அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்

பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள், தமிழ, சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ கிராம் அரிசியை 300 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்த அமைச்சர்,

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் மற்றும் அரிசிக்கு அதிக விலையை விதித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.  

அமைச்சரவை அமைச்சர்கள் இந்த கவலையை எழுப்பியதுடன் அரிசிக்கு நிலையான விலை பேணப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்டதாகவும், எனவே, அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரிசி மாஃபியா நுகர்வோரை சுரண்டுவதைத் தடுக்கும் நடவடிக்கையாகவே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு நெருக்கடியுமின்றி அனைத்தையும் இறக்குமதி செய்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியை 105 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவாகவே பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிவாரணப் பொதி வெறும் தோற்றம் என்று சில குழுக்கள் கூறுவதாகவும் 10 கிலோ அரிசி மற்றும் 20 பொருட்கள் பொதியில் 3,998 ரூபாய்க்கு கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

444 சதொச விற்பனை நிலையங்கள் மாத்திரமே உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் எந்தவொரு தனிநபரும் 1998 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். -தமிழ் மிற்றோர் (2022-01-18 05:07:52)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter