பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆன்மீக பாதுகாப்புப் பெறும் நோக்கில் இந்தியாவிலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா தேவஸ்தானத்துக்குச் சென்ற விடயம் ஊடகங்களில் வெளிவந்தது.
திருப்பதி தேவஸ்தானம் இலங்கையின் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளிடையே மிகவும் ஜனரஞ்சகமான ஓர் இடம். குறிப்பாக தீர்க்கமான தேர்தல்களை எதிர்கொள்ளும் வேளைகளில் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் வரிசையாகத் திருப்பதியை நாடுவது மிகவும் சாதாரணமான ஒரு விடயம்.
திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள இந்தியாவின் அனந்தபூர் மாவட்டம் மிகவும் வரட்சியான ஒரு பிரதேசமாகும். அங்கு வெள்ளப் பெருக்கு என்பது கேள்விப்பட்டுக் கூட இல்லாத ஓர் விடயம். ஆயினும் கடந்த நவம்பர் மாதத்தில் மாபெரும் வெள்ளப்பெருக்கில் அந்த மாவட்டமே மூழ்கிவிட்டிருந்தது. திருமாலா மலைத் தொடரில் பெய்த கடும் மழை காரணமாக திருப்பதி நகரமும் தேவஸ்தானமும் கூட நீரில் முழ்கடிக்கப்பட்டது. 12-–14 மில்லி மீட்டர் மழையின் காரணமாக திருப்பதி நகரம் வெள்ளத்தில் மூழ்க சில மணி நேரங்களே போதுமாக இருந்ததாக இந்தியாவின் NDTV செய்தி வெளியிட்டது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக 44 பேர் உயிரிழந்ததாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
திருப்பதி தேவஸ்தானத்தில் குடிகொண்டுள்ள கடவுள் யார் என்பது தெரியவில்லை. அது யாராக இருந்தாலும் இத்தகைய பெரும் அனர்த்தம் வருவது பற்றி ஒரு எதிர்வு கூறலையாவது முன்வைக்க அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதும் திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கூட கடவுளின் பாதுகாப்புக் கிடைக்கவில்லை என்பதும் தெளிவு.
மிகவும் அரிதாகவே மழை பெய்யும் பிரதேசங்களில் இவ்வாறு மழையும் பெருவெள்ளமும் ஏற்படுவது அண்மைய ஆண்டுகளில் ஒரு பூகோள நிகழ்வாகவே காணப்படுகின்றது. மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் வானிலை மாற்றம் (Climate change) இதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
மனிதர்களின் அழிவு ரீதியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடவுளும் திக்குமுக்காடிப் போவதையே திருப்பதி நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது. மகிந்த ராஜபக்ச திருப்பதியில் தனக்கு மட்டுமன்றி இந்த நாட்டுக்கே பாதுகாப்பை தருமாறு கடவுளிடம் கேட்டிருப்பார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல், சமூக அனர்த்தத்தை சமாளிக்க முடியாது போனால் நாடு மட்டுமன்றி தமது குடும்பத்தின் அரசியல் எதிர்காலமும் இருளடைந்து விடும் என்பதை அனுபவசாலியான மகிந்த நன்கு அறிவார்.
ஆனால் ராஜபக்சாக்கள் ஏற்படுத்திய செயற்பாடுகள் காரணமாக நாளுக்கு நாள் விருத்தியடையும் தேசிய அனர்த்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அந்தக் கடவுளினால் கூட முடியாது போய்விடும்.
Fitch Rating நிறுவனம் இலங்கையின் கடன் தரப்படுத்தலை CCC இல் இருந்து CC யாக தரமிறக்கியுள்ளது. வங்குரோத்து நிலையை அடைய எஞ்சியிருப்பது இன்னும் ஒரேயொரு தரமிறக்கமேயாகும்.
மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், இந்தத் தர இறக்கத்தைப் பற்றிய தனது கருத்தாக Fitch Rating நிறுவனத்தைக் குறை கூறியுள்ளார். இலங்கை குறித்து எவ்வித நேர்கணியமான தன்மையும் அந்த நிறுவனத்துக்கு தென்படவில்லை என்று கூறி அவர் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிடுகின்ற அபிவிருத்தியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது Fitch நிறுவனம் மட்டுமல்ல. பசளைச் சீரழிவு, விலைவாசியுயர்வு, பொருட் தட்டுப்பாடு, சமையல் எரிவாயுக் கசிவுகள் என்று பாரிய வாழ்க்கைப் பிரச்சினையை எதிர் கொள்ளும் இந்நாட்டு மக்களும் எவ்வித அபிவிருத்தியையும் காணவில்லை.
ராஜபக்சாக்களுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் மட்டுமே தென்படும் நாட்டின் அபிவிருத்தி தேவதைக் கதைகளில் வரும் (Emperor’s cloak) அரசின் புதிய ஆடை வகையைச் சேர்ந்த அபிவிருத்தியாகத் தான் இருக்க முடியும். அரசன் ராஜபவனியின் போது அணிவதற்கு ஒரு சிறப்பான ஆடை தேவைப்பட்டது. இதனைச் செய்து தருவதற்கு ஒரு தையல்காரர் ஏற்றுக்கொண்டார். உரிய காலத்தில் ஆடையைத் தயார் செய்யாத தந்திரகார தையற்காரன் ஒரு உத்தியைக் கையாண்டான். எந்த ஆடையையும் தயார் செய்யாமலேயே அரசரை பவனியில் இறக்கி இந்த சிறப்பான ஆடை புத்திசாலிகளான கெட்டிக்காரர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினான். ராஜ பவனியில் செல்லும் அரசன் நிர்வாணமாகச் செல்வது எல்லோருக்கும் தெரிந்தும் ஒருவரும் அதனைச் சொல்லவில்லை. தாங்கள் புத்திசாலியான கெட்டிக்காரர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. மாறாக அவர்கள் ஆடையை பல வகையிலும் வர்ணிக்கத் தொடங்கினர். அரசன் ஆடை அணியாத நிலையில் வீதிவலத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதனைக் கண்ட ஒரு சிறுவன் ஒரு மாமா நிர்வாணமாகப் போகிறார் என்று தம் பெற்றோரிடம் சத்தமிட்டுக் கூறினான். தன் தவறை உணர்ந்த அரசன் நடந்த விடயத்தைப் புரிந்து கொண்டார் என்பதே கதை.
ஆனால் யார் தவறைச் சுட்டிக் காட்டினாலும் ராஜபக்சாக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களை எச்சரிப்பது, பயமுறுத்துவது, பதவிகளில் இருந்து விலக்குவது, பயங்காட்டுவது தான் ராஜபக்சாக்களின் அணுகுமுறை. 2021 ஐ விட 2022 மோசமானதாக இருக்கும் என்று கூறுவதற்கு கடவுளின் விஷேட வரம் ஏதும் பெற்றிருக்கத் தேவையில்லை என்பது யாருக்கு தான் தெரியாது.
பரிகாரம் தேடுவதற்கு பிரச்சினையின் மூலத்தை அறிய வேண்டும்
புத்த பெருமானின் போதனையின்படியும் துக்கத்தைப் போக்கும் வழியை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் துக்கத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் அணுகுமுறையும் அதுவே. ராஜபக்சாக்களிடம் இத்தகைய ஒன்றை எதிர்பார்க்க முடியாது. மாற்று வழி தாங்கள் தான் என்று கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளிலாவது இது நடைபெற வேண்டும். அப்படியில்லாத போது ராஜபக்சாக்களிடம் இருந்து மீண்டாலும் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமற் போகும்.
Fitch Rating நிறுவனத்தின் கடன் தரப்படுத்தல் தொடர்பில் இலங்கையின் நிலையான இடத்திலிருந்து தரமிறக்கும் பணி 2019 டிசம்பர் 18 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது கோட்டபாய மகிந்த ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்திலாகும், இதற்கான காரணம் ராஜபக்ச அரசின் வரிக் கொள்கையாகும். இலங்கையைத் தரமிறக்கிய Fitch Rating நிறுவனத்தின் அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரிக் குறைப்பு காரணமாக அரச வருமானம் குறைவடைவதற்கான வாய்ப்பும் அதனால் ஏற்படும் ஏனைய பொருளாதார விளைவுகளும் இந்த தர இறக்கத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை இழக்கும் என்ற விடயமும் எதிர்வு கூறப்பட்டது.
