உலையை அடுப்பில் வைத்துவிட்டு, சுண்டில் அறிசியை எடுக்கும் வீட்டுத்தலைவி, அதில் ஒரு கைப்பிடியை எடுத்து, பிறிதொரு பாத்திரத்தில் போட்டு வைப்பாள் என, முன்னோர்கள் இப்போதும் சொல்லிக்காட்டி, சிக்கனத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என வழிகாட்டுவர். அரிசியை மட்டுமன்றி தானியங்களிலும் இவ்வாறே சேமிப்பர்.
மாதத்தின் இறுதியில் ஏற்படும் தட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கும், உணவுகள் வீணாகிப்போவதை கட்டுப்படுத்தவும், அடுத்த சம்பளம் வரையிலும், முழுமாதமும் நிறைவாக உண்ணவேண்டுமென்ற நல்ல எண்ணத்திலும், ஒவ்வொரு வேளைகளிலும் சிறுகச் சிறுக சேமிப்பர்,
எகிறி நிற்கு.ம் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால், எவற்றைக் கொள்வனவு செய்வது, எப்படிச் சமைப்பது என்பது தொடர்பில், சமைத்துப் பழகிய, குடும்பத் தலைவிகளே குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.
வீட்டுத்தோட்டத்தில் கிடைக்கும் ஏதாவது காய்கறிகளை வைத்து, சமைத்துச் சாப்பிடுவோமென நினைத்தாலும், கடும்மழை, கடும்வெயில் போன்றவற்றால் வீட்டுத்தோட்டங்கள் பலவும் அழிந்துவிட்டன. அடுத்த வீட்டின் கதவைத் தட்டுவதற்குக் கூட, பலரும் வெட்கமடைந்து நிற்கின்றனர். நம்ப வீட்டிலேயே இல்லை; அந்த வீட்டில் எப்படி இருக்கும்’ என நினைத்துக் கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதற்கிடையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதிரடியான சில அறிவிப்புகளை விடுத்துவருகின்றார். இறக்குமதியைத் தொடர்ந்தும் கட்டுப்படுத் துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்களை இறக்குமதிச் செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆளும் கட்சியின் எம். பியான விஜயதாஸ ராஜபக்ஷ, இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் ஏற்படுமென எச்சரித் துள்ளார். இதனையே, எதிரணியைச் சேர்ந்த எவராவது கூறியிருப்பார்களாயின், அரசியல் இலாப நோக்கத்துடன் சொல்கிறார் என, ஆளும் கட்சியினர் கொக்கரித்துக் கூப்பாடு போட்டிருப்பர். ஆனால், ஆளும் கட்சியிலிருக்கும் ஒருவரே கூறியிருப்பதால், எதிர்விமர்சனங்கள் குறைந்துள்ளன.
ஓரிரு மாதங்களுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2022 ஜனவரி மாதத்தின் இறுதியில் ஐக்கிய அமெரிக்க டொலருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், நாட்டுக்குள் பாரிய பொருளாதார நெருக்கடியும் உணவுத்தட்டுப்பாடும் ஏற்படும் என ஆரூடம் கூறியிருந்தார். ஆக, அத்தியாவசியப் பொருட்களை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைத்திருக்க முடியாது. ஆனால், வீணாக்காமல் இருக்கலாம்.
ஒவ்வொருவரின் மனங்களிலும், இவ்வாறான சிக்கன சிந்தனை உதிக்க வேண்டும். பொருட்களின் விலைகள், அதிகரிக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் தராதரம் குறைந்துவிட்டதை காஸ் மூலமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன், நிறைகளும் குறைந்துள்ளன. 450 கிராம் நிறையைக் கொண்டி ருக்க வேண்டிய பாண், 290 கிராமில் விற்பனை செய்யப்படுகின்றது. அதுவும், பார்க்கும் போது, 450 கிராமைப் போல கண்களுக்குத் தென்படும் வகையில் உப்பிக்கொண்டிுக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் சிக்கனமல்ல; ஏமாற்று நடவடிக்கையாகும். ஆகையால், எதிர்வுகூறலைக் கவனத்திலெடுத்து சிக்கனமாக வாழப்பழகிக்கொள்வதே உசிதமானதாகும்.
தமிழ்மிரர் 15/12/2021