‘இலங்கைக்கு காதி நீதிமன்றங்கள் தேவையில்லை என்றே நான் கூறுகிறேன். காதி நீதிமன்றங்கள் மூலம் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைப்பதில்லை. எனக்கு தெரியாமலே எனது கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு ஒரே சட்டமே தேவை’ என கடந்த வாரம் பதுளையில் இடம்பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அமர்வில் சாட்சியமளித்த பதுளையைச் சேர்ந்த பெண்மணி பஸீனா தெரிவித்தார்.
இவரது தந்தை ஒரு முஸ்லிம். தாயார் சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்கது. பஸீனா தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது;
‘நான் பஸீனா. எனது வயது 30. நான் முஸ்லிம் சமயத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து கொண்டேன். என்றாலும் நான் அறியாமலே, எனக்குத் தெரியாமலே எனது கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை ஆதரிப்பவளாகவே நான் இருக்கிறேன்.
இன்று முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் பேசுவதற்கு எவருமில்லை. எவரிடமாவது இந்த அநீதிகள் தொடர்பில் தெரிவித்தால் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை.
எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளுக்கு வயது 8. நான் எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டேன். எனது கணவருக்கு விவாகரத்து வழங்கிய காதி நீதிவான் எனது மகளுக்கு கொடுப்பனவாக மாதம் 3 ஆயிரம் ரூபா பெற்றுத் தந்தார். என்னால் விவாகரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது கணவருக்கு மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று முறையிட்டேன்.
அந்தப் பெண்ணை அழைத்து பிரச்சினையைத் தீர்ப்பதாக பதுளை காதிநீதிவான் தெரிவித்தார். என்னையும் அழைத்தார். காதிநீதிவான் அந்தப் பெண்ணை எனது கணவர் திருமணம் செய்வதற்கு கடிதம் வழங்கியுள்ளார்.
எனது மகளுக்கு தாபரிப்பாக 3 ஆயிரம் ரூபா மாதாந்தம் எனது கணவரிடமிருந்து பெற்றுத்தந்த காதிநீதிவான் எனது பொருட்கள் அனைத்தையும் எனது கணவருக்கு என்னிடமிருந்து பெற்றுக்கொடுத்தார். எனது மகள் பால் அருந்தும் கோப்பையைக்கூட விட்டு வைக்கவில்லை. எனது பிரச்சினையின் பின்பு காதிநீதிமன்றம் பதுளையில் இல்லை. மூடப்பட்டு விட்டது.
பின்பு நான் கொழும்பு காதிமேன்முறையீட்டு மன்றத்துக்குச் சென்றேன். காதி மேன் முறையீட்டுமன்றம் என்னை நுவரெலியா காதிநீதிமன்றுக்கு அனுப்பி வைத்தது. அங்கு எனது மகளுக்கு தாபரிப்புப் பணமாக விதிக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. நான் எனக்கு நஷ்ட ஈடு கோரினேன். நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா பெற்றுத்தருவதாக காதிநீதிவான் கூறினார். அவ்வளவுதான் அத்துடன் முடிந்து விட்டது என்றும் தெரிவித்தார். அப்படியென்றால் எனது பெறுமதி 50 ஆயிரம் ரூபாவா? என காதி நீதிபதியிடம் கேட்டேன். இந்தப் பணத்தினால் பால் மாடு ஒன்று வாங்கி அதன் மூலம் கூட என்னால் வாழ முடியாதல்லவா? என்றேன்.
விருப்பமென்றால் 50 ஆயிரம் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளுங்கள். இன்றேல் அதுவுமில்லை என்றார். முஸ்லிம் சட்டத்துக்கு அமைய கணவரால் வேறோர் பெண்னை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
எனது கணவருக்கு வேறோர் பெண்ணுடன் தொடர்பிருப்பதாக நான் காதிநீதிவானிடம் ஏற்கனவே கூறியிருந்தேன். அந்தப் பெண் பொலிஸ் விசாரணையின்போது முன்பு கணவருடன் தொடர்பிருந்தது, இப்போது இல்லை என வாக்கு மூலம் அளித்திருந்தாள். இந்த விபரங்களையும் காதிநீதிபதியிடம் நான் கூறினேன். இவ்வாறு கூறியும் நீதிவான் அந்தப் பெண்ணை எனது கணவர் விவாகம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பின்பு கொழும்பிலிருந்து வந்து என்னை சந்தித்தார்கள். பிள்ளைக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று கேட்டார்கள். மாதம் 15 ஆயிரம் ரூபா செலவாகிறது என்று கூறினேன். இப்போது ஒரு வருடகாலமாக எனது பிள்ளைக்கு எனது முன்னாள் கணவரால் தாபரிப்பு வழங்கப்படுவதில்லை. இதன் பிறகே நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தேன்.
