முஸ்லிம்களின் மீட்பாளர்கள் யார்?

நாட்டின்‌ பொருளாதார நிலை நாளுக்கு நாள்‌ மிகவும்‌ மோசமடைந்து கொண்டு செல்‌கின்றது. பொருட்களின்‌ விலையும்‌ அதிகரித்துக்‌ கொண்டிருக்கின்றது. இதனால்‌, பொது மக்கள்‌ பெரும்‌ அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்‌.

இத்தகையதொரு சூழலில்‌ அரசாங்கமும்‌, அமைச்சர்களும்‌, பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராது நாட்டு மக்களின்‌ மீது அக்கறை கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுப்‌பதற்கு முன்வருதல்‌ வேண்டும்‌. ஆனால்‌, ஆளுங்கட்சியினரும்‌, எதிர்க்கட்சியினரும்‌ மக்களின்‌ இந்த அவலத்தை கவனத்திற்‌ கொள்ளாது தமது கட்சி அரசியலை மேற்‌கொள்வதிலேயே கவனம்‌ செலுத்திக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

ஆளுங்கட்சியினரின்‌ முக்கிய அமைச்‌சர்கள்‌ அரசாங்கத்தின்‌ நடவடிக்கைகளை சரியென்று நிலைநிறுத்துவதற்குரிய முயற்சிகளையே எடுத்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. எதிர்க்கட்சியினர்‌ நாட்டில்‌ ஏற்பட்டுள்ள தற்‌போதையே நெருக்கடியான சூழலை பயன்படுத்தி தம்மை மக்களிடம்‌ நிலை நிறுத்திக்‌ கொள்வதற்குரிய பிரசாரங்களை மேற்‌கொண்டுள்ளனர்‌.

அரசியல்‌ கட்சிகளின்‌ இத்தகைய நடவடிக்‌கைகள்‌ மக்கள்‌ எதிர்கொண்டுள்ள பொருளாதாரப்‌ பிரச்சினைக்கு தீர்வுகளைக்‌ கொடுக்‌கப்போவதில்லை. மக்களுக்கு இன்னும்‌ கஷ்‌டத்தையே ஏற்படுத்தும்‌ என்ற யதார்த்தத்தை உணர்ந்து ஆளுந்தரப்பினரும்‌. எதிர்க்கட்சியினரும்‌ செயற்பட வேண்டும்‌.

இவ்வாறு நாட்டில்‌ மக்கள்‌ விலைவாசியேற்றம்‌, பொருட்களுக்கான தட்டுப்பாடுகளினால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்‌கின்ற சூழலைப்பற்றி முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ எந்தக்‌ கவலையும்‌ இன்றி உள்ளார்கள்‌.மக்களின்‌ நல்வாழ்வுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்‌தாது ஊடகங்களில்‌ தோன்றி விவாதித்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. இன்னும்‌ விவாதிப்‌பதற்கு அழைத்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக பல பிரச்சினைகள்‌ உள்ளன. முஸ்லிம்களின்‌ காணிகள்‌ பறிபோயுள்ளன. அவற்றுக்கு இதுவரை எந்தத்‌ தீர்வும்‌ கிடைக்கவில்லை. காலத்திற்கு காலம்‌ எல்லா ஆட்சியிலும்‌ முஸ்லிம்‌ கட்சிகளினதும்‌, ஏனைய கட்சிகளில்‌ உள்ள முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

ஆனால்‌, அதனால்‌ முஸ்லிம்களின்‌ அடிப்‌படை உரிமைகளுக்கு தீர்வுகளைப்‌ பெற்றுக்‌ கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களின்‌ பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காத அரசாங்கங்களை பாராட்டிக்‌ கொண்டிருக்‌கின்றார்கள்‌.

நாட்டில்‌ முஸ்லிம்கள்‌ எதிர்கொண்டுள்ள அரசியல்‌ பிரச்சினைகளுக்கு,அதிகாரப்‌ பகிர்வின்‌ போது முஸ்லிம்களுக்கு எத்தகைய அதிகாரங்கள்‌ கிடைக்க வேண்டும்‌. தீர்வுகள்‌ எவ்வாறு அமைய வேண்டுமென்று அரசாங்‌கத்தை கோருவதில்லை. மாறாக தமிழர்‌ தரப்‌பினரின்‌ கோரிக்கைகளுக்கு எதிராக தமது கருத்துக்களை முன்‌ வைத்துக்‌ கொண்டிருக்‌கின்றார்கள்‌.

கருத்துக்களை முன்‌ வைத்துக்‌ கொண்டிருக்‌கின்றார்கள்‌. மட்டக்களப்பு மாவட்டத்தில்‌ பல இடங்களில்‌ முஸ்லிம்களுக்கு காணிப்‌ பிரச்சினைகள்‌ உள்ளன. எல்லைப்‌ பிரச்சினைகளும்‌ உள்ளன. அவற்றுக்குரிய தீர்வுகளை அடைவதற்குரிய நடவடிக்‌கைகளை அரசாங்‌கத்திடம்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. வெறுமனே பிரச்சினைகளை ஊடகங்களில்‌ பேசிக்‌ கொகொண்டிருப்பதனால்‌ எந்தப்‌ பயனும்‌ கிடைக்‌காது.

40 வருடங்களாக பேரினவாத தேசிய கட்சிகளுடன்‌ முஸ்‌லிம்கள்‌ தங்களின்‌ அரசியலை மேற்கொண்ட போது முஸ்லிம்களின்‌ காணி தொடர்புடைய உரிமைகள்‌ பாதுகாக்கப்படாது போனாலும்‌, முஸ்லிம்‌ பிரதேசங்கள்‌ அபிவிருத்தி அடைந்‌தன. அதுமட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும்‌ இருந்தது. நாட்டின்‌ எல்லாப்‌ பிரதேசங்களிலும்‌ முஸ்லிம்கள்‌ நிம்மதியாக இருந்தார்கள்‌.

ஆனால்‌, முஸ்லிம்களுக்கு தனியான அரசியல்‌ கட்சி வேண்டுமென்று தனித்‌துவக்‌ கட்சி அமைக்கப்பட்டதன்‌ பின்னரான சுமார்‌ 30வருட அரசியலில்‌ முஸ்லிம்களின்‌ பல அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்‌தல்கள்‌ ஏற்பட்டுக்‌ கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள்‌ பாதுகாப்பற்ற சூழலில்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்‌.

பல்வேறு குற்றச்சாட்டின்‌ பேரில்‌ முஸ்‌லிம்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளார்கள்‌. அவர்கள்‌ தொடர்பில்‌ விரைவான விசாரணகைள்‌ நடைபெற்று அதற்குரிய தீர்வுகளை காண்பதற்கு முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்களோ, தலைவர்களோ முயற்சிகளை பெரிதாக எடுக்கவில்லை.

தேர்தல்‌ காலங்களில்‌ மக்களின்‌ உணர்‌வுகளை தூண்டி வாக்கு பெற்றுக்கொண்டு விட்டு எதனையும்‌ கண்டு கொள்ளாது முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ உள்‌ளார்கள்‌.தங்களின்‌ சுயஅரசியல்‌ தேவைக்காக முஸ்லிம்களை கட்சி ரீதியாகவும்‌, பிரதேச ரீதியாகவும்‌ பிரித்து வைத்துள்ளார்கள்‌. முஸ்‌லிம்களும்‌ இவர்களை சமூகத்தின்‌ மீட்பர்கள்‌ என்று நினைத்துக்‌ கொண்டு அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்‌றார்கள்‌.