Fitch Rating நிறுவனத்தின் எதிர்வு கூறல் சரியானது என்பதைக் காட்டும் தரவுகளை Public Finance.lk என்ற இணையத் தளம் வெளியிட்டது. 2019-–2020 இற்கிடையில் பதிவு செய்யப்பட்டிருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 33.5% இனால் குறைந்தது. அதாவது 1/3 பங்கினால் விழ்ச்சியடைந்தது. 2019 இல் 1,705,223 ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2020 இல் 1,133,445 ஆகக் குறைவடைந்தது. இதற்கான காரணம் ராஜபக்ச அரசின் வரிக்கொள்கையின் நான்கு பிரதான மாற்றங்களாகும்.
அதில் ஒன்று உழைக்கும் போதே வரி செலுத்தும் (PAYE) முறையை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக தனிப்பட்டவர்களுக்கான ஒரு வருமான வரி (APIT) முறையை 2020 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அறிமுகம் செய்தார்கள். PAYE வரி ஒரு கட்டாய வரியாயினும் ஏப்ரல் 1 இல் அறிமுகம் செய்த தனியாள் வருமான வரி ஒரு கட்டாய வரியல்ல. இந்த மாற்றம் காரணமாக பதிவு செய்யப்பட்ட வரி இறுப்பாளர்களில் 42.2% வீழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாவது காரணம் தனியார் வரி செலுத்தும் வருமான எல்லை 500,000 ரூபாவிலிருந்து மூன்று மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையாகும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையானவர்கள் வரிவிலக்குப் பெற்றனர்.
மூன்றாவது காரணம் VAT வரிக்கான இழிவு எல்லை வருடாந்த வருமானம் 12 மில்லியனில் இருந்து 300 மில்லியனாக உயர்த்தப்பட்டதாகும். இதனால் 71% பேர் வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2019 இல் 28914 நிறுவனங்கள் VAT வரி செலுத்தினாலும் 2020 இல் அது 8152 ஆகக் குறைந்தது.
நான்காவது காரணம் தகவல் தொழில்நுட்ப மற்றும் அத்துறைக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் வரியில் இருந்து விடுவிக்கப்பட்டமையாகும்.
வரிவிதிக்கும் எல்லை உயர்த்தப்பட்டமையினால் அரச வருமானம் வெகுவாகக் குறைந்தது. அதற்குச் சார்பளவில் செலவுகளில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லையாதலால் அந்த இடைவெளியை ஈடு செய்ய பெரும் எண்ணிக்கையில் பணத்தை அச்சிட ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அளவுக்கு மீறிய பண அச்சிடலால் ரூபாவின் பெறுமானம் அமெரிக்க டொலருக்குச் சார்பளவில் குறைவடையத் தொடங்கியது. இதனை செயற்கையாக நிறுத்தி வைப்பதற்காக எவ்விதத்திலும் யதார்த்தமற்ற முறையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை பெறுமதியை 200 ரூபாவாக மட்டுப்படுத்தினர். இதன் மூலம் நாட்டில் சென்மதி நிலுவைப் பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது.
இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணி கிடைத்த பிரதான வழி வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தொகையாகும். அரசாங்கத்தின் யதார்த்தமற்ற செலாவணி வீதக் கட்டுப்பாட்டின் விளைவாக வங்கி மூலமாக பணம் அனுப்புவதைத் தவிர்த்து வேறு வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணி கடந்த 12 வருடங்களில் கிடைத்தவற்றில் அதி குறைந்த தொகையாகும். உத்தியோகபூர்வமற்ற முறைகளில் இலங்கைக்குப் பணம் அனுப்புவதை அரசாங்கம் தடைசெய்த போதிலும் அதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மை ஏதும் கிடைக்க வில்லை என்பதையே நவம்பர் மாத புள்ளி விபரம் காட்டுகின்றது. இந்த நிலை தொடரும் என்பதை அனுமானிப்பது சிரமமாக இல்லை.
ஏற்றுமதியாளர்கள் கூட தம் ஏற்றுமதி வருமானத்தை இலங்கைக்கு அனுப்பாது பல உத்திகளைக் கையாள்வதாக பெரிய வர்த்தகர்கள் டிசம்பர் ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.
இன்று ஒரு அனர்த்தமாக தலையெடுத்துள்ள பசளைப் பிரச்சினை கூட உள்நாட்டு இறைவரி மற்றும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் ஒரு பெறுபேறாகும். சேதனப் பசளைக்கு மாறும் செயலொழுங்கை படிப்படியாக மேற்கொள்வதற்குப் பதிலாக எவ்வித திட்டமிடலோ முன்னாயத்தமோ இன்றி இரசாயனப் பசளை இறக்குமதியைத் தடை செய்தமைக்குக் காரணம் உள்நாட்டு வெளிநாட்டு பணச்செலவைக் குறைத்துக் கொள்ளும் நோக்கிலா என்ற கேள்வி எழுகின்றது. இரசாயனப் பசளை இறக்குமதியைத் தடை செய்வதன் மூலம் அதற்காகச் செலவாகும் பெரும்தொகையான வெளிநாட்டுச் செலாவணியையும் உள்நாட்டின் பசளைக்காக வழங்கும் மானியத் தொகையையும் மிச்சம் பிடிக்கலாம் என்று யாராவது ஒரு கையாலாகாதவன் அரசுக்கு ஆலோசனை கூறி இருக்கலாம்.
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சீனச் சேதனப் பசளைக் கப்பல் விவகாரம் ராஜபக்சாக்களின் முட்டாள் தனத்தின் வெளிப்பாடேயாகும். அத்தியவசியமாயுள்ள பெற்றோல் மற்றும் மருந்து வகைகளை இறக்குமதி செய்யவேனும் டொலர் இல்லாத நிலையில் உலகம் பூராகவும் கையேந்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் எதிர்பார்த்தாலும் பசளைக் கப்பல் விவகார இழுபறி முடியும் வரை அது கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. சீனக் கம்பனிக்கு 6.7 மில்லியன் டொலர் வழங்க அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கக் காரணமும் இந்தக் கடனை அவசரப்படுத்துவது தானா? என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது கம்பனியின் நன்மதிப்புக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி சிங்கப்பூர் சமரசப்படுத்தும் நிறுவனமொன்றிடம் நீதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
கொவிட்19 நாட்டின் பிரச்சினைகளை தீவிரப்படுத்தியது என்பது உண்மையே. ஆயினும் பிரச்சினையின் தொடக்கம் ராஜபக்சாக்களின் முட்டாள்தனமான வரிக் கொள்கையே. அதற்கு வகை கூற வேண்டியவர்கள் அதிகாரிகளல்லர் மாறாக ராஜபக்சாக்களின் மூவேந்தர் கூட்டணியாகும். உண்மையான பொருளியற் கொலையாளிகள் அவர்களே. அரச வருமானக் குறைவு ஒரு நிதி அனர்த்தமாக மாறுவதைத் தடுக்க வேண்டுமானால் செலவைக் குறைக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அதற்கான காரணம் கொவிட் – 19 அல்ல. கொவிட் பரவலின் பின்னரும் கூட சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கிய பணத்தில் குறைப்புச் செய்ய ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்தது. செலவைக் குறைக்க முடியாமைக்கு காரணம் தமது பெயரைப் பறைசாற்றும் கண்காட்சிக் கட்டுமான செயற்திட்டங்களும் அதீத பாதுகாப்புச் செலவுமாகும்.
தமிழீழ யுத்தத்தை வெற்றிகொண்ட பின்னர் சமாதானத்தின் பொருளாதார நன்மைகள் மக்களுக்குக் கிடைக்காமற் போனதற்கான காரணம் இராணுவச் செலவுகளைக் குறைக்காமையே. யுத்தமெதுவும் இல்லாத நிலையிலும் வருடாந்தம் பாதுகாப்புச் செலவு அதிகரித்தே வருகின்றது.
இன்னும் அது தான் நடக்கிறது. பாரிய நிதிப்பற்றாக் குறைக்கு மத்தியிலும் கூட 2021-–2022 வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவு மட்டும் 14% ஆல் உயர்த்தப்பட்டுள்ளது. இது அரச மொத்த வருமானத்தின் 15% ஆகும்
Jane சஞ்சிகை விபரிப்பதற்கிணங்க 2021 இற்குச் சார்பளவில் பாதுகாப்புக்கான மீண்டெழும் செலவுகள் 20.5% இனாலும் மூலதனச் செலவு 25% இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு வங்குரோத்தின் விளிம்பில் இருக்கும் சூழ்நிலையில் நாட்டில் சமாதானம் நிலவும் காலத்தில் இந்த அளவுக்கு பாதுகாப்புச் செலவுகளை ஏன் அதிகரிக்கின்றனர்?
வருமான வழிகளை முடக்கி செலவுகளை அதிகரிக்கும் ராஜபக்சாக்களின் கொள்கை காரணமாக இப்போது இலங்கை பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல் ஆகியுள்ளது. இதிலிருந்து இலங்கையை மீட்க வேண்டுமானால் ராஜபக்ச வரிக்கொள்கையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். யுத்தமற்ற நிலைக்குப் பொருந்தும் வகையில் பாதுகாப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
ராஜபக்ச வரிக்கொள்கையை மீண்டும் மாற்றியமைப்பதற்கு முடியுமான அனைத்துப் பிரிவினர்களிடமிருந்தும் (குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு கப்பம் வழங்கும் வியாபாரிகளிடம்) எதிர்ப்புகள் எழும். பாதுகாப்புச் செலவுகளைக் குறைத்தால் அதன் மூலம் தேசப்பற்றால் ஜீவனோபாயத்தை நடத்தும் பிக்குகள் மற்றும் சிவில் சமூகத்தின் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிவரும். பாதுகாப்புச் செலவுகளில் இருந்து இலாபம் பெறும் வியாபாரிகளின் எதிர்ப்பும் நிச்சயம் கிளம்பும். வரிக்கொள்கையை மாற்றுவது அபிவிருத்திக்கு எதிரானது என்றும் பாதுகாப்புச் செலவுகளைக் குறைப்பது தேசத்துரோகம் என்றும் வாதாடுவர். இத்தகைய செல்வாக்குகளில் இருந்து மீள எதிர்க்கட்சிகளால் முடியுமா?
குரங்கின் கையில் அணு ஆயுதம் வழங்கும் எமது ஜனாதிபதி முறை
2019 இல் ராஜபக்சாக்கள் அடைந்த மாபெரும் தேர்தல் வெற்றிக்கான காரணம் எமது நாட்டின் ஜனநாயகத்திலுள்ள வினைத்திறனற்ற தன்மையாகும். நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு சர்வாதிகாரி தேவை என்ற மூட நம்பிக்கை சமூகமயப்படுத்தப்பட்டமையாகும். ஹிட்லராக மாறியேனும் நாட்டைக் கட்டியெழுப்புமாறு அஸ்கிரிய பீடத்தின் துணைப்பீடாதிபதி வெண்டேருவே உபாவி தேரர் ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கை இந்த ஆழமான மூடநம்பிக்கைகளின் ஓர் அடையாளமாகும்.
இன்று சகல அதிகாரங்களும் ராஜபக்சாக்களிடம் உள்ளது. ஆனால் அரச இயந்திரம் இந்த அளவுக்கு சீரழிந்த வேறொரு காலத்தை நாம் வரலாற்றில் காண முடியாது. இதற்கான சிறந்த உதாரணம் எரிவாயுக் கசிவாகும். ஜனாதிபதி காரியாலயம் ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில் லிற்றோ நிறுவனத் தலைவர் பேசும்போது, எரிவாயுவில் எவ்வித கலவை மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் இது கலவை மாற்றத்தில் ஏற்பட்ட கசிவு அல்ல என்றும் மக்கள் தேவையில்லாமல் பயப்படுகின்றனர் என்றும் கூறினார்.
எரிவாயுக் கசிவு பற்றி ஆராய ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கையில் கசிவுக்கான முக்கிய காரணம் கலவையில் மேற்கொண்ட விகிதாசார மாற்றம் என்று குறிப்பிடப்பட்டது. மக்கள் எதனை ஏற்றுக்கொள்வது? ஜனாதிபதி நியமித்த லிற்றோ நிறுவனத் தலைவரின் கூற்றையா? ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கையையா? இவற்றில் இரண்டும் உண்மையாய் இருக்க முடியாது. ஒன்று பொய், அந்தப் பொய்யை சொன்னது யார்?
லிற்றோ தலைவர் முன்னர் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியவர். அப்போது அவரின் ட்விட்டர் செய்தியில் தனக்கு ஹிட்லரின் இனவாத meiu kampt (எனது போராட்டம்) என்ற புத்தகத்தை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அவர் ஹிட்லரின் தேசபிமானத்தை பாராட்டினார். ஹிட்லரின் 12 வருட கால ஆட்சி ஜர்மனியின் அழிவுடன் தான் முடிவடைந்தது. ஹிட்லர் பதவிக்கு வரும் போது தனி நாடாக இருந்த ஜேர்மனி இரண்டு பட்டதற்குக் காரணம் ஹிட்லரின் நடவடிக்கைகள் தான். ஹிட்லர் பதவிக்கு வரும் போது சுதந்திர நாடாக இருந்த ஜேர்மனி வெளிநாட்டு இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்ததும் ஹிட்லரின் செயற்பாட்டில் தான்.
சர்வாதிகாரத்தின் இயல்பு இது தான். ஒரு தனியாளுக்கு அல்லது குடும்பத்துக்கு அதிகாரத்தை வழங்குவதன் விளைவு இதுவாகத்தான் இருக்கும்.
சர்வதிகாரத்தினால் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஆனால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விட்டது என்ற பொய் சமூகமயமாக்கப்படுகிறது. ராஜபக்சாக்களும் அவர்களது அடிவருடிகளும் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் கூறுகின்றனர். ஏதும் பிரச்சினை இருந்தால் அது கொவிட் -19 இனால் அல்லது எதிர்க்கட்சியினால் அல்லது சிறிசேன,- விக்ரமசிங்க ஆட்சியின் விளைவாக வந்தது என்றும் அவர்கள் சாதிப்பார்கள்.
அதிகாரம் குவிக்கப்படுவதன் மூலம் மடையனின் மடத்தனமும் திறமையற்றவர்களின் இயலாமையும் ஊழல்வாதிகளின் குரூரமும் வன்முறையாளர்களின் கொடுமையும் விருத்தியடைகின்றன. இன்றைய எமது ஜனாதிபதி ஆட்சி முறை இந்த நாட்டுக்கு ஓர் அனர்த்தமாக மாறியதும் எதிர்காலத்தில் மேலும் பாரிய அனர்த்தமாக மாறுவதும் அதனாலாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர்களையும் விமர்சிப்பது அரசாங்க, எதிர்க்கட்சி இருபாலார் தொடர்பிலும் வழக்கமாகவுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அதீத அதிகாரம் வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு எதிர்காலத்தில் வருவதும் இந்த 225 இல் ஒருவாராகத் தான் இருக்கும்.
அரசியல் அதிகாரம் என்பது பொதுவாழ்வின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அதிகாரமாகும். இன்றைய ஜனாதிபதி முறை மூலம் இந்த பாரிய அதிகாரத்தின் பெரும்பகுதி தனியொருவருக்குக் கிடைக்கிறது. அது ஜனநாயகத்தை விட மன்னராட்சிக்கே நெருக்கமாகவுள்ளது.
இந்நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தோர் தங்களை அரசர் அல்லது அரசியாகவே கருதினர். அவர்களது அடிவருடிகளும் மன்னர் வகிபாகத்தை அவர்களுக்கு வழங்கி வழிபட்டனர்.
ராஜபக்சாக்கள் இந்த இராஜ வேசத்தை அதன் எல்லைக்கே எடுத்துச் சென்றுவிட்டனர். ஆயினும் ‘இராஜ பித்து’ அவர்களுடன் மட்டுப்பட்டதல்ல. ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த, அமரும் அனைவருக்கும் கூடிக் குறைந்த அளவுகளில் இது பொதுவானதாகும்.
இன்றைய நெருக்கடி நிலைக்கு ஒரே தீர்வு தன்னை ஜனாதிபதியாக்குவது ஒன்று தான் என்று கூறுபவர்களிடம் இருந்து வெளிப்படுவதும் இந்தப் பித்தலாட்டமே.
ராஜபக்சாக்களுக்கு அதிகாரத்தைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு மாற்றுவழி பற்றி யோசிப்பது மடமையாகும். இன்னொருவருக்குக் கொடுத்தாலும் அப்படித்தான். ஜனாதிபதி முறைபற்றி மீள் சிந்தனை செய்ய வேண்டியிருப்பதும் அதனால் தான்.
விடிவெள்ளி பத்திரிகை 2022-01-09
மூலம் : திஸரணி குணசேகர
தமிழில் : எம்.எச்.எம். ஹஸன்