டு­கிறார். இந்தக் கலக நாய­க­னுக்கு இன்­னு­மொரு தோற்­றமும் உண்டு. அதுதான் இக்­கட்­டு­ரைக்கும் அவரின் காத்­தான்­குடி விஜ­யத்­துக்கும் முக்­கி­ய­மா­னது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கும் வஹ்­ஹா­பி­யத்­துக்கும் எதி­ராகப் போராடும் இப்­பே­ரி­ன­வாதத் தள­பதி அண்­மைக்­கா­ல­மாக சூபித்­துவ இஸ்­லாத்தின் பாது­கா­வ­ல­னா­கவும் மாறி­யுள்ளார். இவ­ருக்கு எந்த அள­வுக்கு சூபித்­து­வத்தின் தத்­து­வங்­க­ளிலும் வர­லாற்­றிலும் புல­மை­யுண்டோ என்­பதும், சூபித்­து­வத்தின் மேதை­க­ளான இப்னல் அறபி, அல்­கஸ்­ஸாலி, ஜலா­லுத்தீன் ரூமி ஆகி­யோரின் படைப்­பு­க­ளை­யேனும் படித்­துள்­ளாரா என்­பதும் தெளி­வில்லை. ஆனால், இலங்­கை­யிலே சூபித்­துவ இஸ்­லாமே வளர்க்கப்­ப­ட­வேண்டும் என்­பதில் இவர் பிடி­வா­த­மாக இருக்­கிறார். இவ­ரது பிடி­வாதம் இந்­நாட்டில் சூபித்­து­வத்தின் பெயரால் உரு­வா­கி­யுள்ள எத்­த­னையோ முஸ்லிம் குழுக்­க­ளுக்கு ஒரு ஊக்­கு­விப்­பாக அமைந்­துள்­ளதை மறுக்க முடி­யாது.

அண்­மையில் ஒரே நாடு ஒரே சட்டச் செய­ல­ணியின் தலை­வ­ரென்ற முறையில் இவர் மேற்­கொண்ட காத்­தான்­குடி விஜ­யத்­தின்­போது அங்கே நீண்­ட­கா­ல­மாக சூபித்­துவ இஸ்­லாத்தை வளர்க்கின்ற மௌலவி ரவூப்பின் பள்­ளி­வா­சலில் ஆடம்­ப­ர­மான ஒரு வர­வேற்­புக்குப் பிர­தம விருந்­தா­ளி­யானார். அந்த வைப­வத்­தின்­போது எவ்­வாறு அந்த மௌல­வியும் அவ­ரது பக்­த­கோ­டி­களும் பல ஆண்­டு­கா­ல­மாக வைதீக இஸ்­லாத்தின் காத்­தான்­குடித் தலைவர்களால் அதிலும் குறிப்­பாக அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை­யினால் ஓரங்­கட்­டப்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தையும், சுமார் நாற்­பத்­தி­ரண்டு ஆண்­டு­க­ளுக்­குமுன் அந்தச் சபை இந்த மௌல­வியை ஒரு முர்தத் என்று பட்டம் சூட்­டி­ய­தா­கவும், அதனால் இந்த மௌல­வியின் உயி­ருக்கே ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தென்றும் விளக்­கப்­பட்­ட­தாக அறி­கிறோம். இத­னைப்­பற்றி மேலும் தொட­ருமுன் இக்­கட்­டு­ரை­யா­ள­ரைப் ­பற்­றிய உண்­மை­யொன்றை வாசகர்களுக்கு உணர்த்த வேண்­டி­யுள்­ளது. அதா­வது இக்­கட்­டு­ரை­யாளர் இந்த மௌல­விக்கோ அல்­லது வேறெந்த மௌல­வி­க­ளுக்கோ அல்­லது ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கோ வக்­கா­லத்­து­ வாங்­கு­பவர் அல்ல என்­பதை வாசகர்கள் அறிந்­து­கொள்ளல் வேண்டும். ஆனாலும் கடந்த காலச் சம்­பவம் ஒன்­றைப்­பற்றி இந்த வைப­வத்தில் வழங்­கப்­பட்ட விளக்­கங்­க­ளெல்லாம் பிர­தம விருந்­தா­ளி­யான ஞான­சார தேரரின் கலக நாட­கத்­துக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம் என்­பதே எனது வாதம்.

