வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.
அதன் ஆரம்ப கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு மாத்திரம் அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறும்.
அதன் பிரகாரம் பணியகத்தின் பிரதான காரியாலயம், மாகாண மற்றும் மாவட்ட காரியாலயங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து, வந்திருப்பவர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும்.
தொழிலுக்காக செல்பவர்களிடம் பணியகத்தினால் சாதாரணமாக கோரப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமாக, தென் கொரியா, ஜப்பான், கனடா, ஜேர்மன் போன்ற நாடுகளின் தொழில் தருணர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளும் இலங்கையர்கள் அந்த நாடுகளில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக அனுப்பப்படும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகள் எதிர்வரும் நாட்களில் ஆம்பிக்கப்படும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையும் இலக்கானதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 13 ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.