உலமா சபை கேள்வி; சட்டத்தரணிகளுடன் விரிவாக ஆராய்வதாகவும் தெரிவிப்பு
காத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவியின் மூலம் புதிதாக பிரச்சினையொன்றை உருவாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, 42 வருடங்கள் பிரச்சினைகள் எதுவுமின்றி அமைதியாக இருந்தவர் திடீரென விடயத்தை பூதாகரமாக்குவதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உலமா சபை 1979 ஆம் ஆண்டு வெளியிட்டதாகக் கூறப்படும் பத்வா தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் கேட்டபோதே உலமா சபை இவ்வாறு பதிலளித்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இவ் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
காத்தான்குடியைச் சேர்ந்த சூபி முஸ்லிம் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துல் ரஊப் (மிஸ்பாஹி) இஸ்லாத்தில் குறிப்பிடாத கருத் தொன்றினை குறிப்பிட்டதற்காகவே அப்போதைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அக் கருத்துக்கு எதிராக புத்தகமொன் றினை வெளியிட்டு அவரது கருத்து குறித்து தெளிவுபடுத்தியது. ‘ஏகத் துவ கொள்கையில் ஊடுருவல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழ கத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நடந்து 42 வருடங்களுக்கு பின்னர் மௌலவி அப்துல் ரஊப் தற்போது தனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மௌலவி அப்துல் ரஊப் அன்று 42 வருடங்களுக்கு முன்பு ‘அல்லாஹ்தான் படைப்புகளின் உருவத்தில் வெளியாகி இருக்கிறான்’ என்ற கருத்தினை வெளியிட்டதையடுத்து அக்கருத்துக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நிலைப்பாட்டை புத்தகமாக வெளியிட்டது. ‘எல்லாம் அவனே’ என்ற கருத்து இஸ்லாத்தில் இல்லை. எவராவது அப்படிக் கூறுவார்களேயானால் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெறியேறிச் சென்றவர்களாவர் என்று அப்புத்தகத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட புத்தகத்தில் அக்காலத்தில் இருந்த மூத்த சூபி உலமாக்களே இந்த நிலைப்பாட்டை எழுதியிருக்கிறார்கள். அவர்களில் உஸ்தாத் அப்துல் சமது, உஸ்தாத் அஜ்வாத் என்போர் மௌலவி அப்துல் ரஊபின் ஆசிரியர்கள் (உஸ்தாத்கள்) ஆவார்கள். இவர்கள் குறிப்பிட்ட கருத்துகள் அடங்கிய புத்தகத்தை அங்கீகாரத்துக்காக எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை அஸ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்கள், அங்கீகரித்தார்கள்.
இப்புத்தகத்தை தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவின் உலமா சபைகளும் அங்கீகரித்துள்ளன. அன்று சூபி உலமாக்களால் தெரிவிக்கப்பட் டுள்ள கருத்துகளே இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
மௌலவி அப்துல் ரஊப் அன்று வெளியிட்டுள்ள இக்கருத் தினை இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமல்ல உலக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இவ்விவகாரம் தொடர்பில் உலமா சபையின் உயர்பீடம் அவசரமாகக் கூடி ஆராய்ந்து வருகிறது. சட்டத்தரணிகளையும் சந்தித்து இது குறித்து ஆராயவுள்ளது. உலமா சபையின் நிலைப்பாடு விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி 6/2/2021