புரட்சிக்கான ஆரம்பம் தெரிகிறது – சுசில் பிரேமஜயந்த (விசேட பேட்டி)

கேள்வி: தெல்கந்த சந்தையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அநாவசியமானவையென இப்போது நினைக்கின்றீர்களா?

பதில்: நான் மக்களின் உண்மையான பிரச்சினைகளையும், அவர்கள்படும் கஷ்டங்களையுமே கூறினேன். நான் கூறியதில் எந்தவித பொய்களும் இல்லை என்பது சகலருக்கும் தெரியும். நாட்டில் விலைவாசியை பாருங்கள். நாட்டில் மரக்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காலநிலையோ, அனர்த்தமோ காரணம் அல்ல. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் எடுத்த தவறான தீர்மானமே காரணமாகும். சரியான திட்டமிடல் இல்லை. எத்தனை வர்த்தமானிகள் வெளியிடப்பட்டன. அதில் எத்தனை வர்த்தமானிகள் மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவை முறையான ஆட்சிக்கான அடையாளங்கள் அல்ல. உணவு தட்டுப்பாட்டிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே காரணம் என்று வெளிப்படையாகக் கூறினேன். அதில் எந்தத் தவறும் இல்லை. அதே நிலைப்பாட்டிலேயே இப்போதும் உள்ளேன்.

கேள்வி: நீங்கள் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு சதி முயற்சிகளை முன்னெடுத்தமையால் பதவி விலக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் உங்களை பதவி விலக்குவதற்கான உண்மையான காரணம் என்னவெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்ததன் காரணத்தினால்தான் என்னை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். சந்தைக்கு போனேனே தவிர அரசாங்கத்திற்காக வக்காளத்து வாங்குவதற்காக போகவில்லை.

அதேபோல் தற்போதைய ஆட்சியில் அமைச்சரவையில் உள்ள பலருக்கு தகுதி இல்லை. ஆகவே தகுதி இல்லாதவர்கள் மத்தியில் எம்மைப்போன்றவர் களை வைத்திருப்பதற்கு விரும்பமாட்டார்கள். நாம் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சரியான விடயங்களை பேசுவது ஒரு சிலருக்கு இடைஞ்சலாக இருக்கலாம். அதுவும் எனது பதவியைப் பறிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கேள்வி: அப்படியாயின் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்குள் கருத்து சுதந்திரம் இல்லையா?

பதில்: அரசாங்கத்துக்குள் சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியவில்லை என்பதைத் தானே என்விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கேள்வி : அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தில் உள்ளீர்களா?

பதில்: இல்லை, நான் மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். சிலரைப்போல தேசியப்பட்டியலில் உள்நுழைந்தவன் அல்ல. எனவே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவேன். ஆளும் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பாராளுமன்றத்தில் அவசியமான நேரங்களில் ஒத்துழைப்புகளை வழங்குவேன். தேவையான சூழ்நிலையில் எடுக்க வேண்டிய சரியான தீர்மானத்தையும் எடுப்பேன்.

கேள்வி : அவசியமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பேன் என்பதன் மூலம் எதனைக் கூற விளைகின்றீர்கள்?

பதில்: அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. தற்போது மாற்றத்தை நோக்கிய அரசியல் கலாசாரம் உருவாக்கிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம். இத்தனை ஆண்டுகால சம்பிரதாய அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் மாற்றுச் சிந்தனையில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

இன,மத,மொழி பிரசாரங்களை செய்து இனியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. அந்த சிந்தனைகளில் இருந்து மக்கள் விடுபட்டு வாழ்வாதாரம் குறித்து சிந்திப்பதற்கு ஆரம்பித்து விட்டனர். நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே புரட்சி ஒன்றுக்கான ஆரம்பம் தெளிவாகத் தென்படுகின்றது. எனவே கடந்த காலத் தவறுகளை நிவர்த்தி செய்யக்கூடிய கட்டாயம் எமக்கும் உள்ளது. எனவே அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாமும் ஒன்றிணைவோம்.

கேள்வி: அப்படியென்றால் உங்களின் பின்னால் அரசியல் சக்தியொன்று இயங்குகின்றது எனக் கொள்ள முடியுமா?

பதில்: அவ்வாறு அல்ல. ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும், இதுவரை காலமாக நாட்டின் அரசியலை தீர்மானித்தது விடுதலைப் புலிகளின் போராட்டமே. யுத்தத்தை வைத்தே அரசியல் செய்யும் நிலைமை இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் முதல் தடவையாக பிரிவினைவாதத்தை தாண்டி குடும்ப அரசியலை வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் நல்லாட்சியை உருவாக்கினர்.

தற்போது மக்கள் அந்த நிலைப் பாட்டையும் தாண்டி சென்றுள்ளனர். கூட்டணி அரசாங்கம் குறித்து இனியும் சிந்திக்க முடியாது. இந்தக் கூட்டணிகள் பேச்சு எல்லாம் அரசாங்கத்தை அமைக்கும் வரையில் தான். அதற்கு பின்னர் தனி அரசாங்கமே ஆட்சியை தீர்மானிக்கின்றது. ஆகவே இனியும் இந்தக் கலாசாரம் இருக்கக்கூடாது. ஆகவே இளம் தலைமுறையினரே இப்போது தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

கேள்வி: அண்மித்த காலத்தில் தேர்தலொன்றுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா?

பதில்: ஜனாதிபதியின் பதவி முடிவுக்கு வருவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ளன. ஜனாதிபதி நினைத்தால் இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அரசாங்கம் யோசனை ஒன்றினை கொண்டு வந்து சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் தேர்தலுக்கு செல்ல முடியும்.

ஆனால் இன்றுள்ள நிலையில் நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கிக் கொண்டுள்ளோம், ஊழல் மோசடிகள் இன்னமும் குறையவில்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது. ஆகவே இவற்றில் இருந்து தேசமாக நாம் மீள வேண்டும்.

அதற்கு நாட்டு மக்களுக்கு உண்மையைக்கூற வேண்டும். பொய்களை கூறி ஆட்சி செய்வதால் இறுதியாக மக்களே நெருக்கடிக்குள் தள்ளப்படுவர். அரசாங்கத்திடம் பணம் இல்லை. பணத்தை தொடர்ச்சியாக அச்சடித்து தீர்வு காண முடியாது. டொலர்கள் இல்லாமல் எம்மால் இறக்குமதிகளைச் செய்யவே முடியாது. இறக்குமதி இல்லாது எவ்வாறு எம்மால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாக நாடு நாசமாகிவிட்டது.

கேள்வி: அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கி வெளிச்சவால்களை சமாளிக்க நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் நாடகம் இது என்ற சந்தேகங்களும் உள்ளனவே?

பதில்: உங்களுக்கு அவ்வாறு தெரியலாம், ஆனால் உண்மை அதுவல்ல. அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்று கூறவில்லை, எதிர்க்கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்றும் எங்கேயும் கூறவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் பாரிய தவறுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யவில்லை என்றால் மாற்றமொன்றுக்கு செல்ல வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு.

கேள்வி: அவ்வாறான மாற்றத்தை செய்ய நீங்கள் எடுக்கவுள்ள அடுத்த நகர்வு என்ன?

பதில்: தனியாக எந்த வொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. இந்த சமூகமே சரியாகச் சிந்தித்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் ஒத்துழைப்புக்களை வழங்குவேன்.

கேள்வி: உங்களை பதவி நீக்கியது குறித்து பிரதமருடன் பேசினீர்களா?

பதில்: பேசவில்லை, ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய அவரால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியும். அதற்கு நாம் கட்டுப்பட வேண்டியுள்ளது. என்னை நீக்குவதால் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நினைத்தால் அதற்கு என்னால் பதில் கூற முடியாது. அதேபோல் இந்த விடயங்கள் குறித்து பிரதமருடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கம்தானே, ஆகவே பிரச்சினைகளை பேச்சு வார்த்தைகள் மூலமாக உங்களால் ஏன் தீர்க்க முடியாதுள்ளது?

பதில் : பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று நினைக்கும் நபர்களிடம் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது. நிதி நெருக்கடி நிலைமைகளில் எடுக்க வேண்டிய சரியான தீர்மானம் என்னவென்பது குறித்து அரசாங்கத்திற்குள் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை.

உரிய நபர்களை இணைத்துக்கொள்ளவில்லை. ஒரு சிலரின் பிடிவாதத்தினால் நாட்டிற்கான சரியான தீர்மானங்கள் எடுக்க முடியாதுள்ளது. தீர்மானம் எடுக்கும் நேரங்களில் எம்மிடம் ஆலோசனை கேட்பதும் இல்லை. அவ்வாறு இருக்கையில் எமது பிரச்சினைகளை பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென எவ்வாறு எதிர்பார்ப்பது…?

கேள்வி: புலனாய்வுத்துறையின் தகவலுக்கு அமையவே உங்களை பதவி நீக்கியதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளாரே?

பதில்: இது பாரதூரமான குற்றச்சாட்டு. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதைவிடுத்து புலனாய்வுத்துறையினர் எனக்கு பின்னால் திரிந்துள்ளனர் என்பதைக் கேட்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல புலனாய்வுத் துறையின் அறிக்கை அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக விசேட விசாரணைகளை நடத்தியாக வேண்டும்.

கேள்வி: அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறுகையில், அதில் உங்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால்?

பதில்: நாட்டிற்கு மீள் கட்டமைப் பொன்று அவசியம். வெறுமனே தலைகளை மாற்றுவதால் நடக்கப் போவது ஒன்றுமில்லை. முறையான கொள்கையை உருவாக்காது இந்த அரசாங்கத்தில் எந்த பதவிகளில் இருந்தும் பயனில்லை. மக்கள் படும் வேதனைக்கு தீர்வு வழங்க வேண்டும்.

அரசாங்கத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும் இத்தகைய பிரச்சினைகளை நான் பேசுவேன். மேலும் பதவிகளுக்கான அழைப்பு வந்தாலும் அவை குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.

கேள்வி : எதிர்காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கும் நோக்கம் உள்ளதா?

பதில்: இந்த கேள்விக்கு என்னிடத்தில் இப்போது பதில் இல்லை, அவ்வளவு தூரம் நான் சிந்திக்கவும் இல்லை, எனது இத்தனை கால அரசியல் பயணத்தில் தலைவர்களை உருவாக்கும் இடத்தில் இருந்துள்ளேன். அரசாங்கத்தை பலப்படுத்தும் இடத்தில் எனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன். 2004 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய வேளையில் நாமே அவருடன் இருந்தோம்.

எமது தரப்பில் இருந்தவர்களே வேறு சிலரின் பெயர்களை முன் மொழிந்தனர். அவ்வாறு இருந்தும் நாமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றியை ஈட்டிக்கொடுத்தோம். அவ்வாறு எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை, தியாகங்களை ஆகவே சகலரும் மறந்து விட்டனர். எம்மை ஓரங்கட்டி விட்டனர். தகுதியான இடத்தில் தகுதியான நபர்கள் இல்லாதமையே அரசாங்கம் நெருக்கடிகளை சந்திக்கக் காரணமாகும். அவ்வாறான இடத்தில் என்னால் மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட முடியாது.

கேள்வி : பொது வேட்பாளராக களமிறக்க உங்களுக்கு அழைப்பு வந்தால் ?

பதில்: அது குறித்து இன்னமும் நான் சிந்திக்கவில்லை, காலம் அதற்குப் பதில் கூறும்.

நேர்காணல் : ஆர்.யசி (வீரகேசரி 09/01/2022)

தற்போதைய அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. மாற்றத்தை நோக்கிய அரசியல் கலாசாரம் உருவாகிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம். புரட்சிக்கான ஆரம்பம் தெளிவாகத் தெரிகிறது. அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க நாமும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழ கங்கள் மற்றும் தொலைக்கல்வி இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பொது ஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி முழுமையாக

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter