நிறைவேற்று அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு, ஆண்ணொருவரை பெண்ணாகவும். பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாது. ஏனைய, அத்தனை அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரத்துக்குள் இருக்கிறதென, அரசியலமைப்பை பற்றி வியாக்கியானம் செய்தோர் ஏலவே கூறியிருக்கின்றனர்.
அவ்வப்போது, அந்த அதிகாரங்கள் பாராளுமன்றத்தின் ஊடாக கூட்டி அல்லது குறைக்கப்பட்டுள்ளன. ஆட்சியதிகாரத்தை தசாப்த காலத்துக்கு தக்கவைத்து கொள்ளும் வகையிலேயே, அரசியலமைப்பில் ஒருசில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள், தங்களுடைய தேர்தல் மேடைகளில், “நான், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பேன்” என வாய்கூசாமல் சொல்லியிருக்கின்றனர்.
வெற்றியீட்டி, ஆசனத்தில் அமர்ந்ததன் பின்னர், அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டுள்ளனரே தவிர, குறைத்ததாக இல்லை. பாராளுமன்றத்துக்கான அதிகாரங்களில் கூட, கையை வைக்குமளவுக்கு நிறைவேற்று அதிகார முறைமையில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான அதிகாரங்கள் தம் வசமிருந்தாலும், துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் சிலர் பின்னடித் துள்ளனர். உதாரணமாகக் கூறுவோமாயின், “நாங்கள் நினைத்த விலையிலேயே தின்பண்டங்களை விற்போம்” என, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு விடுத்த போது, நிறைவேற்று அதிகாரம் உட்பட விடயதானத்துக்குப் பொறுப்பானவர்கள் மெளனம் காத்தனர்.
நாட்டை நிர்வகிப்பதில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திராணியற்றவராய் இருக்கின்றார். தன்னை ஜனாதிபதியாக்கிய 89 இலட்ச மக்கள், அவர்களின் குடும்பத்தினர், எதிர்த்தரப்புக்கு வாக்களித்த மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார். “சேர் பெயில்” “ இரண்டு வருடங்கள் பெயிலான சேருக்கு, இன்னும் மூன்று வருடங்களைத் தருவதற்கு மக்கள் தயாரில்லை” உள்ளிட்ட பல விமர்சனங்கள் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒருவர், திராணியற்றவராக இருக்கமுடியாது. ஆனால், பாராளுமன்றத்தில் அரசாங்கம் பலத்தை இழந்துவிடுமாயின், அதிரடி தீர்மானங்களை எடுக்கும் முன்னர், ஓரிரு தடவைகள் சிந்தித்தே ஆகவேண்டும். ஆனால், சிற்சில முடிவுகளை எடுக்கும் போது, மக்களுக்கு சார்பாளதாகவும் இயைந்து போகக்கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும்.
இவ்வாறான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் நின்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “எடுக்க வேண்டிய எந்தக் கடினமான அல்லது துணிச்சலான முடிவுகளை எடுக்க, நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். துணிச்சலான முடிவுகள் வரவேற்கத்தக்கன. ஆனால், அந்த முடிவுகள் மக்களின் வயிற்றில் அடிப்பதாய் இருந்துவிடக்கூடாது.
விட்டுப்பிடிக்க வேண்டிய இடத்தில் விட்டுப்பிடித்து, இறுக்கவேண்டி ய இடத்தில் இறுக்க வேண்டும். மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் விலைவாசி அதிகரிப்பு தொடர்பில், ஆகக்கூடிய கவனத்தை செலுத்தி, கடுமையான கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கும் மீறினால், இதுதான் நடக்குமென்ற படிப்பினையை காண்பிக்கவும் வேண்டும். இல்லையே நிறைவேற்று அதிகாரத்துக்கு பொருள் விளங்காமலே போய்விடும்.
தமிழ்மிரர் 4/1/2021