வர­வேற்பு உப­சா­ரத்தில் கலந்­து­கொண்டு கொழும்பு திரும்­பிய ஞான­சாரர் மேற்­கூ­றிய சம்­ப­வத்தை மைய­மா­க­வைத்து ராஜாங்க அமைச்சர் பேரா­சி­ரியர் ஜய­சு­ம­னவை ஒரு கரு­வி­யாகப் பாவித்து நீதி அமைச்சர் அலி சப்­ரிக்கு ஒரு மடல் வரையச் செய்தார். அந்த மடல் பேரா­சி­ரி­யரின் கைச்­சாத்­துடன் அனுப்­பப்­பட்டு அதன் பிர­தி­யொன்று ஞான­சா­ர­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அந்தக் கடி­தத்தில் உலமா சபை குறிப்­பிட்ட மௌல­விக்­கெ­தி­ராக ஒரு பத்வா வழங்­கி­ய­தென்றும், அதனால் அந்த மௌலவி கொலை அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்ளார் என்றும், ஆதலால் அவ­ரது அடிப்­படை உரி­மை­களை நீதி அமைச்சர் உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென்றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. இந்த கடி­தத்தில் முக்­கி­ய­மாக நோக்­கப்­ப­ட­வேண்­டி­யது என்­ன­வென்றால் பத்வா என்ற வார்த்தைப் பிர­யோகம்.

1979ல் ஈரானின் புரட்சித் தலைவர் ஆய­துல்லா கொமைனி, சல்மான் ருஷ்­தியின் “சாத்­தா­னிய வாச­கங்கள்” என்ற நாவ­லுக்­கெ­தி­ராக வழங்­கிய பத்­வாவால் ஏற்­பட்ட கல­வ­ரங்­களை வாசகர்கள் அறிந்­தி­ருப்பர். ருஷ்­தியை கண்­ட­வி­டத்தில் கொலை செய்­யு­மாறும் கொமைனி வேண்டி இருந்தார். பேரா­சி­ரி­யரின் கடிதம் அந்த நினை­வு­க­ளுக்குப் புத்­துயிர் அளிப்­ப­தாக அமைந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. உலமா சபை பேரா­சி­ரி­ய­ருக்கு அனுப்­பிய பதில் கடி­தத்தில் அச்­சபை பத்வா வழங்­க­வில்லை என்றும் காத்­தான்­குடி மக்கள் ரவூப் மௌல­விக்கு எதி­ராக எழுப்­பிய புகார்­களின் விளை­வாக அவ­ரைப்­பற்­றிய மார்க்க ரீதி­யான ஒரு அபிப்­பி­ரா­யத்­தையே அறி­வித்­த­தென்றும் குறிப்­பி­டப்­பட்­டது. எது எவ்­வா­றி­ருப்­பினும் இந்த விஷமக் கடி­தத்தின் முக்­கி­ய­மான நோக்­கங்கள் இரண்டு.

ஒன்று, நீதி அமைச்­சரின் பத­விக்கு ஆப்­பு­வைப்­பது. இரண்டு, முஸ்லிம் மக்­க­ளி­டையே மதப்­பி­ளவை வளர்த்துக் கல­வ­ரங்­களை உண்­டு­பண்ணி அந்தக் கல­வ­ரங்­களை ஆதா­ர­மாக வைத்து ராஜ­பக்ச ஆட்­சியை பலப்­ப­டுத்­து­வது. முத­லா­வதை நோக்­கும்­போது அலி சப்­ரியை நாடா­ளு­மன்­றத்­துக்குள் பின்­க­தவால் நுழைத்து அவரை நீதி அமைச்­ச­ராக ஜனா­தி­பதி நிய­மித்­த­தையும் அதனால் பௌத்த பேரி­ன­வா­திகள் கொதிப்­ப­டைந்­த­தையும் நாடே அறியும். அந்­தக்­கொ­திப்பு ஓர­ளவு அமை­தி­ய­டைந்­தி­ருந்த நிலையில் நமது நாரத தேரர் ஒரே நாடு ஒரே சட்டச் செய­ல­ணியின் தலை­வ­ரா­கிய பின்னர் ஜனா­தி­ப­திக்கு விடுத்த முக்­கிய ஒரு வேண்­டுகோள் அலி­சப்­ரியை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்டும் என்­ப­தாகும். அதற்கு அவர் முன்­வைத்த காரணம் அலி­சப்ரி அமைச்­சராய் இருக்கும் வரை ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்­துக்கு நீதி­யான ஒரு முடிவு கிடைக்­காது என்­பதே. ஆனாலும் ஜனா­தி­பதி தேரரின் வேண்­டு­கோளை கவ­னத்தில் எடுக்­க­வில்லை. இந்த நிலையில் மேற்­கூ­றிய கடிதம் மீண்டும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக எடுக்­கப்­பட்ட ஒரு விஷ­மத்­த­ன­மான முயற்சி என்­பதில் சந்­தே­கமே இல்லை. இந்தக் கடி­தத்­துக்கு அமைச்­சரின் பதிலை சமூகம் ஆவ­லுடன் எதிர்­பார்க்­கி­றது.

இந்­தக்­ க­டிதம் அமைச்­ச­ருக்கும் உலமா சபைக்­கு­மி­டையில் பிரச்­சி­னையை உண்­டாக்­கு­வது மட்­டு­மல்­லாமல் உலமா சபைக்கும் சூபிக்­கு­ழுக்­க­ளுக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­க­ளையும் விரி­வாக்க முனை­கி­றது. இந்­தப் ­பி­ரச்­சி­னைகள் விரி­வா­கும்­பட்­சத்தில் நமது கலகப் பிரியர் யார்­பக்கம் நின்று முஸ்­லிம்­க­ளுக்­குள்­ளேயே ஒரு கல­கத்­துக்குத் தூபம் போடுவார் என்­பதை மேலும் விளக்கத் தேவை­யில்லை. அவ்­வா­றான ஒரு கல­கத்தில் ஏதும் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்றால் அது பொது மக்­க­ளி­டையே இன்று மதிப்­பி­ழந்து செல்லும் இவ்­வ­ர­சுக்கும் ஜனா­தி­ப­திக்கும் ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமை­யலாம். எவ்­வாறு?

முஸ்லிம் இனத்­துக்­கெ­தி­ரான ஒரு கல­வ­ரத்தைத் தூண்­டி­விட்டு முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்கி பேரி­ன­வாத ஆட்­சியைப் பலப்­ப­டுத்தும் ஓர் உபாயம் சில ஆண்­டு­க­ளாக முயற்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. ஆனால் அதற்கு எந்­த­வொரு சந்தர்ப்பத்­தையும் முஸ்­லிம்கள் இது வரை வழங்­கா­தது பேரி­ன­வா­தி­க­ளுக்கு ஏமாற்­றத்தை கொடுத்­துள்­ளது.

அதற்­காக முஸ்லிம் சமூ­கத்தைப் பாராட்ட வேண்டும். இந்த நிலை­யி­லேதான் முஸ்­லிம்­க­ளுக்­குள்­ளேயே பிள­வினை ஏற்­ப­டுத்தி, அதனை கல­வ­ர­மாக்கி, அந்­தக்­க­ல­வ­ரத்­துக்கு தீவி­ர­வாதம் என்ற வண்­ணத்­தையும் தீட்டி, அந்தத் தீவி­ர­வாதம் நாட்டின் பாது­காப்­புக்கு ஆபத்­தாக அமைந்­துள்­ளது என்ற சாட்டில் இரா­ணுவ பலத்­துடன் பேரி­ன­வாத ஆட்­சியை தொடர்ந்து நீடிக்க எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­கவே ஞான­சா­ரரின் திரு­வி­ளை­யா­டலைக் கரு­த­வேண்டும். இந்த நாடகம் அரங்­கே­று­வ­தற்கு முஸ்­லிம்கள் எந்த வகை­யிலும் கார­ண­மாக இருக்­கக்­கூ­டாது என்­பதே வாச­கர்­க­ளிடம் இக்­கட்­டுரை முன்­வைக்கும் வேண்­டுகோள்.

இன்­னு­மொரு கவ­லைக்­கு­ரிய விட­யத்­தையும் குறிப்­பட வேண்­டி­யுள்­ளது. அதா­வது இந்தத் திரு­வி­ளை­யா­டலின் மத்­தி­யி­லா­வது இலங்­கையின் தற்­போ­தைய முஸ்லிம் தலை­மைத்­து­வத்­துக்குள் இந்த நாரத முனி­வ­ருக்கு நயம்­பட உரைக்க ஒரு நா இல்­லையே என்­பது வேதனை அளிக்­கி­றது. உண்­மையை துணிந்து உரைக்க ஏன் இந்தத் தலைமை தயங்­கு­கி­றதோ? ஆனாலும் இதற்­கான முழுப் பொறுப்­பையும் முஸ்லிம் சமூ­கமே ஏற்­க­வேண்டும். ஏனென்றால் அவர்­களைத் தலை­வர்­க­ளாக்­கி­யது சமூ­கம்­தானே? ஆகவே, அடுத்த சந்­தர்ப்பம் வரும்­போது வெறும் பச்­சோந்­தி­க­ளையும் ஆஷா­ட­பூ­தி­க­ளையும் தலை­வர்­க­ளாகத் தெரிவு செய்­யாமல் சமூ­கப்­பற்றும் நாட்­டுப்­பற்றும் அறி­வாற்­ற­லும்­கொண்ட தலைவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டலை இன்றுள்ள புத்திஜீவிகளே பொறுப்பேற்க வேண்டும்.-Vidivelli

கலா­நிதி அமீ­ரலி, மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம், மேற்கு அவுஸ்திரேலியா

விடிவெள்ளி பத்திரிகை – Page 11 27/1/2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter