அதிகரிக்கும் பதற்ற நிலை
கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரத்தைப்பெற்று பதவியில் அமர்ந்து சில மாதங்களுக்குள் பல வழிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அரச விரோதத்தை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் நிர்வாகம் நாட்டை முடக்கி கிராமங்களைத் தனிமைப்படுத்தி சமூகத்துக்கு தொல்லைகளை ஏற்படுத்தியது. அரச சார்பான ஊடக நிறுவனங்கள் கொவிட் வைரஸ் தொற்று பரவுவதனாலேயே அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரசாரம் செய்தன.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி கொவிட் தொற்று காரணமாக மற்றும் கொவிட் தொற்றினால் இறந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கூட அடக்கம் செய்யக்கூடாது என்ற தீர்மானம் அரசாங்கத்தைப் பாதிக்கச் செய்தது. கொவிட் தொற்றினால் முதன் முதல் முஸ்லிம் ஒருவர் காலமானதன் பின்பே அரசாங்கம் இந்தத் தடையை விதித்தது.
மரணித்த கொவிட் தொற்றாளர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது தகனம் செய்ய வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட இலங்கையின் நிபுணர்கள் நிராகரித்தனர். வைரஸ் நிலத்தடி நீர் மூலம் பரவலாம் என்ற தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. என்றாலும் அரசாங்கத்தின் இந்தக் கொள்கை சுமார் ஒரு வருடகாலம் அமுலில் இருந்தது. அரசின் இந்தக் கொள்கையினால் முஸ்லிம் குடும்பங்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அரசின் இந்தக் கொள்கை முஸ்லிம்களின் அன்புக்குரியவர்களின் சடலங்கள் கொவிட் 19 ஐ காரணம் காட்டி அவர்களது சமய நம்பிக்கைக்கு மாறாக பலவந்தமாக தகனம் செய்யப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது.
கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தடை 2021 பெப்ரவரி 26 ஆம் திகதி நீக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு மற்றும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் என்பன இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மதிப்பீடு செய்தன.
இலங்கை அரசாங்கம் கொவிட் தொற்று சடலங்களை அடக்கம் செய்யும் தடையை நீக்கியபோதும் அடக்கத்துக்காக மிகவும் தூரத்தில் ஒரேயொரு இடத்தையே ஒதுக்கியது. இங்கு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பகுதியில் தங்கள் அன்புக்குரியவர்களை நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. முஸ்லிம்கள் மீது பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டன. சிறு எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களினதும் இந்துக்களினதும் சடலங்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டன.
மார்ச் 12 ஆம் திகதி அரசாங்கம் தீவிரமயமற்றதாக்கல் தொடர்பிலான புதிய சட்ட விதிகளை அறிவித்தது. தீவிரவாத சமய கொள்கைகளைக் கொண்டுள்ள வன்முறையாளர்களை தீவிரமயமற்றதாக்கலே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் (PTA)கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வாறானவர்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஒருவர் வன் செயல்களில் ஈடுபட்டால் அல்லது சமய இனம் அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால், ஈடுபடுவதாக இனங்காணப்பட்டால் அல்லது இருவேறுபட்ட குழுக்களிடையே மற்றும் சமய குழுக்களுக்கிடையே குரோதங்களை வளர்த்தால் அவரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தீவிரமயமற்றமாக்குதலுக்காக தடுத்து வைக்கலாம். 18 மாதங்கள் எதுவித நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி அல்லது அவரை மேற்பார்வை செய்வதற்காக தடுத்து வைக்க முடியும்.
இந்த சட்ட ஏற்பாடுகளையடுத்து உடனடியாக மனித உரிமைகள் சார்ந்த சட்டத்தரணிகளும் முஸ்லிம் தலைவர்களும் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை தீவிரமயமற்றதாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுதவற்கு தீர்மானிக்கப்பட்டது.
நீதிமன்றம் இந்த சட்டத்தினை ஒத்திவைத்தாலும் அரசாங்கம் தீவிரமயமற்றதாக்கல் திட்டத்தை அமுலாக்கும் எதிர்பார்ப்பிலே இருக்கிறது. தீவிரமயமற்றதாக்குதலின் கீழ் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கான அதிகாரங்கள் தற்போதைய பயங்கரவாத சட்டத்தின் கீழ் உள்வாங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எந்தளவு எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் என்றாலும் அவர்கள் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும் அவர்கள் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரமயமற்றதாக்கல் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களை விசேட முகாம்களில் மேலும் ஒரு வருடமோ அல்லது அதற்கு மேற்பட்ட காலமோ தடுத்து வைப்பதையே முன்மொழியப்பட்டுள்ள தீவிரமயமற்றதாக்கல் திட்டம் மேற்கொள்ளும்.
இதனால் இவ்வாறானவர்கள் தாம் அவமானப்படுவதாக கருதும் சாத்தியமுள்ளதால் ஆத்திரம் மேலீட்டால் மூர்க்கத்தனமான சமயக்கொள்கைகளைக் கொண்ட தீவிரவாதிகளாக மாறலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒன்றன் மேல் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. இது அரசியல் மயமாக்கப்பட்டது. தாக்குதலுக்கும் பாதுகாப்பு ஸ்திரமற்றதன்மைக்கும் காரணம் முஸ்லிம்களே என நியாயப்படுத்த முயற்சிக்கப்பட்டது. இந்தப் பரந்த தாக்குதலினை அடுத்து பதவிக்கு வந்த கோத்தாபய அரசு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்து வந்த முழுமையான குழுவினரையும் இடமாற்றம் செய்தது. குறிப்பாக இத்தாக்குதல் தொடர்பாக செயற்பட்டுவந்த பிரதான விசாரணையாளர் சானி அபேசேகர கைது செய்யப்பட்டார். அவர் மீது வீணாக குற்றம் சுமத்தப்பட்டது. ஏனைய அதிகாரிகள் பதவி நிலை தரம் குறைக்கப்பட்டார்கள்.
இதேவேளை மேலுமொரு பிரதான விசாரணையாளர் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தனியான ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும் அரச நிர்வாகம் நடைமுறைப்படுத்துவதை மறுத்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும் சிபாரிசுகளில் உள்ளடங்கியுள்ளது. மைத்திரிபால சிறிசேன தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகிறார். முஸ்லிம்களுள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு மற்றும் தற்கொலை குண்டுதாரிகள் வன்செயல்களில் ஈடுபடுவதற்கும் காரணமாக இருந்தவைகள் பற்றி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவேண்டுமெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முஸ்லிம் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு கூறப்பட்டது. கோத்தாபய அரசாங்கம் சில முஸ்லிம் பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தியது. உரிய நம்பத்தகுந்த காரணங்களின்றி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் ரிசாத் பதியுதீனுக்கு எவ்வித தொடர்புமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அசாத்சாலியை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினாலே அவர் விடுதலை செய்யப்பட்டார். அசாத்சாலி 8 மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
மனித உரிமைகள் சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகள் இருந்ததாக குற்றம் சுமத்தியே இவரும் பலாத்காரமாக கைது செய்யப்பட்டார்.
அரசாங்கம் இலங்கையின் கத்தோலிக்க தலைமைத்துவத்தின் மீது ஆத்திரம் கொண்டுள்ளது. கத்தோலிக்க தலைமைத்துவம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடலின் பின்னணியில் ஜனாதிபதியும் இருந்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளமையே இதற்குக் காரணமாகும். அரசாங்கம் மைத்திரிபால சிறிசேனவைப் பாதுகாக்கிறது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாதிருக்கிறது. இராணுவ உளவுப்பிரிவின் அதிகாரிகள் சில தற்கொலை குண்டுதாரிகளை தாக்குதலுக்கு முன்னைய நாள் தொடர்பு கொண்டுள்ளனர்.
கொழும்பு அருட்தந்தை, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் போப்பாண்டவர் (பாப்பரசர்) ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பிரபல ஆலோசகர் ஒருவர் இணையவழி கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்ததற்காக பொலிஸார் அவருக்கு அழைப்பாணை அனுப்பி மூன்று தினங்கள் விசாரணைக்குட்படுத்தினார்கள்.
ஆபத்தான சுலோகம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை கையாளும் விதம் தொடர்பில் கண்டனங்கள் அதிகரித்தன. அத்தோடு கடுமையான பொருளாதார பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதனால் அரசாங்கம் மீதான பொது மக்கள் ஆதரவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சிங்கள பெளத்த மக்களினதும் ஆதரவு வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையிலே அரசாங்கம் ஞானசார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’
ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்தது-. அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையையே தனது நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கியிருந்தது. இக்கொள்கை தெளிவாக இல்லாவிட்டாலும் பெளத்த மதம் அரசியல் யாப்பில் சிறப்புரிமைகளையும், சலுகைகளையும் அ-னுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஞானசார தேரரின் தலைமையிலான செயலணி உண்மையாக தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்பதை எவரும் நம்பவில்லை. அனைத்து சமயங்கள் மற்றும் இனக்குழுக்களின் செயற்பாடுகளை இச்செயலணி கவனத்திற் கொள்ளவேண்டும். ஆனால் இச்செயலணி சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான விவகாரங்களிலே அதிக கவனம் செலுத்தும் என கண்காணிப்பாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்செயலணி மத்ரஸா கல்வித்திட்டத்தில் சீர்திருத்தங்களைச் சிபாரிசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் தலைவர்கள் இது தொடர்பில் தங்கள் சிபாரிசுகளை அரசாங்கத்திடம் முன் வைத்திருக்கிறார்கள். அரசாங்கம் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளை ஒழுங்குப்படுத்துவற்கும், சீர் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. அத்தோடு இறக்குமதி செய்யப்படும் குர்ஆன் பிரதிகள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் உள்ளடங்கியவைகளை அவதானிப்புக்குட்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்குள் ஏனைய அரபுப் புத்தகங்களும் உள்ளடங்கும். நிக்காப் மற்றும் புர்கா தடை, மாடுகள் அறுப்பதற்கான தடை என்பனவும் திட்டமிடப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி வர்த்தகம் முஸ்லிம்களாலேயே நடாத்தப்படுகிறது. இதற்கு பெளத்த செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி, நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளது. இச்சட்டத்தில் மாற்றங்களையும் திருத்தங்களையும் அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கீகரித்துள்ளது. முஸ்லிம்களும் ஏனையவர்களும் தேவையான சீர்திருத்தங்கள் தொடர்பில் கடுமையாக விவாதித்து வந்தனர். இச்சட்டம் மனித உரிமைகளுடன் முரண்படுவதாகவும் வாதிட்டனர். பெண் செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.
பெளத்த தேசியவாதிகள் முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான விவாகம் மற்றும் குடும்பச் சட்டத்தினைக் கொண்டிருப்பதாக கண்டனங்கள் வெளியிட்டனர். இலங்கையில் சட்டத்தில் பாரம்பரிய வழக்கங்களை உள்ளடக்கிய குடும்பச்சட்டங்கள் அமுலிலுள்ளன.
சிங்களவர்களுக்கு கண்டிய சட்டம், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தேசிய வழமைச்சட்டம் இதேபோன்று முஸ்லிம்களுக்கு தனியான விவாக விவாகரத்துச்சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமே இன்று சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கண்டனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பலதார மணம், திருமணத்துக்கான வயதெல்லை, விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்கு ஆண் நீதிபதிகளைக்கொண்ட நீதிமன்றங்கள் என்பன பெண் செயற்பாட்டாளர்களால் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டதுடன் இவற்றில் திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்கள் இஸ்லாம் பிற்போக்கான சமயம் எனத் தெரிவித்தனர்.
அரசாங்கம் ஞானசார தேரரை எவ்வளவு காலத்துக்கு ஊக்குவிக்கும்? பௌத்த தேசியவாதிகள் ஒரே நாடு ஒரே சட்டம் அமுலாக்கலை எதிர்பார்த்துள்ளார்கள். அதாவது தனியான ஒரு சட்டம். இச்சட்டம் ஏனைய சமய நிறுவனங்களை மறுக்கும் அதேவேளை பௌத்த நிறுவனங்களுக்கு உயர் ஸ்தானத்தை வழங்கும்.
புனித நகரான அநுராதபுரத்தில் பாரிய அளவில் பௌத்த மத நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ உயரதிகாரிகள் மகாநாயக்க தேரர்கள், இலங்கையின் மிகப் பிரபல அதிகாரமிக்க பௌத்த குருமார்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்வைபவத்தில் அரசாங்கத்தின் முழுமையான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இராணுவம் மற்றும் பெளத்த குருமார்களை உள்ளடக்கிய சிங்கள தேசிய அரசியல் நோக்காகவே இந்த வைபவம் அமைந்திருந்தது. இந்த பௌத்த மத வைபவங்கள் அநுராதபுர புனித நகரில் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்பே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்தொன்றினை வெளியிட்டார். முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கையில் தனியார் சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். முஸ்லிம்களின் தனியார் சட்டம் மற்றும் கண்டியர் சட்டம், தமிழர்களுக்கான சட்டம் என்பன தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் உறுதியளித்தார்.
இதேவேளை கொழும்பு இதுவரை அதன் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளை கவனமாக கையாண்டு வருகிறது. இதற்காக கடும்போக்கு பௌத்த தேசியவாதிகளுக்கு ஆதரவு நல்கி வருகிறது. தீவிரவாதத்தை இல்லாமற் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடாகும். இந்நிலையில் முஸ்லிம் உலகத்துடன் பொருளாதார மற்றும் அரசியல் நட்புறவுகளையும்பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பாக அரசாங்கத்திடம் இதுவரை ஒரு திட்டமான நிகழ்ச்சி நிரல் இல்லை. இதேவேளை ஞானசார தேரருக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் வேறுபாடுகளை உருவாக்க முயற்சிப்பவர். முஸ்லிம்களுக்கு எதிராக புதிய அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பவர். பௌத்த தேசிய கொள்கைகளை கடந்த தசாப்தத்தில் பிரசாரம் செய்தவர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து வெளிநாட்டு நன்கொடையாளர்கள் கொடூரமான தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார்கள். சமூக ஒற்றுமையை கட்டியெழுப்புவது உட்பட பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு பெருமளவிலான வெளிநாட்டு நிதியுதவிகள் கொடூரமான தீவிரவாத்தை தடுப்பதற்காக கிடைத்தன. இந்நிலையில் ஒரு மதமே இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் ஞானசார தேரரையோ அல்லது ஏனைய தீவிரவாத பௌத்த குருமார்களையோ புனர்வாழ்வு (Rehabilitate) செய்யுமாறு அரசாங்கத்தைக் கோருவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை.
ஆங்கிலத்தில்: அலன் கீனன்
(சர்வதேச நெருக்கடிகள் குழுவின் சிரேஷ்ட ஆலோசகர்)
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
விடிவெள்ளி பத்திரிகை 2022-01-16