எனது வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் காதிநீதிவான் கணவருக்குப் பெற்றுக் கொடுத்தார். எனது அடையாள அட்டை கூட இல்லாது நான் திரும்பி வந்தேன்.எனது கணவரின் வீட்டுக்கு முன்னாலே அவர் திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணின் வீடு இருக்கிறது. அங்கு சென்று கணவருடன் வாழுமாறு பதுளை காதி நீதிவான் எனக்கு கூறினார். நான் முடியாது என்றேன்.
காதிநீதிவானிடம் நான் நீதி வேண்டிய போது அவர் என்னிடம் விவாகரத்து சான்றிதழையே தந்தார். நான் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் முறையிட்டேன். ஆனால் எனக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
நான் காதிநீதிமன்றத்தை அவமதித்ததாக காதிநீதிவான் பொலிஸில் முறையிட்டார். அவமானப்படுத்தவில்லை, இழைக்கப்பட்ட அநீதிக்காகவே அவள் போராடுகிறாள் என்று பொலிஸார் காதிநீதிவானிடம் தெரிவித்தார்கள். நான் காதி நீதிமன்றை வீடியோ பண்ணியதாகவே முறைப்பாடு செய்யப்பட்டது. பதுளை காதிநீதிவானிடம் பல தடவைகள் நான் மகளின் தாபரிப்பு பணத்தை அதிகரித்துத் தருமாறு கோரினேன். அவர் அதிகரிக்காததினாலே நான் வீடியோ பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்கினேன்.
எனது முன்னாள் கணவர் ஒரு வருடகாலமாக எனது பிள்ளைக்கு ஒரு சதம் கூட தருவதில்லை. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புப்பிரிவுக்குச் சென்று முறையிடுவதற்கு கடிதமொன்று கோரினாலும் காதிநீதிவான் தருவதில்லை.
இலங்கைக்கு காதிநீதிமன்ற முறைமை தேவையில்லை என்றே நான் கூறுகிறேன். காதிநீதி மன்றங்கள் மூலம் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தானாக முன்வந்து பேசுவதற்குப் பயப்படுகிறார்கள்.
காதிநீதிமன்றில் ஓய்வு பெற்ற அதிபரே நீதிவானாக இருக்கிறார். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இவர்களால் தான் குடும்பவாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. நான் இப்போது தந்தையுடனே தங்கியிருக்கிறேன். விவாகரத்து பத்திரத்தில் நான் கையொப்பமிட்டில்லை. எனது கணவர் நான் அவரை சந்தேகிப்பதாக முறையிட்டே விவாகரத்து பெற்றுள்ளார். அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததனாலே சந்தேகம் கொண்டிருந்தேன்.
இவரது தொடர்பு பற்றி பொலிஸில் நான் முறையிட்ட போது அவர் தனது பெற்றோரின் விருப்பம் காரணமாகவே என்னைத் திருமணம் செய்ததாகவும், தற்போது அவர் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இதனையே காதிநீதிமன்றிலும் கூறினார்.
இவர்கள் பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். எனது கணவர் என்னை தலாக் செய்து விட்டதாகக் கூறப்பட்டது. தலாக் கூறப்பட்டது எனக்குத் தெரியாது. எனது தந்தை முஸ்லிம், தாயார் சிங்களம். தாயார் தற்போது உயிருடன் இல்லை.
நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததையடுத்து என்னிடம் பலர் வந்து முறையிட்டார்கள். நான் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், சிங்களவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செயற்படுவதாகவும் கூறினார்கள்.
பதுளை காதிநீதிவான் பணம் பெற்றுக்கொண்டு கணவரின் பக்க சார்பாக செயற்பட்டவர். எனது இந்தப் பிரச்சினையின் பின்பு பதுளை காதிநீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. இப்போது பதுளையில் காதிநீதிமன்றம் இல்லை. பின்பு பதுளை வழக்குகள் நுவரெலியாவிலே விசாரிக்கப்பட்டன. பின் அங்கிருந்து பலாங்கொடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நான் ஒரு வருட காலமாக காதி நீதிமன்றம் செல்லவில்லை. சென்றாலும் என்னையும் எனது கைப் பையையும் சோதனையிட்டதன் பின்பே அனுமதிப்பார்கள். ஆனால் ஏனையவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
எனது பிள்ளைக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எனது கணவர் மீண்டும் எனக்கு வேண்டுமென வழக்கு தாக்கல் செய்ய முடியும் என காதிமேன்முறையீட்டு மன்றில் தெரிவித்தார்கள். ஆனால் அவர் இன்னொரு பெண்ணுடன் இருக்கும்போது என்னால் எப்படி வாழ முடியும்? அவர் என்னுடன் உண்மையாக இருப்பாரா? அவரின் சொத்துகளில் அரைவாசியை எனது பிள்ளைக்கு பெற்றுத் தருமாறும் கோரினேன். காதி மேன்முறையீட்டு நீதிமன்றில் கடிதமொன்று தந்தார்கள். அதை காதிநீதிமன்றில் பார்வையிடுவதும் இல்லை.
ஆண்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். நால்வரையும் சமமாக நடத்த வேண்டுமெனக் கூறப்படுகிறது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. அவர்கள் தாம் நினைத்தவாறு செயற்படுகிறார்கள்.’ என்றார்.
காதி நீதிவான்கள் போரத்தின் விளக்கம்
பதுளையைச் சேர்ந்த பஸீனா கடந்த வாரம் பதுளையில் இடம்பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அமர்வில் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விடிவெள்ளி காதிநீதிவான்கள் போரத்தின் பிரதித் தலைவரும் பதுளை காதி நீதிமன்றின் பதில் நீதிவானுமான எம்.இப்ஹாம் யெஹ்யாவைத் தொடர்பு கொண்டு வினவியது, அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
சம்பந்தப்பட்ட பெண் ஏ.ஜே.பஸீனா. அவளது முன்னாள் கணவர் எம்.சமீம் எம்.ஜனீர். இவர்களது திருமணம் 2013.05.19இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹராக 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கைக்கூலி வழங்கப்படவில்லை. இப்பெண் தான் 10 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். ஆனால் விவாக அத்தாட்சிப் பத்திரத்தின்படி அவள் 22 வயதிலே திருமணம் செய்துள்ளார்.
பஸீனாவை தலாக் கூறுவதற்கு 2018 ஆம் ஆண்டிலே கணவரினால் பதுளை காதிநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஸீனா வழக்கு விசாரணைகளில் சிலவற்றுக்கே சமுகமளித்துள்ளார். ஏனைய விசாரணைகளுக்கு சமூகமளிக்காது விட்டால் அறிவித்தல் ஒன்று அனுப்பி விட்டு தீர்ப்பு வழங்குவதற்கு காதி நீதிவானுக்கு அதிகாரமிருக்கிறது. விவாகரத்து அத்தாட்சிப் பத்திரத்தில் கட்டாயம் மனைவியின் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை.
பஸீனா காதி மேன்முறையீட்டு மன்றுக்கு சென்று முறையிட்டதாக வழங்கிய வாக்குமூலம் பிழையானதாகும். அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவிலே முறையிட்டுள்ளார். அதனையடுத்தே நுவரெலியா காதிநீதிவான் விஷேட காதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிள்ளை தாபரிப்பு வழக்கு பதுளை காதிநீதிமன்றில் CM336 எனும் இலக்கத்தின் கீழ் 2018இல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கே பின்பு நுவரெலியா காதிநீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
பிள்ளை தாபரிப்பு வழக்கு பதுளை காதிநீதிமன்றிலிருந்து நுவரெலியா காதிநீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்த வேளையில் காதிநீதிபதிகள் போரத்தின் குழுவொன்று நுவரெலியா காதிநீதிமன்றுக்கு விஜயம் செய்தது. அந்தக்குழுவில் நானும் அடங்கியிருந்தேன். இவ்விஜயம் 2020 செப்டெம்பரில் இடம்பெற்றது.
அப்போது பஸீனாவும், அவளது முன்னாள் கணவரும், பஸீனாவின் தந்தையும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அவர்களது பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்டது. பிள்ளை தாபரிப்பு நிலுவை 60 ஆயிரம் ரூபா நுவரெலியா காதி நீதிமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
பஸீனாவின் முன்னாள் கணவர் தனது பிள்ளைக்கு தாபரிப்பு வழங்காதிருந்தால் நுவரெலியா காதி நீதிமன்றுக்கு சென்று மனு கொடுத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் அறிவின்மையும் ஒரு சிலரால் பஸீனா தவறாக நெறிப்படுத்தப்படுகின்றமையுமே இவ்வாறான வாக்குமூலம் வழங்குவதற்கு காரணமாய் அமைந்துள்ளன.
தற்போது பதுளை காதி நீதிமன்றத்தின் பதில் காதிநீதிவானாக நானே கடமையாற்றுகிறேன். குறிப்பிட்ட பெண் என்னைச் சந்தித்து தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும். தவறான வழி நடத்தல்களினால் காதிநீதிமன்ற கட்டமைப்பையே விமர்சிப்பது தவறாகும்.
பதுளை காதிநீதிமன்றம் மூடப்பட்டுள்ளது என பஸீனா வாக்கு மூலமளித்துள்ளமை தவறாகும். பதுளை காதிநீதி மன்றம் மூடப்படவில்லை. இரத்தினபுரி காதிநீதிவானான நான் தற்போது பதுளையின் பதில் காதிநீதிபதியாகக் கடமையாற்றுகிறேன்.
குறிப்பிட்ட பெண் தனது பிள்ளைக்கான தாபரிப்பு நிலுவையாக இருப்பின் நுவரெலியா காதிநீதிமன்றத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல் விடிவெள்ளி பத்திரிகை 2022-01-13