தற்போது முஸ்லிம்‌ கட்சிகளை எடுத்துக்‌ கொண்டால்‌ அங்கு ஒற்றுமையில்லை. வேற்‌றுமைகளும்‌. முரண்பாடுகளுமே நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லிம்‌ கட்சிகளின்‌ உயர்பீடக்‌ கூட்டங்கள்‌ கூட வெறும்‌ ஒன்று கூடல்களாக நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு ஆளுக்கு ஆள்‌ சண்டையிட்டுக்‌ கொள்கின்றார்களே அல்லாமல்‌ சமூகத்தைப்‌ பற்றி சிந்திப்பதில்லை. சமூகத்தின்‌ பிரச்சினைகள்‌ பற்றி அங்கு பேசப்படுவதில்லை. தலைமைத்துவக்‌ கட்டுப்பாடுகளும்‌, கூட்டுப்‌ பொறுப்புக்களும்‌ முற்றாக இல்லாதுள்ளன.

இவ்வாறு உள்ள முஸ்லிம்‌ கட்சிகளினாலும்‌, முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களினாலும்‌ முஸ்லிம்களின்‌ எதிர்காலம்‌ சுபீட்சமாக அமையுமென்று எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள்‌ கடந்த நான்கு பாராளுமன்றத்‌ தேர்தல்களிலும்‌ குறித்த சிலரையே தொடர்ந்தும்‌ பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்‌.

இவர்கள்‌ பாராளுமன்றத்தில்‌ கூட முஸ்‌லிம்களின்‌ பிரச்சினைகளைப்‌ பற்றி பேசுவது மிகவும்‌ அரிதாகும்‌. யாரும்‌ முஸ்லிம்களின்‌ பிரச்சினைகளை ஏதோவொரு காரணத்‌திற்காக பேசினாலும்‌ அதற்கு ஆயிரம்‌ கதைகளை சொல்லும்‌ நிலையிலேயே முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளார்கள்‌.

தலைமைத்துவத்திற்கு கட்டுப்பாடாது செயற்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ இவர்கள்‌, தங்களின்‌ தலைவர்கள்‌ சிறந்தவர்கள்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. இவ்வாறு பலவகையிலும்‌ முரண்பாடுகளைக்‌ கொண்டவர்கள்‌ சமூகத்திற்காக நேர்‌மையாக செயற்படுவார்கள்‌ என்று நம்புவதற்‌கில்லை.

இவர்கள்‌ சமூக நடவடிக்கைகள்‌ குறித்து முஸ்லிம்‌ புத்திஜீவிகள்‌, முஸ்லிம்‌ சிவில்‌ அமைப்புக்களிடம்‌ எதுவும்‌ பேசுவதில்லை. சிவில்‌ அமைப்புக்களின்‌ கடமைகள்‌ ஒரு பாராளுமன்ற உறுப்பினரை விடவும்‌ கனதியாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, சிவில்‌ அமைப்புக்களோ பாராளுமன்ற உறுப்பினர்களின்‌ நிதி ஒதுக்கீட்டுக்காக சமூகத்தின்‌ எதிர்காலம்‌ சிதைந்து கொண்டிருப்பதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களும்‌, சிவில்‌ அமைப்புக்களும்‌, புத்திஜீவிகளும்‌ மெளனித்துள்ள ஒரு சமூகமாக முஸ்லிம்கள்‌ உள்ளார்கள்‌. இவர்களையே முஸ்லிம்கள்‌ தங்களின்‌ மீட்பர்கள்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. முஸ்லிம்களை தாங்கள்‌ நினைத்தவாறெல்லாம்‌ மேய்த்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

இப்போது முஸ்லிம்கள்‌ திசை தெரியாது விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கின்றார்கள்‌. ஆயினும்‌, அரசியல்வாதிகள்‌ ஏற்படுத்தியுள்ள பிரிவினைளில்‌ இருந்து முஸ்லிம்கள்‌ இன்னும்‌ மீளவில்லை என்பதே இங்குள்ள ஆபத்தாகும்‌.

M.S. தீன் (வீரகேசரி 9/1/22)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter