சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை நாடினால் நாட்டில் எரிபொருள், மின்சாரம், நீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்க நேரிடும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பங்கேற்பில் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிதி அமைச்சர் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி அமைப்புகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை மிதக்கவிடுவது மற்றும் வரி சதவீதங்களை உயர்த்துவது போன்ற விடயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன.
ரூபாயின் பெறுமதியை மிதக்கவிடுவதனூடாக அதன் மதிப்பு 15 சதவீதத்தால் வீழ்ச்சியடையக்கூடும், அதாவது தற்போது சந்தையில் விற்பனையாகும் மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின் விலை ரூ. 280 இலிருந்து ரூ. 400 ஆக உயர்வடையக்கூடும்.
அத்துடன், டீசல் லீற்றர் ஒன்றின் ஆகக்குறைந்த விலையை ரூ. 25 இனால் அதிகரிக்க வேண்டி ஏற்படும். தற்போது 8 சதவீதமாக காணப்படும் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க நேரிடும் என்பதுடன், மின்சார அலகொன்றுக்காக அறவிடப்படும் ரூ. 16 ஐ ரூ. 25 வரை உயர்த்த நேரிடும் என்பதுடன், நீர் அலகொன்றுக்கான கட்டணத்தை 10 ரூபாயினால் அதிகரிக்க நேரிடும் என சுட்டிக்காட்டியிருந்தார். -தமிழ் மிற்றோர்– (2022-01-05)