நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா என நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படுவதே தவிர ஜனாதிபதியோ அல்லது அவரது குடும்பமோ சொகுசாக அதிகாரங்களுடன் வாழ்வதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டி அரசாங்கம் எல்லாச் சவால்களுக்கும் தைரியமாக முகம் கொடுத்து செயல்படும்.
அமைச்சர்களான அல் சப்ரி, ரோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அந் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,
நாட்டை சீராக ஆட்சி செய்வதில் 19 ஆவது திருத்தச் சட்டம் இடையூராக உள்ளன. அதனை மாற்றி ஜனாதிபதிக்கு வேலை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் ஜனாதிபதியையும், அரசையும் தெரிவு செய்தது புத்தகம் எழுதுவதற்கு அன்றி நிறைய வேலைகள் செய்வதற்காகும்.
கடந்த ஆட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பலன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா? 69 இலட்சம் மக்கள் வாக்களித்தும் கூட ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரை மாற்ற முடியுமா? நாட்டில் குற்றச் செயல்கள் கூடியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் எமது சகோதர கத்தோலிக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. முஸ்லிம் பெயரை தாங்கிய பயங்கராத கும்பல் மேற்கொண்ட இக்கொடூர செயலை யாரும் அங்கீகரிக்க முடியாது.
இத்தாக்குதலினால் முழு முஸ்லிம்களுக்கும் அவப் பெயர் ஏற்பட்டதோடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலையும் காணப்பட்டது.
மூவின மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஒரே இலக்காகும் என்றும் அவர் கூறினார்.